அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“இலங்கை தமிழர்களின் வேதனையை புரிந்து கொள்ளாத தமிழக தமிழர்கள்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேகப் உடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கையின் கடல் வளத்தினையும், வட பகுதி தமிழ் பேசும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும்  பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை கடற் படையினர் மேற்கொள்ளும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் தவறான கருத்துக்கள் இரண்டு நாடுகளுக்கும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியவை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்படும் இராஜதந்திர அணுகுமுறைகளின் தொடர்ச்சியாக நேற்று பிரதி உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில்  இரண்டு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.

“ஐனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.”- அமைச்சர் டக்ளஸ்

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஐனநாயக வழியில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும்  இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முடிவுகட்டப்பட வேண்டும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பௌத்தமயமாக்கப்படும் நெடுந்தீவு – பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..?

இலங்கை தொல்பொருள் திணைக்களம், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றதா..?  என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அனுமதியின்றி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அகற்றப்படாமையே இருக்கின்றது.

ஆகவே தொல்பொருள் திணைக்களத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பௌத்த மயமாக்கல் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது,  இந்த அறிவித்தல் பலகை தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் வைக்கப்பட்டது என உறுதிப்படுத்தியுள்ளார்.

“வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்ததது மகிழ்ச்சி.”- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு எந்தவகையிலும் அனுமதிப்பதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு அறிவிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் முறைகள் முழுமையாக நிறுத்த, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியாகவும், கச்சதீவு சந்திப்புக்கள் போன்று நட்பு ரீதியாகவும் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் நலன்களுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை ” – இலங்கை – இந்திய மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை!

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று மாலை மூன்று மணியளவில் கச்சைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதனைதொடர்ந்து இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வரும் அவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் 20வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம் எந்தவித பிரியோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள். ஆக இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதே நிலையில் ஒரு மீனவர் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கபடாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரவரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடபட்ட விடயங்கள் தொடரபாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து கலந்துரையாடலை நிறைவுறுத்தினார்.

இதன் பொழுது இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,மன்னார் ,கிளிநொச்சி,யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன்,பா.ஜ.க தமிழக மீனவ தலைவர் எம்.சி முனுசாமி உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடலட்டை பண்ணைகளை எதிர்க்கும் மக்கள் – கடலட்டை பண்ணைகளால் 7700 மில்லியன் டொலர் வருமானம் வந்ததாக மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம், கிளி நொச்சி, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் மூலம் 7700 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

விரைவில் பனை தென்னை அபிவிருத்தி சபை போன்று கடலட்டை அபிவிருத்தி சபையை உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று அவர் தனது கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். வடக்கில் தற்போது 1700 கடலட்டைப் பண்ணைகள் வந்துள்ளன என்றும் கடலட்டை மூலம் கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று மடங்காக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதே நேரம் பாரம்பரியமாக மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் கடல் அட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபடுவதனால் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது என தெரிவித்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பலர் கடந்த நாட்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அட்டைப் பண்ணை அமைப்பதற்காக கடற்கரையோரமாக  இருக்கின்ற  கண்டல் தாவரங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் மீன் பெருக்கம் தடைப்படுவதுடன்  பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கடல் அட்டை பண்ணை அமைப்பதனால் பெண்தலைமத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டோம். விரைவில் இதற்கு நீதி கிடைக்க  வேண்டும். எனவும் பலரும் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கை அரசியலை தமிழ் தரப்பு பின்பற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும்.

இல்லையேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில்,

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், பொலிசாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலய வழிபாடுகள் உறுதிப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையில் இன்று(15.02.2023) கண்காணிப்பு பயணம் ஒன்றினை மேற்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பூஜை வழிபாடுகளை தொடர்வதற்கு, அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றின் கடமைசார் செயற்பாடுகள் இடையூறாக அமைந்துள்ளதாக கடந்தகாலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர், மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்க திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையுமாயின், அவைதொடர்பாக கரிசனை செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதுடன், துறைசார் அமைச்சர்களுடனும் பிரஸ்தாபித்து சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வெடுக்குநாறி விவகாரம் தொடர்பாக, தமிழ் மக்களின் பிச்சினைகள் மற்றும் அபிலாசைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதன்போது, சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று நிலமைகளை ஆராய்வதுடன், சம்மந்தப்பட்ட துறைசார் அமைச்சர்களுடன் இணைந்து சுமூகமான தீர்வை காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.

 

 

“தேசிய நாளை கரிநாள் எனும் வீணர்களை தோற்கடிக்க தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்கவேண்டும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தேசத்தின் சுதந்திர தின நன்நாளை அவமதிப்பதும், அவதூறு சுமத்துவதும் அவரவரின் கொள்கை மீதான பலவீனத்தையும், அவரவர் கொண்டுள்ளதாகக் கருதும் ஆற்றல் மீதான நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமையுமென்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரி வித்துள்ளார்.

கரிநாள் கதை கூறி வீண் விரையம் செய்வதும், கறுப்புக் கொடி ஏற்றுவோ மென்று அர்த்தமற்ற ஆர்ப்பரிப்புக் காட்டுவதும் ஈழத் தமிழர் வாழ்வில் எதையும் சாதித்துவிடாது.

தமிழ் மக்களை உரிமைகளுடனும், சமத்துவத்துடனும் முகமுயர்த்தி வாழச் செய்வதற்கு மாறாக, தொடர்ந்தும் தமிழர்கள் இருளில் தீராப்பிரச்சினைகளுடன் வாழ வேண்டுமென்று விரும்புகின்ற வீணர்களை தோற்கடிக்க தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்கவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துளார்.