யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாள்வெட்டு கும்பல் – நித்திரைக்கு சென்ற பொலிஸார் !

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொிய வருவதாவது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனா்.

இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்ற போது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.

இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

இது ஒரு புறம் இருக்க வடக்கு மாகாணத்தின் திரும்பும் திசையெல்லாம் ராணுவத்தினர் – பொலிசாரும் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு சந்திக்கு சந்தி போக்குவரத்து போலிசாரும்  கடமையில் தான் உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை என்ற பெயரிலும் ராணுவத்தினர் உலாவி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தெரியாத வகையில் இந்த வாள்வெட்டு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றதா..? திரும்பும் திசையெல்லாம் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் ராணுவத்தினரும் – பொலிசாரும்  இருக்கின்றனர். இப்படி இருந்தும் கூட வடக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக முக்கியமான நகர் பகுதிகளில் கூட வாள்வெட்டுச்சசம்பவங்கள் நடப்பதன் பின்னணியின் பாதுகாப்பில் உள்ள பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அசமந்த மற்றும் கண்மூடித்தனமான போக்கும் ஒரு காரணம் எனலாம்.

யாழ்ப்பாணத்தில் சினிமாப் பாணியில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – நால்வர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டா ரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டா ரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

யாழ்.பல்கலைகழகத்துக்கு அருகே இளைஞரை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய கும்பல் – தொடரும் பொலிஸாரின் அசமந்த போக்கு !

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில்  நேற்று (புதன்கிழமை) பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்ற போது வாள்வெட்டுக்ககுழுக்களின்“ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருந்த போதும் எந்தளவு தூரம் அவர் இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளார் என தெரியவில்லை. மேலும் யாழ்ப்பாண காவல்துறையினரின் அசமந்த போக்கும் இந்த வாள்வெட்டுக்குழக்களின் தொடர்ச்சியான அட்டகாசத்துக்கு காரணம். துரித கதியில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் மிக்பபெரிய சமூதாய சீரழிவு ஏற்கபடுவதற்கான வாய்ப்புள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கது.

வல்வெட்டித்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டுடன் தொடர்புடைய 13பேர் கைது !

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.