ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக கோட்டாபய ராஜபக்ஷவை விட அதிகமாக செலவு செய்த ரணில் விக்கிரமசிங்க !

இவ்வருட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவிலான தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 950 இலட்சம் ரூபா அல்லது 9.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வருடங்களில் சுதந்திர தின விழாக்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

2021 இல் 80,662,000.36
2020 இல் 63,214,561.99
2019 இல் 68,130,091.15
2018 இல் 86,805,319.35

இரா.சம்பந்தனை பொன்னாடை போர்த்தி சந்தித்த மகிந்த – பதவியில் இருந்த போது தீர்க்க முன்வராத இனப்பிரச்சினையை தீர்க்க ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசுவதாகவும் உறுதி !

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுக்கள் பேசுபொருளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பு முன்னேற்றகரமான ஒன்றாக அமைந்திருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும்  அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதே நேரம் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டங்களிலும் சரி – மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பணியாற்றிய காலகட்டங்களிலும் சரி இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதும் கூட தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை சந்திப்பதற்கு கூட ராஜபக்ச தரப்பு பெரிதாக அக்கறை காட்டியிராத நிலையில் உள்ளூராட்சி தேர்தல்கள் நெருங்குகின்ற இந்த நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ரணில் கர்ணன் போல் நல்லவர். சிறந்த கொடையாளி. ஆனாலும் துரியோதனன் பக்கம் நிற்கிறார்.” – இராதாகிருஷ்ணன்

“ரணில் விக்கிரமசிங்க நல்லவர். சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது நிற்கும் பக்கம் தவறானது. எனவேதான் தர்மத்தின் வழி சென்று அவரை நாம் எதிர்க்கின்றோம்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வட்டவளையில் இன்று இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்பமே பிரதான காரணம். சீனாவிடமிருந்து பெருந்தொகை கடன்பெற்று, அவை தேவையற்ற அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தப்பட்டன. காலியில் ஒரு துறைமுகம் இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்தாமல் அம்பாந்தோட்டையில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இதனால் என்ன பயன்?

போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படமாட்டாது என பிரதமரான பின்னர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். ஆனால் ஜனாதிபதியான பிறகு மறுநொடியே போராட்டக்காரர்களை அகற்றினார். சொல் ஒன்று செயல் வேறுவடிவம் என்பதை அவர் நிரூபித்தார். உண்மையின் வழி நின்றகவில்லை.

கர்ணன் சிறந்தவர், நல்ல கொடையாளி, துரியோதனன் கூட்டத்துடன் நின்றதால் அவர் வதம் செய்யப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது இருக்கும் இடம் சரியில்லை. நாம் தர்மத்தின் பக்கம்தான் நிற்போம். ரணிலும், மஹிந்தவும் தர்மம் செய்யவில்லை. எனவே, தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் தேர்தல் அவசியம்.

அதேவேளை, மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படும். தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணைந்து பயணிப்போம். அதற்கான சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் விஜயசந்திரன் ஈடுபட்டுள்ளார் என்றார்.

“தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் தேவை” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேசத்தையும், தமிழ் தலைமைகளையும் ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை ஏற்க முடியாது என்றும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எமது அரசியல் உரிமைக்காக போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்று குறிப்பிடும் போது அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படுவோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையையும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் போராட்டத்தில் உயிர்நீர்த்த உறவுகளை நாங்கள் நினைவு கூறுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை திட்டமிட்டு தூண்டும் ஜனாதிபதி ரணில் !

ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்தி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை காட்டி அதனூடாக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவர் முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை அமைத்தோம் என வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை மாகாண சபை தேர்தலை போன்று உள்ளுராட்சி தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

ரணில் ஆரம்பத்தில் நம்மை பற்றி புறங்கூறினாலும் இன்று நல்வழிப்படுத்தப்பட்டுள்ளார் – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்திருப்பதால் தற்போது நல்வழிப்படுத்தப்பட்டுள்ளாரென கட்சியின் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன புறங்கூறி இருந்தாலும் கூட, தற்போது அவர் நல்லவர் எனக் கருதி அவரை ஏற்றுக் கொண்டிருப்பதாக களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல சவால்களை எதிர் நோக்குகிறது. அவற்றை வென்று வர எம்மிடம் போதுமான பலம் உள்ளது.

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை இலங்கை பொதுஜன பெரமுன முன்னெடுக்கும். பொது மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் கடமை.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்கள் முழு ஆதரவையும் வழங்குவார்கள்” என்றார்

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனோரீதியான அழுத்தங்களை கொடுத்த அமெரிக்கா – விமல் வீரவங்ச பகீர் !

கோட்டாபாய ராஜபக்சவை பதவியை கவிழ்ப்பதிலும் – ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பிலும் மேற்குலக நாடுகளின் பங்களிப்பு – குறிப்பாக அமெரிக்கா அதிகமாக மறைமுகமாக  செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததார். ஆகவே இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன .

அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் தகுந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் தற்போது சட்டபூர்வமான அரசாங்கம். ஆனால் தற்போதைய அரசாங்கம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை.

மேலும் தமது திட்டங்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும்.  நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம். அதுமட்டுமன்றி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஆகஸ்ட் 9ல் போராட போகிறாராம் பொன்சேகா !

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான விவாவத்தில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள். அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேநேரம் ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார். இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையைக் குலைக்க வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில் ஓருவரை இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்தமுடியாது. எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுகூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்த நிலையில் போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டார்.

……..

இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஒவ்வொரு தென்னிலங்கை தலைவர்களுமே கூட்டாக பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் தான்.  இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை ஊழல்வாதிகள் என  கடுமையாக சாடும் இதே பொன்சேகா கடந்தகாலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்தே ராஜபக்ஷக்களுக்கு எதிரான தேர்தலை எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தனக்கான ஆதரவுத் தளத்தை உறுதி செய்ய இன்று ஊழல் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.

பொன்சேகாவின் இந்த பாராளுமன்ற உரை கூட தனித்த ஒரு இனத்தை மட்டுமே மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நேரத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் அனைத்திலும் இவருக்கும் பங்கு உண்டு.இறுதி போர்க்குற்றங்கள் தொடர்பிலும் – காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களிலும் வாய் மூடிக்கொண்டிருக்கும் இதே பொன்சேகா இன்று மக்களின் உணர்வு – மனிதாபிமானம் போன்றன பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையானது.

இன்று நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு தனது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார் பொன்சேகா. இன்று தென்னிலங்கை சமூகத்தின் கனிசமான இளைஞர்களும் போர் வெற்றியை கோட்டாவுக்கு கொடுக்க கூடாது என்பதற்காக பொன்சேகாவுக்கு கொடுக்கிறார்கள். கோ கோம் கோட்டா போராட்ட களங்களிலும் இதனை அவதானிக்க முடிந்தது.

ஆக மொத்தத்தில் ஒரு விட இன்றைய கால போராட்டங்களில் தெளிவாக தெரிகிறது ” இந்த இலங்கை மீண்டும் இனவாத சாக்கடைக்குள் மூழ்கி மூழ்கியே இருக்க போகிறதே தவிர மீட்சி அடைய வழியே இல்லை”

“அதிகாரத்தை கைப்பற்ற தென்னிலங்கையில் ஆயுதப்போராட்டம்.” – மனுஷ நாணயக்கார எச்சரிக்கை !

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை நீக்கப்படும்.” என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பாளர்களும் கிளர்ச்சியாளர்களும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டத்தை தொடங்க திட்டமிடலாம்.

இன்று இலங்கைக்கு தேவையானது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானமே. போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுத்தால் அரசாங்கம் அவர்களை நிராயுதபாணியாக்கும்.

அமைதியான போராட்டங்களுக்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவளிக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை நீக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதற்கான நடவடிக்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ரணிலுக்கு எதிராக போராடுவோருக்கு நான் ஆதரவு தருவேன் – பொன்சேகா

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு தான் ஆதரவு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுச்சியானது எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது எனவும், இதனால் ராஜபக்ஷக்கள் தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதனை ஜனாதிபதி புரிந்து கொண்டு கையாள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், போராட்டக்காரர்களை குற்றம் சாட்டும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

மக்கள் சக்தியை ஆயுத பலத்தால் ஒருபோதும் அடக்க முடியாது. இந்த மக்கள் சக்திதான் ராஜபக்சவை உயர் பதவிகளில் இருந்து விரட்டியது. இதை ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும். ரணிலுக்கு எதிராக வெறும் தலையுடன் போராடும் மக்களுக்கு தனது முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.