போதைப்பொருள் பாவனை

போதைப்பொருள் பாவனை

14,15 வயது மாணவர்களிடையே பரவும் புதிய வகை போதைப்பொருள் பாவனை !

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை, புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை யூட்டும் ‘ரொபி’ பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அமில சந்திரசிறி மற்றும் ருஹூணு பல் கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் விரிவுரையாளர் இஷார வன்னியாராச்சி உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

தென் மாகாணத்தில் பாட சாலை மாணவர்களிடையே இதுவரை ஐஸ், ஹெரோயின் போன்ற கடுமையான போதைப் பொருள் பாவனை பதிவாகவில்லை.

எனினும் பாடசாலைகளில் தரம் 9ம்,10ம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களிடையே இவ்வாறான போதைக்கு பலியாகும் அபாயம் அதிகம் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள தூரமும், பிள்ளைகள் மீது கவனம் செலுத்தாமல் இருப்பதுமே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தென் கடற்பரப்பில் 179 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் ஏழு நாட்கள் விசாரணை!

தென் கடற்பரப்பில் 179 கிலோகிராம் ஹெரோயினுடன் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.

தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் சுமார் 179 கிலோ 654 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சனிக்கிழமை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், சுமார் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) ஹெராயினை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு 132 கடல் மைல் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்திரரக்ஷா’ என்ற கப்பலால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போதைப்பொருள் தொகையும் சந்தேகநபர்களும் திங்கட்கிழமை (17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 3,593 மில்லியன்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நகுலுகமுவ, குடாவெல்ல, நெடோல்பிட்டிய மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெளிநாடுகளில் இருந்து கையாளப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 16 மில்லியன் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகள் மீட்பு.!

மன்னார் – இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 லட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபா என தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் பொருட்கள் யாவும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டதுடன் இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

போதைபொருள் பாவித்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் – உறுதிப்படுத்தியது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை !

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் றோட்டுப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டுப் பின்னர் பல்கலைக்கழக அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில மாணவர்களை உளவளத் துணை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும்

“இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களின் சிபார்சின் அடிப்படையில், போதைக்கு அடிமையாகி இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் மாணவர்களைத் தேவையான உளவளத் துணைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களும் நேரடியாக அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் எடுக்கும் எந்தச் சட்ட நடவடிக்கைளிலும் பல்கலைக்கழகம் குறுக்கிடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால், அவர்கள் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும், மாணவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மாணவர்கள் இன்று நண்பகல் பரீட்சை முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் மாத்திரமே போதை மாத்திரை உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரங்கள், இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 10 பேர் கைது !

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு மற்றும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மாவட்ட குற்றதடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருவமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“போதைப்பொருள் தொடர்பாக சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.” – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தண்டிப்பது தொடர்பான சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பழிவாங்கும் காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இது தொடர்பில் கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்படும். போதைப்பொருள் தொடர்பான சில மாதிரிகள் எப்போதாவது தவறாக இருக்கலாம்.

ஆனால், சில நேரங்களில், பொலிஸ்துறை அனுப்பிய கிட்டத்தட்ட 20 முதல் 30 சதவீதமான மாதிரிகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. போதைப்பொருள் அல்லாத பொருட்கள்கூட போதைப்பொருள் மாதிரியாக எடுக்க அனுப்பப்படுகின்றன.

எனினும் இந்த பொருட்களுடன் சந்தேகத்துக்குரியவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றபோது அவர் விளக்கமறியலுக்கு அனுப்பப்படுகிறார்.

சில மாதங்களுக்கு பின்னரே அவர் வைத்திருந்தது போதைப்பொருளல்ல என்ற சோதனை முடிவு கிடைக்கிறது. இதிலிருந்து சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிகிறது. எனவே இந்த சட்டத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்’ என கூறினார்.

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுக்க அதிக கவனம் செலுத்துங்கள் – எஸ்.பி. திஸாநாயக்க

சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது மற்றும் பெருந்தோட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுவர்களை இலக்கு வைத்து சந்தையில் ஒரு வகையான பாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அது போதைப்பொருள் என குறிப்பிடப்படாவிட்டாலும், சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடியது என பொலிஸ் அதிகாரியொருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“கடத்தலில் பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் பங்கு – அதுவே போதைப்பொருளை கட்டுப்படுத்தமுடியாமைக்கு காரணம் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்த்தியை பாதிக்கின்ற விடயம். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற கட்டாயதேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூன்று வகையாக பிரித்து பார்க்கலாம்.

போதைப்பொருள் வருவதை தடுப்பது முக்கிய செயற்பாடு. அரச அதிகாரிகளோடு பொலிசாரோடு இணைந்து இதை செய்வதில் பாரிய இடர்பாடுகள் காணப்படுகிறது.

காரணம் அதிகாரிகள், பொலிசார், படைத் தரப்பினருக்கு போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

இதற்கான பல தகவல்கள் எங்களிடம் இருக்கிறது .இதனை தடுப்பதற்காக இதனை செய்பவர்களை காட்டிகொடுக்கின்ற போதேல்லாம் அவர்களோடு பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து செயற்படுவது அம்பலமாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்தினால் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும்

இதற்கான செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் நாம் பாடசாலை ரீதியாக இதனை ஆரம்பிக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோதனைகளின் போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களே மீண்டும் மக்கள் கைகளுக்கு செல்கிறது – சட்டநடவடிக்கை அவசியம் என்கிறார் நீதியமைச்சர் !

போதைப்பொருள் கடத்தல் குற்றம் – குவைத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை !

குவைத் இராச்சியத்தில் பெண்கள் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய பெண் ஒருவர், குவைத் பெண் ஒருவர், மூன்று குவைட் ஆண்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் அந்நாட்டில் கூட்டாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.