யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை!

கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 10 பேர் கைது !

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு மற்றும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மாவட்ட குற்றதடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருவமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் – பொலிசார் அசமந்தப்போக்கு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் இரவு 08 மணி வரையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்பில் விரைவான எந்த நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை எனவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

“யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் எங்களுக்கு காணி வேண்டும்.” – காணி அற்றோர் மக்கள் இயக்கம் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது.

நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் , பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் , அதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் , அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு சென்று செயலாளரிடம் மகஜரை கையளித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்தனர். அதேவேளை அரச காணிகளை இராணுவத்தினர் கடற்படையினர் விமான படையினர் தமது படைமுகாம்களை அமைக்க தருமாறும் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதுடன் , அக்காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !

யாழ்ப்பாணம் மாநகருக்கு அண்மையாகவுள்ள பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இந்தச் சடலம் மீட்கப்பட்டது. சடலத்துக்கு உரியவர் இனங்காணப்படவில்லை.

மேலதிக விசாரணை களை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 400 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவுக்காக சுமார் 4100 பேர் போட்டி !

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிற செயற்பாடு முடிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளுராட்சி மன்றசட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம் அந்த வகையிலே 243 வாக்கு எணணும் நிலையங்கள் யாழ் மாவட்டம் முழுவதுமாக அமைக்கப்படவுள்ளன.

எனவே அந்த 243 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிஇருக்கின்றது.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவிற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4111வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள் இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி, இந்த போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் 30 நாட்களுக்குள் ஹெரோயினுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் !

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என யாழ்.போதனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவன் உட்பட மூவர் கைது !

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (வியாழக்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர