மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

தனிப்பட்ட ஊழியர்களுக்காக 1480 மில்லியன் ரூபாய்க்கு மேல் அள்ளிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதிகள் – அதிலும் மைத்திரிபால சிறீசேனா முன்னிலையில் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

அந்தத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 578 தனியார் ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயிரத்து 317 தனிப்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன், 2015 முதல் 2019 வரை 850 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதவியேற்ற இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக செலவில் தனியார் ஊழியர்களை பராமரிப்பதில் முன்னோடிகளை மிஞ்சியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றுக் கொள்கை மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே 2019ஆம் ஆண்டு உரிய தகவல்களை கோரியிருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி செயலகத்தின் தீர்மானத்திற்கு எதிரான மேன்முறையீட்டை பரிசீலித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், 2022 நவம்பர் 14 ஆம் திகதி இது தொடர்பான தகவல்களை வெளியிட அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாம்பலில் இருந்து எழுவோம் என கூறும் மகிந்தவிற்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் – ஜே.சி.அலவத்துவல

ராஜபக்சவின் முயற்சிக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

மக்களை நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்சக்களும் அவர்களது கும்பலும், அழுது அழுது சாம்பலில் இருந்து எழ முயற்சிக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே மீண்டும் ஒருமுறை இந்த பொய்யான தந்திரங்களுக்குள் மக்கள் சிக்கிவிடக் கூடாது என ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான உறுப்பினர்களின் வீட்டில் விசேட கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் ஜே.சி.அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த ஊழல் இயக்கம் மீண்டும் எழுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜே.சி.அலவத்துவல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை.” – மகிந்த ராஜபக்ச

“தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறை திருத்திக் கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.” என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பேசிய அவர்,

இலங்கையில் அமைதி நிலவுவதையும் இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் சகித்துக் கொள்ள முடியாத சிலர், கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கொவிட் பிரச்சினையை எதிர்கொண்டு, மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதார சவால் ஏற்பட்டது.

அதனை எதிர்கொள்கையில் பிரச்சினைகளும் ஏற்பட்டன. மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து – எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள்போல் சிலர் செயற்படுகின்றனர்.

சவால்களை ஏற்பதற்கு தைரியமின்றி, விமர்சனங்களை மட்டும் முன்வைத்துக்கொண்டு, சுமைகளை எம்மீது திணிக்கின்றனர். தவறுக்கு நாம் மட்டுமே பொறுப்பு என பந்தாடியும் எம்மை பந்தாடியும் வருகின்றனர்.

மறுபுறத்தில் சேறுபூசும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. தாங்கள் நல்லவர்கள் என காட்டிக் கொள்ள முற்படுபவர்களும் தவறுகளை இழைத்துள்ளனர். தவறு இடம்பெறுவது இயல்பு. அதனை ஏற்க வெட்கப்பட வேண்டியதில்லை. தவறை திருத்திக் கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பதுதான் வெட்கம்.

பொதுவேலைத்திட்டத்துக்கு அழைப்பு விடுத்தாலும் வருவதில்லை. ஆட்சிகள் மாறும்போது அரசக் கொள்கைகளும் மாறுவது சிக்கலுக்குரிய விடயமாகும். எனவே, பொது வேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றாக இணைந்து பயணிக்க முன்வரவேண்டும்” என தெரிவித்தார்.

ரணில் ஆரம்பத்தில் நம்மை பற்றி புறங்கூறினாலும் இன்று நல்வழிப்படுத்தப்பட்டுள்ளார் – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் தற்போது நல்வழிப்படுத்தப்பட்டுள்ளாரென கட்சியின் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன புறங்கூறி இருந்தாலும் கூட, தற்போது அவர் நல்லவர் எனக் கருதி அவரை ஏற்றுக் கொண்டிருப்பதாக களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல சவால்களை எதிர் நோக்குகிறது. அவற்றை வென்று வர எம்மிடம் போதுமான பலம் உள்ளது.

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை இலங்கை பொதுஜன பெரமுன முன்னெடுக்கும். பொது மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் கடமை.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள்” என்றார்

கொழும்பில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னால் மகிந்தவின் சூழ்ச்சி – அம்பலப்படுத்தினார் தயாசிறி ஜயசேகர !

மகிந்த ராஜபக்ச, தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்த கூறியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளார் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னர் இன்று உத்தேச அறிக்கை வெளியிடுவார் என்ற கருத்துத் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக, பதவி விலக வேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தம்மை பதவி விலகவேண்டாம என்று கூறும்போது, தாம் எவ்வாறு பதவி விலகமுடியும் என்பதை சுட்டிக்காட்டவே மகிந்த இந்த போராட்டத்தை நடத்துமாறு கூறியுள்ளதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் எரிபொருள் நெருக்கடி எதுவுமில்லை.” –  பிரதமர் மகிந்த

எரிபொருள் நெருக்கடி எதுவுமில்லை – மக்களை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளே பதற்றத்தை ஏற்படுத்தின என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளார். இந்த இலக்கை அடைவதற்கு அரசியல்வாதிகள் நான் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் முயற்சிகைள மேற்கொள்ளவேண்டும்.
சமீப நாட்களில் அதிகம் பேசப்படும் விடயம் எரிபொருள் நெருக்கடி ஆனால் உண்மையில் எரிபொருள் நெருக்கடி என்ற எதுவுமில்லை.
எரிபொருள் கையிருப்பு நான்கு நாட்களிற்கு மாத்திரம் நீடிக்கும் என்ற தவறாக வழிநடத்தும் அறிக்கையால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
எனது நிர்வாகத்தின் போது எரிபொருள் கையிருப்பு சிலவேளைகளில் ஒரு நாளைக்கு போதுமானதாக மாத்திரம் காணப்பட்டது. எனினும் எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அரசியலில் குறைந்த அனுபவம் உள்ளவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தின என குறிப்பிட்டுள்ள பிரதமர் இதன் காரணமாக மக்கள் நீண்டவரிசையில் எரிபொருளிற்காக காத்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்