மைத்திரிபால சிறிசேன

மைத்திரிபால சிறிசேன

குற்றத்தை நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு உடன் விலகுவேன். – மைத்திரிபால சிறீசேன காட்டம் !

நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டுவிலகுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மஹிந்தானந்த தெரிவித்த கருத்துக்குத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் ஜனாதிபதி ஒருவா் ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு அமைச்சா் ஒருவருக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும்  அவர் தெரி வித்துள்ளார்

“பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” – மைத்திரிபால சிறீசேன !

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாவல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக சேவையாளர் சங்கம் நாவல பிதேசத்தில் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பேராயரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே , “பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் , மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்ட மூலமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்து தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களையும் நாம் முன்னெடுக்கவில்லை என்றார்.

பேராயரின் கருத்து தொடர்பில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கும் தெரிவாகிவிட்டார். தேர்தல் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எனவே இதனை தவறாக புரிந்து கொள்ளுகின்றனர் என்றே நான் எண்ணுகின்றேன்.

அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் அவர் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இடமளிக்குமாறு தான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

“தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. ” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. ” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் -ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்று அமைச்சர்கள் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையும், பல்வேறு இன்னல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியையும் வழங்குவது ஆட்சியாளர்களின் கடமையாகும். அப்போதுதான் நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கடந்த எமது ஆட்சியில் தமிழர்களின் மனதை நாம் வென்றிருந்தோம். அதேவேளை, சர்வதேச சமூகத்தின் மனதையும் வென்று காட்டியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் அவற்றை ஏன் சாதிக்க முடியாமல் உள்ளது என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து இன முறுகலை மேலும் வலுவடையைச் செய்யும் விதத்திலும், சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலும் அரசிலுள்ள சிலர் கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் கவனம் செலுத்த வேண்டும். பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவோரை ஜனாதிபதியும் பிரதமரும் தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் திறம்பட முன்னெடுக்க முடியாது.

இந்த அரசில் நாம் முக்கிய பங்காளிக் கட்சியாக இருக்கின்றோம். ஆனால், எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டுவதில் அரசிலுள்ள மேற்படி உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். அவர்கள் எமக்கும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளனர். ஆனால், நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உரிய கெளரவத்தை வழங்கி வருகின்றோம்.

நாடு இன்று நாலா புறங்களிலிருந்தும் நெருக்குவாரங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருக்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயார். ஆனால், நாட்டின் முக்கிய இடங்களை சர்வதேச நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நாம் சம்மதிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

“ ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். ” –  ‘உதயன்’ பத்திரிகை மீதான வழக்குத்தாக்கலுக்கு மைத்திரிபால சிறீசேன கண்டனம் !

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்.காவற்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் “மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். ” என தன்னுடைய கண்டனங்களை  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சியில் எமக்கு முதுகெலும்பு இருந்தபடியாலேயே விமர்சனங்களை எதிர்கொண்டோம். ஊடகங்களை முழுச்சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தோம்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து சில நாட்களுக்கு மட்டும் சமூக ஊடகங்ளை முடக்கி வைத்திருந்தோம். இன ரீதியான – மத ரீதியான முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையிலேயே இந்த முடக்கல் நிலையை அன்று விதித்திருந்தோம். ஜனாதிபதி என்ற வகையில் – அரசு என்ற வகையில் விமர்சனங்களுக்குப் பயந்து அன்று சமூக ஊடகங்களை நாம் முடக்கவில்லை. எனினும், அன்றைய நாட்களில் பத்திரிகைகளும், வானொலிகளும், தொலைக்காட்சிகளும் சுதந்திரமாக இயங்கின.

நான் அன்று ஜனாதிபதி. இன்று முன்னாள் ஜனாதிபதி. அன்றும் சரி – இன்று சரி ஊடகங்களை மதிக்கின்றேன். விமர்சனங்களை ஏற்கின்றேன். ஆட்சிப்பீடத்தில் இருந்த ஜனாதிபதிகளில் நான் வித்தியாசமானவன். என்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்குக்கூட நான் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தேன். மூவின மக்களின் மனதையும் நான் வென்றிருந்தேன்.

அதனால் சில ஊடகங்கள் என்னை வாழ்த்தின. சில ஊடகங்கள் என்னைத் தூற்றின. ஆனால், நான் அமைதியாக வாழ்த்துதலையும், தூற்றுதலையும் ஏற்றேன்.

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். அந்தவகையில் ‘உதயன்’ மீதான வழக்குத் தாக்கலைக் கண்டிக்கின்றேன் என்றுள்ளது.

“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. முஸ்லீம்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொவிட் சடலங்கள் எரிக்கப்படுவது  தொடர்பில் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  The Hindu” பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் தமது உறவினர்களை அடக்கம் செய்யும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனம் அடக்கம் செய்ய முடியும் என கூறுகிறது. முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் உலக சுகாதார அமைப்புடன் உடன்படுகிறேன்.

சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது   நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சமமாகப் பகிரப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஏப்ரல் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரான் ஹசிமிற்கு பின்னாள் பலம் பொருந்திய வெளிநாட்டு மூளைசாலி ஒருவர் இருந்திருக்கலாம்” – மைத்திரிபால சிறீசேன

“ஏப்ரல் தாக்குதலுக்கு காரணமான சஹ்ரான் ஹசிமிற்கு பின்னாள் பலம் பொருந்திய வெளிநாட்டு மூளைசாலி ஒருவர் இருந்திருக்கலாம்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இறுதியாக நேற்று (25.11.2020) சாட்சியம் வழங்கிய போதே மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.

என தாம் சந்தேகிப்பதாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இறுதியான கேள்விகளை அவரிடம் எழுப்பினர்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, உங்கள் மேல் தேசிய பாதுகாப்பு பேரவையை கூட்டவில்லை என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது தொடர்பின் உங்கள் தரப்பு நிலைப்பாடு என்ன?´ என வினவினார்.

´தேசிய பாதுகாப்பு பேரவை ஒரு சட்டரீதியான, யாப்பிற்கமைவான அமைப்பு அல்ல. அவசரகால சட்டத்தின் கீழ் மட்டுமே பாதுகாப்பு பேரவையை கூட்ட முடியும். ஆனால் சம்பிரதாயபூர்வமாக அனைத்து அரசாங்கங்களும் அந்த பேரவையை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அதில் ஒரு நிரந்தர சட்டரீதியான தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பு சொல்ல கூடிய ஒருவர் இல்லாதது மிகப்பெரிய குறைப்பாடு´ என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.

இதனை அடுத்து ஆணைக்குழுவின் உறுப்பினர் ஓய்வுப்பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பணிப்பாளரும், பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவின் உத்தரவிற்கமைய செயற்பட்டதாக கூறப்படும் உங்களை கொலை செய்வதற்கான சூழ்ச்சி மற்றும் அது தொடர்பான காரணங்களுக்காக சஹ்ரான் தொடர்பில் கடுமையான செயற்பட்ட நாலக்க சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என வினவினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ´ மேற்கண்ட விடயம் தொடர்பில் கூற தனது அறிவு குறைவானது. என்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை பொலிஸ் திணைக்களத்தில் நிலவிய அடிப்படை பிரச்சினை என்பதே எனது எண்ணம். ஆதற்காக நாலக்க டி சில்வாவுக்கு பணி இடை நீக்கத்திற்கும், விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டியதாயிற்று´ என கூறினார் மைத்திரிபால சிறிசேன.

உங்களின் ஆட்சிக்காலத்தில் ரிதிதென்ன உள்ளிட்ட பிரிவினைவாத செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிராக உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என ஓய்வூப்பெற்ற அமைச்சரவை செயலாளர் வினவினார்.

இதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, “அதாவது எனது ஆட்சிக்காலத்தின் 4 வருடம் நீதி மற்றும் அமைதி அமைச்சிப் பொறுப்பை மற்றைய தரப்பினரே வகித்தனர் அந்த சந்தர்ப்பத்தில் புலனாய்வு பிரிவினரை பலவீனப்படுத்தியமை, சிறையில் அடைத்தமை ஆகியன நடந்தன. அப்போதே பிரிவினைவாதம் தலைத்தூக்கியது. 4 வருடங்களாக குறித்த தரப்பினரிடம் நீதி மற்றம் சட்ட அமைச்சு காணப்பட்ட நிலையில் அவர்களால் செய்யய முடியாமல் போனவற்றை 4 மாதங்களில் என்னால் செய்ய முடியாது. மற்றது முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி எவராலும் ஆட்சி நடத்த முடியாது. அது அண்மையில் நடைபெற்ற இருபதாம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது. அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முஸ்லிம் உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்பட்டது.

அதன்பின்னர் கேள்வியெழுப்பிய ஓய்வூப்பெற்ற அமைச்சரவை செயலாளர் ´தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதாக கூறினீர்கள் அப்படி சூழ்ச்சி என கூறியதன் மூலம் நீங்கள் என்ன விடயத்தை குறிபிட்டீர்கள்? என வினவினர்.

இதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, ´என்னிடம் உள்ள தகவல்களுக்கு அமைய சஹ்ரான் இந்த பயங்கரவாத குழுவின் தலைவர் இல்லை என்பது தெரியும். ஏனெனில் அமைப்பு ஒன்றை முன்கொண்டுச் செல்ல வேண்டுமாயின் தலைவர் ஒருவர் அவசியம். அவ்வாறு இருக்கும் போது தலைவர் என்பவர் இதற்கு முன் நின்று செயற்பட்டு தற்கொலை செய்துக்கொள்ள மாட்டார். இப்படியிருக்கும் போது 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே இவ்வாறான தாக்குதலை நடத்த முயற்சித்திருப்பார்களாயின் ஏன் நடத்தவில்லை என சந்தேகம் எழுகின்றது. உலகின் பிரசித்திப்பெற்ற புலனாய்வாளர்கள் தாக்குதலின் பின்னர் நாட்டுக்கு வந்தனர். அவர்களால் கூட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அறிய முடியவில்லை. தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என்பதுடன் சஹாரான் ஹசீமிற்கு பின்னனாள் ஏதோவொரு வெளிநாட்டு சக்தி இருந்துள்ளது. என சந்தேகம் உள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியாக ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.