சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

“கட்டாரிடம் எடுக்கும் ராஜபக்ஷ அரசு.”- சஜித் பிரேமதாச

எதிர்காலத் திட்டம் இல்லை என்றால், இலங்கையினால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்டார் தொண்டு நிறுவனத்திடம் இருந்து உதவிகளை நிராகரித்து கொழும்பு அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு தடை விதித்தவர்கள் இன்று அவர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறினார்.

எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய, அதே அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

கட்டார் அபிவிருத்தி நிதிய அலுவலகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டபோது அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த தன்னை எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் விமர்சித்ததாக கூறினார்.

ஆனால் இன்று அந்த நிதியை பெற்றுக்கொள்ள அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிச்சை பாத்திரத்தை கட்டாருக்கு எடுத்துச் செல்வதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

அவர்களிடம் பிச்சை எடுக்கத் தொடங்கிய பின்னர், கட்டார் அரசாங்கம் மீதான கருத்துக்களும் சில கட்டுப்பாடுகளும் ஒரே இரவில் மாறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முறைப்படி அதிகாரத்தை கைப்பற்றுவோம் – சஜித் பிரேமதாஸ

மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழிநுட்பத்தில் பரிச்சயமான உலகில் கொடிகட்டிப் பறப்பதற்கு உதவும் முகமாக “வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை” வழங்கி வைக்கும் “பிரபஞ்சம்” முன்னோடித் திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இன்று (16) மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள நவயாலதென்ன கடுகஸ்தோட்டை, சமுத்திராதேவி மகளிர் கல்லூரிக்கு, எட்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் (846,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு பேசிய அவர்,

அவ்வாறு வக்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான பிரபஞ்சம் வேலைத்திட்டம், பேருந்து நன்கொடை திட்டம் போன்ற சமூக நல திட்டங்களை செயல்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் கல்வி முறை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பாக ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பாடப்பரப்புகள் முறையாகவும், வினைதிறனாகவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதைவிடுத்து மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறைபாடுகள்,போதாமைகள் மற்றும் இயலாமைகளை கூற அரசாங்கமொன்று தேவையில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வாயாடல்கள் மற்றும் அறிக்கைகளை ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“இன்னமும் பிரதமராக பதவியேற்க நான் தயாராகவே இருக்கிறேன்.”- சஜித் பிரேமதாச

பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க மாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்னும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன். எங்களுடைய அமைச்சரவையை நியமிக்கவும் நான் எதிர்பார்க்கிறேன் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் வீட்டுக்குப் போ என கூறினால் நாங்கள் வீட்டுக்குப் போகத் தயார் – சஜித் பிரேமதாச

கொள்கைகளை காட்டிக்கொடுக்காது ஒரே நிலையில் இருந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மானம், மரியாதை இருப்பதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உள்ள 225 பேரும் வெட்கமற்றவர்கள் என 22 மில்லியன் மக்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கைகளுக்கு துரோகம் செய்யாமல் சரியான நிலையில் இருந்து சுயமரியாதையை பேணுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆசனங்கள் தனக்கு பெரிதல்ல என தெரிவித்த சஜித், ஜனநாயக ரீதியில் வீட்டுக்குப் போ என கூறினால் நாங்கள் வீட்டுக்குப் போகத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“எங்கள் கட்சியில் யாரும் விற்பனைக்கு இல்லை.”- பசில் ராஜபக்ஷவுக்கு சஜித் ட்வீட் !

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர்,

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பசில்ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதை கைவிடுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை. ஏனையவர்களை விலைக்கு வாங்க முயன்றால் சேதமடைந்த பழுதடைந்த பொருட்கள் குறித்து அவதானமாகயிருங்கள் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது.” – அமைச்சர் சரத் வீரசேகர

அண்மையில் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீதான தாக்குதல் இடம்பெற்றபோது, அங்கு வந்து தாக்குதலை நடத்தியவர்கள் வெள்ளைவானில் வந்திருந்தார்கள் இந்தநிலையில் எதிர்க்கட்சியினர் இது தொடர்பான தங்களுடைய அனுதாபத்தையும் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து  சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக  தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேதிலளித்த அவர்,

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாகின்றது. கடந்த அரசாங்கமே யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நாட்டை காட்டி கொடுத்தது. இனிமேலும் இவ்வாறான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.

 

மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பிக்பொக்கெட் அடிக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ – சஜித் பிரேமதாஸ சாடல் !

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசியுள்ள அவர்,

நாட்டில் மிகப்பெரிய நிதியமாக ஊழியர் சேமலாப நிதியம் காணப்படுகிறது. இங்கு 3 ட்ரில்லியன் நிதி காணப்படுகிறது. இதனூடாக 250 பில்லியன் இலாபமாகப் பெறப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 25 சதவீத வரியை நிதி அமைச்சு அறவிட உள்ளது.

நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை நிதி அமைச்சர் பிக்பொக்கெட் அடிக்கப் பார்க்கிறார். தொழிலாளர்களின் பணத்திலிருந்து பில்லியன் கணக்காணப் பணத்தைப் பெற்று நிதி அமைச்சர் தனக்கு நெருங்கியவர்களை மகிழ்விக்கப்போகிறார். என தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

EPF, ETF நிதிகளை கொண்டு மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஊடாகக் கிடைக்கப்பெறும் இலாபத்துக்கு வரியை செலுத்த வேண்டும் வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.

எனினும் EPF, ETFக்கு வரியை அறிவிடுவது தவறென தொழில் அமைச்சு கொள்கை ரீதியாக முடிவொன்றை எடுத்துள்ளது. இந்த முடிவை நாம் சில மாதங்களுக்கு முன்பாகவே இலங்கை வருமான வரித் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சி தலைவர் சஜித், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு வரி அறவிடுவதை தொழில் அமைச்சு எதிர்க்கிறது என்றால், நிதி அமைச்சு எவ்வாறு இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வரி அறவிடுவதில் இருந்து EPF, ETF நிதியங்களை விடுவிக்க வேண்டும் என சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதனூடாக இப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வை காண முடியும் என்றார்.

பாகிஸ்தானில் தங்கம் வென்ற தமிழ் யுவதிக்கு பணப்பரிசு வழங்கி கௌரவித்த சஜித் பிரேமதாஸ !

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.

தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் (08) குறித்த யுவதியை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவர்களுடைய பாரியார் ஜலனி பிரேமதசா ஆகியோர் குறித்த யுவதியை கௌரவித்தோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினுடைய முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவிலிருந்து குறித்த யுவதி கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து யுவதி கௌரவிக்கப்பட்டுள்ளதோடு பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மாதர் சக்தியினூடாக ரூபா 100,000 பணத்தினை இந்துக்காதேவியை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைத்து எதிர்காலத்தில் மேலும் உதவிகளை வழங்க உறுதி வழங்கியுள்ளார்.

“இன-மத-பேதங்கள் கடந்து நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்.” – சஜித் பிரேமதாச

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய  மக்கள் சக்தி என்பது நாட்டில் இதுவரை இல்லாத பொது அரசியல் அத்தியாயத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. டீல் அரசியல் கலாசாரத்தை இல்லாமல் செய்து நாட்டின் எதிர்காலத்திற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமான அமைப்பு தான் இது.

இது தனி நபருக்கானதோ அல்லது ஒரு இனத்திற்கானதோ அல்ல. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புபவர்கள் அனைவரும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஊழல், கொள்ளைகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது எமது நோக்கம். மத்திய வங்கி கொள்ளையில் ஈடுட்டவர்கள் எவ்வாறு எம்மோடு இணைய வருவார்கள்.

சுசில் பிரேமஜயந்த அவர்களை பதவி நீக்கிய விடயமானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற வேலை. மக்கள் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. முழுவதும் கண்துடைப்பாக செய்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். இதற்கு புதிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் எம்மால் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது மக்களின் பங்களிப்புடன் கூடியதாகவே ஆரம்பிக்கப்பட்டது.

இதனை நாம் நடைமுறைப்படுத்தினோம். தற்போதைய அரசாங்கம் கொள்ளையடிப்பதில்  தான் குறியாக இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எப்படி வீட்டுத் திட்டத்தை அவர்களால் வழங்க முடியும்.  நாம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இந்த மக்களின் வீட்டு திட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.

மேலும், ஊடகம் என்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் மிகப்பெரிய சக்தி என நான் நம்புகின்றேன். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது ஊடகவியலாளரின் கடமை. இவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பலர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.

அவ்வாறு பாதிப்படைந்த அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கம் என்ற வகையில் எம்மால் முடிந்த சலுகைகளை பெற்றுக் கொடுப்போம்.

ஐக்கிய ஐக்கிய மக்கள் சத்தியின் நாட்டிற்கான பயணம் தொடர்கிறது. இந்த பயணத்தில் வடக்கு அரசியல், தெற்கு அரசியல் என்று இல்லை. இதில் எந்த வித பிரிவினைகளும் கிடையாது. இலங்கை என்பது ஒரு நாடு. நாம் அதன் பிரஜைகள் என்ற அடிப்படையில் தான் பணியாற்றுவோம். மக்களது பிரச்சனைகளை நாம் கட்டம் கட்டமாக செய்வோம். இதில் எந்தவித வேறுபாடும் கிடையாது.

இராணுவ வழிநடத்தல் அல்லது இராணுவத்தின் தலைமைத்துவம் என்பது இராணுவத்திற்கு தான் பொருத்தம். எமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டை வழிநடத்துவதற்கும், கொண்டு செல்வதற்கும் தேவையானது ஜனநாயக ரீதியலான தேர்தலும், மக்களது வாக்குகளும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் தான்.

நாட்டின் ஆட்சியில் இராணுவ வழிநடத்தல் என்பது தேவையில்லாதது. இது சம்மந்தமாக என்னிடம் மேலதிகமாக கேட்க வேண்டாம். இந்த அரசாங்கத்திற்கும் நாட்டை இராணுவ ஆட்சியை கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை.

நாட்டிற்குள் எந்தவித பிரச்சனைகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். எந்த ஒரு இனத்துடனும், மதத்துடனும் முரண்பட முடியாது. ஒரு இனம் அல்லது குறித்த தொகை மக்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை அல்லது தமது தேவைகள் பூர்த்தியாகவில்லை என்றால் அதனை கேட்க உரிமை உள்ளது. அதனை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை” எனத் தெரிவித்தார்.

“அரசாங்கம் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” – சஜித் பிரேமதாச

“அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

87 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

“கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியாக நாங்கள் பெரிய பங்கை வகிக்கிறோம். எதிர்க்கட்சியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கினோம். தொற்று நோயால் பின்தங்கிய  கல்வியை உயர்த்தி வலிமையான மாணவ தலைமுறையை உருவாக்க இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்து கிறோம்.

எதிர்க்கட்சியாகிய நாங்கள் இவ்வாறான பணியை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் என்ன செய்து வருகின்றது என்பது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.

நத்தாருக்கு முன் எரிபொருளின் விலையை அதிகரித்து நத்தார் பரிசுகளை வழங்கிய அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நவீனத்துவ, மனிதாபிமான, புதிய அரசியல் இயக்கம். திறமையான இளைஞர்களைக் கொண்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என நம்புகிறோம்,” என்றார்.