இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – 30 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை விட அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு  நேற்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (25) வரை 1,052 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறிய 1006 குற்றச்சாட்டுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினத்தில் மாத்திரம் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டத்தினை மீறியமை குறித்து 105 முறைப்பாடுகளும், 19 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான எவ்வித பிரச்சாரத்தையும் ஆரம்பிக்காத 19 ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்

நமது ஆட்சியில் தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் – அனுர குமார திசாநாயக்க

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் நமது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வளமான நாடு சுகமான வாழ்வு என்றும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

 

கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்காவினால் இன்று இந்த கொள்கைப்பிரகடனம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் விடுதியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதிகள், மத தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த அநுரகுமார திஸாநாயக்க,

 

”நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது அரசாங்கத்தில் நீக்கப்படும். அதற்கு மாற்றீடாக புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவரவுள்ளோம்.

 

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டை செயல் வடிவில் அமுல்படுத்துவோம்.

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015-2019 வரையான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்படும்.

 

குறிப்பாக புதிய சந்தனையில் அனைத்து இன மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை நாம் உருவாக்குவோம்.

 

தமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்.

 

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து உண்ணும் நிலைமைகளில் மாற்றம் ஏற்படவேண்டும். தேசிய உணவு உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தை நாம் நாட்டில் கட்டம் கட்டடமாக செயற்படுத்துவோம்.

 

பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலனை நியாயமான முறையில் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்போம். நடுத்தர மக்களை ஏழ்மையில் வைத்துக்கொண்டு நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

 

பாடசாலை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்போம். உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவோம். நீர் மற்றும் மின்சார கட்டணத்தையும் குறைப்போம்.

 

இதற்கு மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு மிகவும் அவசியமானது” என அநுரகுமார திஸாநாயக்க மேலும் தொிவித்தாா்.

வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !

எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சரத்சந்திர தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 128,585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86,889 வாக்காளர்களும் மன்னார் 90,607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இதேவேளை, 13,389 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 228 தபால் வாக்களர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சரத்சந்திர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது ஜனாதிபதி வேட்பாளர்களின் மாத வருமான விபரம் – ஏழை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய, மௌபிம ஜனதா கட்சியில் இருந்து இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வர்த்தகர் திலித் ஜயவீரவின் மாத வருமானம் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூன்றாவது இடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4,54,285 ரூபாய் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 2,85,681 ரூபாய் மாதாந்த வருமானத்துடன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் மாத வருமானம் 256,802 ரூபாய் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மாத வருமானம் 317,786 ரூபாய் என்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகேயின் மாத வருமானம் 3 இலட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். – சிறீதரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

 

சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

 

இதன்போது கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார்.

 

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் – ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இலங்கையின் மனித உரிமைநிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

 

தேர்தல்களையடுத்து புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒரு அவசரவிடயமாக இலங்கை நாட்டுக்கென அனைவரையும் அரவணைக்கும் முன்னெடுக்கும் தேசிய நோக்கினை முன்னெடுக்கவேண்டும்.

 

அத்தோடு முரண்பாடுகளிற்கான மூல காரணங்களை கவனத்தில் எடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும்,அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

 

 

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.

 

தேர்தல் காலத்திற்கு முன்னரும் தேர்தல் காலத்தின் போதும் அதன் பின்னரும் கருத்து சுதந்திரம் ,அமைப்புகளில் இணையும் சுதந்திரம்,மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றிற்கான உரிமைகi முழுமையாக பாதுகாத்து , அவற்றிற்கு மதிப்பளிக்கவேண்டிய பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது.

 

போராட்டக்காரர்களிற்கு எதிரான மிதமிஞ்சிய அளவிலான அல்லது அநாவசியமான பலத்தை பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்ளல்,மத,பாலின ஏனைய விடயங்களின் அடிப்படையிலான ,பிரிவினைவாத இயல்பிலான மற்றும் பாரபட்ச இயல்பிலான சொல்லாடல்கள் மற்றும் நடைமுறைகளை தடுத்தல், தேர்தல் தொடர்பிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களை என்பவற்றை தடுத்தல் ஆகியவற்றை அது உள்ளடக்கியுள்ளது.

மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

மாகாண சபைகளுக்கு ஒருபோதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்கவே முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுpன பெரமுவின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

எங்களுடைய நாடு ஒற்றையாட்சி நாடாகும். கிராமம் மற்றும் நாட்டுள்ள தாய் தந்தையரின் குழந்தைகளும் இந்த ஒருமித்த நாட்டை பாதுகாப்பதற்கே போராடினர். இந்த பௌத்த நாட்டுக்குள் அனைத்து மதத்துக்கு கௌரவத்தை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதனை தற்போது செய்கின்றோம்.

அதேபோன்று, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்க முடியாது என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தாய் தந்தை மற்றும் இளையோரை தேர்தரல் காலத்தில் மாத்திரம் ஏமாற்றுவதற்கு விரும்பவில்லை. ஏமாற்றுவதால் எவ்வித பயனுமில்லை.

எங்களுக்கு முடியும் என்பதை முடியும் என்றும் முடியாது என்பதை முடியாது எனவும் கூறிவிட வேண்டும். நாங்கள் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்போம். மொழி உரிமையையும் பாதுகாப்போம்.

ஆனால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்க முடியாது என்பதுடன், வடக்கு கிழக்கையும் நாங்கள் ஒருபோதும் இணைக்க மாட்டோம் என்பதையும் தெளிவாக அறிவிக்கின்றோம்”

என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் சின்னத்தின் பின்னணி என்ன..? – ரணில் விக்கிரமசிங்க விளக்கம்!

”Ask Ranil” நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார்.

அந்தவகையில் ” இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்துள்ளீர்கள் ‘யானை’ இல்லாமல் ‘சிலிண்டர்’ தெரிவு செய்யப்பட்டதன் காரணம் என்ன?” என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

 

அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க ”இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். கட்சி சாராமல் செயற்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசியல் ரீதியாக புதிதாக சிந்திக்க வேண்டும்.

 

பல குழுக்களுடன் இணைந்து செயற்பட்டதால் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்தேன். சுயேட்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம். இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானதாகும். அதனால் தான் சிலிண்டரைத் தெரிவு செய்தேன்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் ஆணையம்

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.