ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“யாரும் ஏற்க மறுத்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு 700 பில்லியன் ரூபாயை இழந்துள்ளது. மேலும் கடந்த இரண்டரை வருடங்களில் 2300 பில்லியன் ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 70% ஆல் அதிகரித்துள்ளது.

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம். நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதனால் அவர்கள் அறிவித்தபடி ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பித்தது. ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்புக்கு அமைய புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது.

“2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை. விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.” என கூறியுள்ளார்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.”- சிம்மாசன உரையில் ஜனாதிபதி ரணில் !

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் தனது கொள்கை உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன், அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஆகையால், சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இளைஞர்களின் ஆதரவோடு இணைந்து செயல்படவுள்ளேன்.  அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“கோட்டாபாய இலங்கைக்குள் வருவதற்கான தருணம் இதுவல்ல.”- ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருகை தருவதற்கான உகந்த சந்தர்ப்பம் இது அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் வருகை தரும் பட்சத்தில், நாட்டிற்குள் அரசியல் நெருக்கடி ஏற்படலாம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படவில்லை எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க  இலங்கைக்குள் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் சில காலங்கள் செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ரணில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்.”- பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் மனதார வரவேற்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானதும், பாராட்டத்தக்கதும்.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். எனவே, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.