தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ – தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் !

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனம் இன்று(26) வெளியிடப்பட்டது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது.

 

ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் இந்த கொள்கைப் பிரகடனத்தில் சமத்துவம், ஒப்புரவு, சட்டவாட்சி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஜனநாயக பண்புகள், பொருளாதார ஜனநாயகம், மக்கள் சார்ந்த ஆட்சி முறை, அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் சமூக நீதி, விஞ்ஞான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

நாட்டில் ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதற்கான கொள்கையொன்றை வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

நாட்டிற்கு தேவையான அனைத்து மக்களுக்கும் சமத்துவமான புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்றையும் கொண்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் 25 அமைச்சர்கள் மாத்திரமே பதவி வகிப்பார்கள் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் வாகனங்களுக்கான உரிமம் இரத்து செய்யப்படும் என கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மொழி உரிமை சமத்துவமாக பேணப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகளுக்காக விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

படிப்படியாக நாட்டை செல்வந்த நாடாக மாற்றியமைப்பதற்கும் நாட்டு மக்களுக்கு அழகான வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் தாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

கொள்கைப் பிரகடன வௌியீட்டு நிகழ்வில் உரை நிகழ்த்திய அனுர குமார திசாநாயக்க, சுற்றுலாத்துறை, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

பொருளாதார கொள்கை மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பில் வெவ்வேறு தரப்பினரே அதிகமாக பேசியதாகவும் அவ்வாறானவர்களின் திரிபுப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கு பதிலடியாக கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளதாக அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அனுர குமார திசாநாயக்க, மீண்டும் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

 

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

சிறுபான்மையினர், தமது தாய் மொழியிலேயே தமது பணிகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையை அமுல்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் மொழியிலேயே அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழிகளில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

 

அத்துடன் மதங்களுக்கான சுதந்திரத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

 

சமத்துவத்தை ஏற்படுத்துவதில் அரசியலே முக்கிய பங்கு வகிப்பதாக அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

 

நாட்டை கட்டியெழுப்புவதற்கு வௌிநாட்டு கொள்கை அவசியமாகும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

“எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் அனுர உறுதி !

“எமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

 

குறித்த சந்திப்பினையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அநுர மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அநுரகுமாரதிசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை சந்தித்திருந்தோம். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடினோம்.

 

நாட்டில் இன்று பலர் மதங்களுக்கிடையில் முறுகல் ஏற்படும் வகையில் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இவ்வாறு விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் மற்றும் பௌத்த மக்கள் மத்தியிலேயே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

சரித ஹேரத் திஸ்ஸ அத்தநாயக்க ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். அதாவது தேர்தல் பிரசார்ஙகளின் போது தேசிய மக்கள் சக்தியை இலக்கு வைத்து உண்மைக்கு புறம்பான விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மதநல்லிணக்கம் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும் .இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நாம் இடமளிக்கமாட்டோம். நாட்டில் அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.இவை அரசியல் லாபம் கருதி முன்னெடுக்கப்படும் செயலாகும்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை எங்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும் – அனுரகுமாரதிசநாயக்க

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என கட்சியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு மாற்றம் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்

வேட்புமனுதாக்கல் செய்த பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகாலங்களில் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும் மக்கள் பல வருடங்களாக துயரங்களை எதிர்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எங்களால் இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும்,இந்த தேர்தலை மக்களையும் துன்பத்திலிருந்து மீட்பதற்காக காப்பாற்றுவதற்காக எங்களால் பயன்படுத்த முடியும்,தேசிய மக்கள் சக்தியால் அதன் வேட்பாளரால் மாத்திரம் இதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார் – அனுர குமார திசாநாயக்க

நெருக்கடியில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கும் சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க, வேட்புமனு பத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் நாம் அமோக வெற்றியீட்டுவோம். நாடு மிகவும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.

எமது ஆட்சியில் நாம் மிகத்தெளிவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் குறைவான காலப்பகுதியே உள்ளது.

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாடு வளமிக்க நாடாக அபிவிருத்தி அடையும் என்பதுடன் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படும்.

நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.

ஏனென்றால், இப்பொழுது ஏனைய அரசியல் கட்சிகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்துள்ளதுதேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம்.

நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இயன்றவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.

இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. பலம்பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். – கிழக்கில் அனுர குமார திசாநாயக்க

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தகர்களுக்கும் இடையிலான  கலந்துரையாடல் கூட்டம் நேற்று (12) மாலை காரைதீவில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்டத்தின்  பெருமளவிலான தமிழ் பேசும் கரையோர வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் பல வர்த்தகர்கள் இங்கு  நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில்  முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றிய போது,

எங்களது நாடானது பொருளாதாரத்தில் ஒதுக்கப்பட்ட வீழ்ச்சி அடைந்த நாடாக இருக்கின்றது. வாங்கிய கடனை செலுத்த முடியாத ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம். தொழில் வல்லுனர்களுக்கு இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் ஏன் இனவாதத்தை கொண்டு வருகிறார்கள் ? எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதவிடத்து, பிள்ளைகளுக்கு தொழில் ஒன்றை வழங்க முடியாதவிடத்து,  மீனவ சமூகத்தினுடைய பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் அவர்கள் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவார்கள். இந்த இதனவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து சிங்கள மக்களுக்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று சொல்வார்கள்.

ஆகையினால் இந்த நாட்டை சிறப்பாக கட்டி எழுப்புவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை யாருக்கு உருவாக்கலாம். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒற்றுமை தேவை இல்லையா ..?

தேசிய ஒற்றுமை தேவை இல்லையா ? அதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். அது தேவை இல்லை என்றால் வேறு கட்சிகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள். வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறைய பேர் இங்கே இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் மக்களை சந்திக்கிறீர்கள். கலந்துரையாடு கின்றீர்கள். நீங்கள் சொல்வதை மக்கள் கேட்பார்கள். இன்னும் இரண்டரை மாதங்கள் தான் இருக்கின்றது. எல்லோரும் சேர்ந்து கதைப்போம். தெற்கைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் மாற்றம் உருவாக வேண்டும் என்று தெரிவித்தார்.

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” – அனுரகுமார திசாநாயக்க

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பெயரை வைத்தே சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராகயிருக்கின்றார். அவரது தந்தை ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இல்லாமலிருந்தால் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினராக கூட வருவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று (27) பிற்பகல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ச. அ. டெஸ்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார்.
கல்வி முடிந்தது! ஆசிரிய மாணவர்களின் உரிமையை வென்றெடுப்பது எப்படி எனும் தலைப்பில் இம் மாநாடினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிர்வாகம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புரைகளும் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க,
இந்த நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர். அந்த மாற்றம் எங்கு ஏற்படவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இன்று ரணிலுக்கு மாற்றத்திற்காக சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று ரணிலுக்கான ஆதரவினை இன்னும் மொட்டுக்கட்சி தெரிவிக்கவில்லை. இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென மகிந்த ராஜபக்ஸ சொல்கின்றார். பசீல் ராஜபக்ஸவிடம் கேட்டாலும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென்கின்றார்.
தீர்மானம் எடுத்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் மகிந்தானந்த அலுத்கமகே. இவர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறியிருக்கின்றார். இவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். ரொகான் ரத்வத்தை ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றார். இவர்தான் சிறைச்சாலை அமைச்சராகயிருந்த போது சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டோலைக்காட்டி அச்சுறுத்தி மண்டியிடவைத்து அவர்களின் தலைகளில் துப்பாக்கியை வைத்தார். அவர் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றாராம். அதேபோன்று கப்பம் வாங்கி உயர்நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க இன்று ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றார்.
இதேபோன்று மட்டக்களப்பிலும் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என பிள்ளையான் அறிவித்துள்ளார்.மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்பாக மாற்றமான தலைமைத்துவம் ஒன்று தேவையாகும்.
பல தசாப்தமாக இந்த நாட்டினை ஆட்சி செய்து, பல ஆண்டுகளாக அமைச்சர்களாகயிருந்து பல ஆண்டுகளாக பிரதமராகயிருந்தவர்கள் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களது மாற்றம் என்னவாகும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் எதிர்பார்ப்பு ஒரு மாற்றமாகயிருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவினால் அந்த மாற்றத்தினை கொண்டு வரமுடியாது.
அதேபோன்று சஜித் பிரேமதாசவினாலும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தினை வழங்கமுடியாது.சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனாக இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்.அவர் ஒரு கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருப்பதற்கு அவரிடம் உள்ள ஒரேயொரு தகுதி அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்தது மாத்திரமேயாகும்.
அவரது தகப்பன் ஜனாதிபதியாக இல்லையென்றால் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக வரக்கூடிய தகுதியும் அவரிடம் இல்லை. அவரைப்பற்றி சரத்பொன்சேகாவே பேசுகின்றார். அவர் ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகாவினை மேடையில் வைத்துக்கொண்டு திருடர்களை பிடிக்கப்போவதாக கூறினார்.ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவையே கசினோ விடயத்தில் பிடித்திருந்தார்.
மாற்றம் ஒன்று வேண்டுமென்றால் அந்த மாற்றத்தினை செய்யக்கூடியவர்கள் யார் என்றால் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமேயாகும். இந்த நாட்டு மக்கள் மீண்டும் அந்த மிகமோசமான பாதையில் செல்லமாட்டர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இன்று ஆசிரியர்கள் தமக்காக வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட சம்பள அதிகரிப்பையே கோருகின்றனர். ரணில் விக்ரசிங்கவுக்கு 865 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடானது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாத ஒதுக்கீடாகும்.வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது என கூறிவிட்டு தனக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுகின்றார் ரணில் விக்ரமசிங்க.
ஆசிரியர்கள் சாதாரண ஒரு போராட்டத்தினையே முன்னெடுத்தனர்.தமக்கான கொடுப்பனவுக்காகவே அவர்கள் போராட்டம் செய்தார்கள். ஆனால் ரணில் அவர்கள் கண்ணீர்ப்புகை, தடியடி, குண்டாந்தடி பிரயோகம் செய்து அவர்களது போராட்டத்திற்கு பதிலளித்தார்.அவருக்கு அந்த பலம் இருந்ததனால் ஆசிரியுர்கள் மீது இந்த தாக்குதலை முன்னெடுத்தார். அவர் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும் இன்னும் மூன்று மாதத்தில் ரணிலிடம் உள்ள அதிகாரம் மக்களிடம் வரும்.
இந்த நாட்டில் இனவாதம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது. வடக்கில் ஒரு அரசியல் தெற்கில் ஒரு அரசியல் கிழக்கில் ஒரு அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நாட்டினை ஐக்கிய படுத்துவதற்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் கோத்தபாயவின் வெற்றியானது முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியலிலேயே கிடைத்தது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை வேறுபடுத்துகின்ற அரசியலுக்கு பதிலாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற அரசியலே செய்யவேண்டியுள்ளது. அந்த மாற்றத்தினையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்.இந்நாட்டில் இனவாத ரீதியான அரசியலை நாங்கள் முறியடிப்போம்.
இந்த நாட்டிற்கு புதிய அரசியல் ஒன்று தேவையாகும்.மக்கள் பணத்தை சூறையாடுவது முற்றாக நிறுத்தப்படும்,மக்கள் பணத்தை வீணடிக்காத அரசியல் முன்னெடுக்கப்படும், நீதித்துறைக்கு அடிபணியும் அரசியல் அந்த மாற்றத்தினையே நாங்கள் கொண்டுவருவோம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒன்று உருவானால். தற்போதுள்ள அரசியலானது குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியலாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கேகாலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்தானந்த அலுத்கமகே ரணிலை சிறையில் அடைப்போம் என்று கூறினார். ஆனால் நேற்று கூறுகின்றார் ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு வழங்குவோம் என்று.எவ்வாறு இவர்களால் மட்டும் முடிகின்றது. ரணில் மத்திய வங்கினை கொள்ளையிட்டுள்ளார் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மாற்றத்திற்காக ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர்.
இந்த நாட்டில் மக்கள் அமைதியான முறையில் தாங்கள் விரும்பும் ஒருவரை ஆதரிக்கும் உரிமையிருக்கின்றது. இன்று மட்டக்களப்பில் அச்சுறுத்தும் ஒரு அரசியலே இருக்கின்றது. ஆசிரியர்கள் கதைப்பதற்கு பயம், அரச உத்தியோகத்தர்களுக்கு பயம். தாங்கள் விரும்பிய ஒரு அரசியலை செய்வதற்கு நாட்டு மக்களுக்கு உரிமையிருக்கின்றது. பிள்ளையானுக்கு அச்சப்படும் நிலைமையே இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களும் களையப்படும்.ஒரு கூட்டம் நீதிக்கு சட்டத்திற்கு முரணாக அரசியல்செய்வதை அனுமதிக்கமுடியாது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்கமுடியாது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவோம். அதுஅவசியமான ஒன்றாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் உரிமையினை பாதுகாக்க முடியாது.
கடந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது. அது தொடர்பில் ஆராய்ந்துசென்றால் இந்த ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயங்கள் வெளியேவந்தது. சட்டரீதியாகவுள்ள இராணுவம் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும். வேறு யாரும் ஆயுதங்களை வைத்திருக்கமுடியாது. அவை களையப்படவேண்டும் என தெரிவித்தார்

ஊழல்வாதிகளால் சீரழியும் வடக்கின் கல்வித்துறை – பின்னணியில் ஆளுநரா என தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

வடக்கு மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை  இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்படி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை வடக்கில் காணப்படுவது வடக்கு கல்வியை அழித்துவிடும் செயற்பாடாகவே பார்க்கிறேன்.

ஆசிரிய மற்றும் அதிபர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் இடம்பெறுகின்ற நிலையில் இடமாற்ற சபையின் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.

வன்னி ஒட்டுசுட்டான் பாடசாலையில் பாடசாலை வளங்கள் ஊழல் செய்யப்பட்ட நிலையில், குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நிதி நிர்வாக விடயங்களில் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படாமல் உயர் பதவி ஒன்றில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை வடக்கு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் காணப்படும் நான்கு அமைச்சுகளில் தகுதியான செயலாளர்கள் இல்லாத காரணத்தினால் நிர்வாக ரீதியான முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் காணப்படுகிறது.

தகுதியானவர்களை நியமிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களை ஒதுக்கி தமக்குத் தேவையான அலிபாபா திருடர்களை பதவியில் வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

வடக்கு ஆளுநர் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதை கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது அவரும் இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளாரா என சந்தேகம் எழுகிறது.

ஆகவே, வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்து வருகின்ற நிலையில் வட மாகாண ஆளுநர் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அநுர குமார திசாநாயக்கவுக்கு சுவீடனில் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு !

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார்.
இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுரகுமார – சஜித்பிரேமதாஸ இடையே விவாதத்தை நடத்துவதற்கு நாம் தயார் என சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவிப்பு !

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விவாதத்தை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடத்தவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க விருப்பம் தெரிவித்து அக்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் இடையில் நடைபெறவுள்ள விவாதத்தை சட்டக்கல்லூரியில் நடத்துமாறு தமது சங்கம் இரு கட்சிகளின் தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாக இலங்கை சட்டக்கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நவோத் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கும் ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விவாதத்தின் ஊடாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு முன்வைக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட ஜே.வி.பியினருக்கு கரிசனை அதிகம். – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம் எனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

யாழ். ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழர்களின் தேசிய பிரச்சனை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை உண்டு. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம்.

 

தமிழ் மக்களின் பிரச்சனையை இனம் கண்டுள்ளோம். அதற்கான தீர்வினை பரிந்துரை செய்யவுள்ளோம். தீர்வு என்ன என்பதை மிக விரைவில் தெரியப்படுத்துவோம்.

 

தற்போது அது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அடுத்து தமிழ் கட்சிகளோடு பேசவுள்ளோம்.

 

தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய சுய விருப்பம். ஆனால் பொதுவான நிலைப்பாடு மாற்றம் வேண்டும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

 

கடந்த 75 ஆண்டுகளாக நீலம்,பச்சை என மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள். எனவே மாற்றம் வேண்டும் என பெரும்பாலான மக்கள் சிந்திக்கின்றனர்.

 

அநுர தான் அடுத்தது எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மாற்றத்தையே ஒட்டு மொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளர் பேசுவது மீண்டும் நீலம் , பச்சையைத் தான் வீறு கொள்ள வைக்கும். ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறோம் என்றார்.

 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போது, எமது மாநாட்டிற்குக் கட்சி பேதமின்றி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.

 

யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாநாட்டிற்கு வருகை தந்தார். வந்தவரை நாம் வரவேற்றோம் எனத் தெரிவித்தார்.