13 ஆவது திருத்தம்

13 ஆவது திருத்தம்

“பௌத்த பிக்குகள் அரசியலமைப்பை எரிப்பதையெல்லாம் இலங்கையின் சட்டம் கண்டுகொள்ளாது.” – சாணக்கியன் இராசமாணிக்கம்

“ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13 ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் என்ற ரீதியில் முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஏதும் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கையில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதால் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர். ஆங்கிலேயர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் தமிழ்   மக்களின் அரசியல் உரிமைகளை கையளித்து சென்றார்கள்.

சிங்கள அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.சிங்கள சமூகத்தினருக்கு பொருளாதார சுதந்திரம் தற்போது இல்லை என்பதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் 13 ஆவது திருத்த நகல்களை தீயிட்டார்கள். இவர்களை போல் இந்து குருக்கள் அல்லது முஸ்லிம் மௌலவி செயற்பட்டிந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.பௌத்த பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை எரிக்கிறார்கள்.

ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13 ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு ஜனாதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தற்போது 13 ஆவது திருத்தம் ஆகவே சிங்கள மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துரைக்க முன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

“பௌத்த பிக்குகளை அழித்தால் மட்டுமே உங்களால் 13ஆவது திருத்தத்தில் கைவைக்க முடியும்.” – வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர்

‘பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.’ என வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை இல்லாதொழித்துள்ளார். 2009 இன் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்காக 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை 9 பகுதிகளாக பிளவடையச் செய்வதே அவரது தேவையாகவுள்ளது. நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளைப் புறந்தள்ளி இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

அவர் கூறுவதைப் போன்று 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் 9 மாகாணங்களுக்கும் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர்களால் நாடு சீரழிவுக்குள்ளாக்கப்படும். எமக்கு தமிழ் மக்களுடன் எந்த பிரச்சினைகளும் இல்லை. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விடுத்து ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இது தொடர்பில் தீர்க்கமான முடிவினை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். எனவே அவர் தனது முடிவை மகா சங்கத்தினருக்கு அறிவிக்க வேண்டும். நாட்டில் இரத்த வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். பௌத்த மத குருமார்கள் விகாரையில் இருக்க வேண்டும் என்று சி.வி.விக்கினேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

விகாரையிலிருந்து கொண்டே மக்களின் ஒற்றுமைக்காக செயற்படுவோம் என்பதை அவரிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பௌத்த மதகுரு மார்களை முற்றாக இல்லாதொழித்தால் மாத்திரமே 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

ராஜபக்ஷாக்கள், மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க 13 தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

“சிங்கள – பௌத்தரை பகைத்துக்கொண்டு 13ஆவது திருத்தத்தை வழங்க வேண்டாம்.” – நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன !

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக் கொண்டு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது.” என முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கான வாய்ப்பு இல்லை. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது 13 ஆவது திருத்தம் என்ற இருப்பக்கமும் பற்றி எரியும் பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார். என்பதை அறியவில்லை.

13 ஆவது திருத்தத்திற்கு சிங்களவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதால் 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்திற்கு கைவைக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முதலில் முன்வைத்தது.

சகல அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியை ஆளும் தரப்பினரே பலவீனப்படுத்தினார்கள், அதனை அனைவரும் நன்கு அறிவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம் என்பதை மீண்டும் குறிப்பிடுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை உரையில் குறிப்பிட்டார். 13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ளது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், அரசியலமப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்றுத் தொடர்புப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சிதம்பரம் 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைக்கு எதிரான பாரதூரமான விடயங்களை இந்தியாவிடம் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அவர் இந்தியாவிடம் வலியுறுத்தினார்.
சிவ சிதம்பரத்தின் யோசனைகளை செயற்படுத்தியிருந்தால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னரே இலங்கையில் யுத்தம் தோற்றம் பெற்றிருக்கும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரம் தொடர்பில் இந்தியா மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் தாக்கம் தீவிரமடையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் தோற்றம் பெறும் என புலனாய்வு தகவல் கிடைக்கப் பெற்றும் ஜே.ஆர் ஜயவர்தன கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அமர்தலிங்கம் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இலங்கை இவ்வாறான பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. இதன் விளைவாகவே பிற்பட்ட காலப்பகுதியில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

சமஷ்டி ஆட்சி முறையில் அதிகார பகிர்வு அவசியம் என வடக்கு தலைமைகள் குறிப்பிடுகிறார்கள். சமஷ்டிக்கு சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சமஷ்டி என்றால் வெறுப்புக்கள் தோற்றம் பெறும். 13 பிளஸ் என மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு குறிப்பிட்ட காரணத்தினால் தற்போது சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மாகாண சபை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது உயர்நீதிமன்றம் ஒருசில திருத்தங்களை முன்வைத்தது.13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் நாடு பிளவுப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறன பின்னணில் எவ்வாறு 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக அமுல்படுத்துவது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும், அரச தலைவர்களும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

எனது ஆட்சி காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

சிங்கள பௌத்த மக்களை பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது, ஆகவே நாட்டின் இன அடிப்படையில் பிளவுப்படாமல் அனைவரும் வாழ வேண்டும். நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது 13 ஆவது திருத்தம் ஊடாக பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாகிப்பப்பட வேண்டும். உலக நாடுகளில் சமஸ்டி ஆட்சி உள்ள போது இலங்கையில் ஏன் சமஸ்டி ஆட்சி முறைமையை அமுல்படுத்த முடியாது என தமிழ் அரசியல் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். பிற நாடுகளை போல் சமஷ்டி ஆட்சியை அமுல்படுத்தும் தன்மை இலங்கையில் தற்போது இல்லை என்றார்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு வேண்டாம் – எம்.ஏ.சுமந்திரன்

ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அர்த்தமுள்ள அதிகார பகிர்வையே எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு, அதனை விடுத்து செயற்பட்டால் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என கருதப்படும் எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதியுச்ச அதியுச்ச அதிகார பகிர்வு என குறிப்பிட்டுக் கொண்டு ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வுக்கு தயார் – ராஜபக்ஷக்கள் அறிவிப்பு!

அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.” – யாழில் பௌத்த பிக்குகள் அறிவிப்பு !

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பிலேயே பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

13ஆம் திருத்தத்திற்கு மேலான அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

 

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே
பௌத்தப்பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அறிவித்தனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்தோனேசியா பிளவுபட்டது போல் 13ஆல் இலங்கையும் பிளவுபடும்.” – உதய கம்மன்பில

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி 90களில் இந்தோனேசியாவை பிளவுபடுத்திய மேற்கத்திய நாடுகளின் திட்டத்தில் இலங்கையும் பலியாக கூடாது என ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொடரும் கொடுப்பனவு நிலுவை மற்றும் கடன் நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால், கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் போலவே அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தோனேசிய ஜனாதிபதி சுஹார்டோவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் சூழலை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவர், அத்திருத்தம் இலங்கையை இனரீதியாக பிளவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலனுக்காக 13 ஆவது திருத்தத்துக்கு ஜே.வி.பி முழுமையாக ஆதரவு வழங்கும் – அனுர குமார திஸாநாயக்க

மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறித்த விடயத்தினை கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நேரம், சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கப்பாடான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நோக்கத்திற்காக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது நிலைமை மாறி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது. தனித்து போராடுவேன்.”- அட்மிரல் சரத் வீரசேகர

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்கலாம். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாகாண சபை தேர்தல் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாக்கவில்லை.மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக மாகாண சபை தேர்தலை பிற்போட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் கூட்டமைப்பினர் உண்மை நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.  அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்; அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வலுவற்றதாகி விடும் என குறிப்பிடும் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.தமிழ் மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கபோவதில்லை. ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் போது அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள 07 ஜனாதிபதிகளும் கைவைக்காத 13ஆவது திருத்தத்தில் ரணில் கைவைப்பது ஏன்..?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை இலக்காக கொண்டு மாத்திரமே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையால் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார்.

 

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ரணிலுக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தத் திருத்தம் 1987 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஆட்சியமைத்த 7 நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளில் எவரும் இதில் கை வைக்கவில்லை.

மக்கள் உண்பதற்கு உணவின்றி தவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் , உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தி, பொதுத் தேர்தலும் இன்றி அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு செயற்படுகிறார்.

மாறாக தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தினால் அல்ல. இது தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஏமாற்றும் செயற்பாடு”  என்றார்.