13 ஆவது திருத்தம்

13 ஆவது திருத்தம்

“13 வந்தால் தமிழீழம் மலரும். இரத்த ஆறு ஓடும்.” – எச்சரிக்கிறார் விமல் வீரவங்ச

‘தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.” என உத்தர லங்கா சபாவின் தலைவரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், யாராவது 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தக்கூட்டத்தை புறக்கணித்த விமல் வீரவன்சவிடம் அதிபரின் கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று ஜனாதிபதிக்கு தெரியும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை பல தடவைகள் தெரிவித்து விட்டோம்.

தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிடுகிறார்.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி இவ்வாறு  நடைமுறைச்சாத்தியமற்ற கருத்துக்களைக் கூறி காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்து தான் நாம் சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்தோம்” – என்றார்.

“ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தி 13ஆம் திருத்தத்தை கொண்டு வருவேன்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (26) கொழும்பில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரம் தன்னிடம் இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தம் உட்பட்ட விடயங்களை தான் நடைமுறைப்படுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

தனது இந்த நகர்வை எதிர்க்கும் தரப்புகள் முடியுமானால் 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆம் திருத்தத்தை அரசியல் அமைப்பில் இல்லாமல் செய்யலாம் எனவும் அவர் சீற்றத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள மாகாண சபைகளுக்கு, லண்டன் நகர சபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்ததை அரசியலமைப்பில் வைத்துக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்த போதிலும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தமிழ்தரப்பு அமுல்படுத்த முனைவதால் முஸ்லீம் தரப்பு உசாராக வேண்டும்.” – அமைச்சர் நஸீர் அஹமட்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கேறிப்பிடப்பட்டுள்ளதன் படி

“இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு.

தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா? அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?

எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது, அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது.

முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில், சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான். ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதாகக் கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து இந்தியாவுக்குத் தெளிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளது தான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால், அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

“இனப்பிரச்சினைக்கு தீர்வு 13ஆவது திருத்தம் அல்ல. 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டமே தீர்வு.”- விமல் வீரவன்ச

“வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்க தீர்வு காண 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)இடம்பெற்ற அரச பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்துக்கொண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டார்.இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி,பிரதமர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் குறுகிய காலத்தில் நாடு இரண்டாக பிளவடையும்.13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத,சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்த்தும் இன அடிப்படையிலான பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட ,நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம்  ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச காலநிலை  தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் 2002 ஆம் ஆண்டு முன்வைத்த கொள்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம்,வடக்கிழக்கு மாகாண சபையை தற்காலிக அரசாங்கமாக மாற்றியமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக பதவி வகித்த நீங்கள் (ஜனாதிபதி)அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். அதற்கமைய ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’கைச்சாத்திடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீர புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள்,சர்வதேச பிரிவினைவாத அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒன்றிணைத்து சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதுடன் ஒருசில தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விடுதலை புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை விடுதலை செய்வதன் ஊடாக தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல்,இராணுவ முகாம் மற்றும் அதனை அண்மித்த காணிகளை விடுவித்தல்,மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான ‘எல்’ வலய காணிகளை பிரதேச செயலகம் ஊடாக விடுவித்தல்,காணி கொள்கையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்கும் திட்டத்தை வகுத்தல்,ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனார் அலுவலகம் சட்டத்தின் ஊடாக இயற்றப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சர்வதேச தலையீடு தென்னாப்பிரிக்காவில் வெளிப்படையாக காணப்படுவதை அறிய முடிகிறது.

2002 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்ற முடியாத விடயங்களை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்ற முயற்சிப்பது நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் மக்களை திசைத்திருப்பி நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கீன்றீர்கள் என்பதை நன்கு அறிவோம். பிரிவினைவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாத்து வடக்கு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 10 பிரதான யோசனைகளை முன்வைக்கிறோம்.

இராச்சியத்தின் நிறைவேற்று அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விரிவுப்படுத்தி அதற்கு இணையாக மக்கள் சபை என்பததொன்றை உருவாக்கி அரச செயற்பாடுகளில் மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை வினைத்திறனான முறையில் செயற்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளை உள்ளடக்கிய வகையில் உள்ளூராட்சி அபிவிருத்தி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் உள்ளூர் அதிகார சபைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தின் பிரதி அமைச்சரின் அதிகாரத்துடன் குறைந்தளவிலான அமைச்சரவை ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் அவர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்க கூடாது.

நாட்டின் சகல இனங்களின் தேசியத்துவம் மதிக்கப்படுவதுடன்,மதம் மற்றும் மொழி அடிப்படையில் வேறுப்பாடுகள் காண்பிக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 1957 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமூக ஏழ்மை ஒழிப்பு சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல்,ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

“13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.” – டலஸ் அழகப்பெரும

“அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.” என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் செயற்படுவது பாரிய குறைப்பாடாக கருதப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விடயதானத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவையாளர்கள் தற்போது சேவை கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளின் ஒருசில விடயங்கள் அரச சேவையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்படுகிறது. 2017ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்த பிரேணை கொண்டு வரப்பட்ட போது தெரிவு குழுவின் போது 31 திருத்தங்கள் உள்வாங்கப்பட்டன.மாகாண சபை தேர்தல் காலரையறையில்லாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் என்ற சொல் கூட தற்போது வழக்கில் இல்லை.இது ஒரு பாரியதொரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும். உள்ளூராட்சிமன்ற தேர்தலை விற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய அண்மையில் தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2018 ஆம் ஆண்ட விசேட தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பான தெரிவு குழு நியமிக்கப்பட்டது,கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது எத்தன்மையானது.

ஆகவே மாகாண சபைகளுக்கு செய்ததை,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் செய்ய வேண்டாம் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் மீதான அச்சத்தில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்ற சபை முறைமை தொடர்பில் எவ்வித கொள்கையுட் நடைமுறையில் இல்லை,2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,ஆனால் இதுவரை அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் இந்த  சபையில் உள்ளார்கள்.தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைந்தளவில் உள்ளார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

“13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள்.” – ஜீ.எல்.பீரிஸ்

13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவைத் திட்டத்தின் கீழ் உரையாற்றியதோடு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழுவையும் சந்தித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குவதும் அவர்களுக்கு காணிகளை வழங்குவதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்தோடு, அதற்கேற்ப குழுவொன்று நியமிக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“13வது திருத்தம் எமது மக்களை ஏமாற்றும் பொய். அதில் எனக்கு உடன்பாடில்லை.” – சிறீதரன்

“13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.” யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (30.01.2022) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் அதில் இருக்கின்றது.

மேலும் அதிலே தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அத்தோடு இது தொடர்பாக எங்களது கூட்டத்தில் ஆராய்ந்திருந்தோம். இந்தியாவிடம் நாங்கள் 13ஐ பற்றி கேட்கத்தேவையில்லை.

ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று திமுகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. இவ்வளவு நடந்த பின்பும் நாங்கள் அதை கேட்பது காலத்திற்கு பொருத்தமானதா என்று எனக்கு தோன்றவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்னுடைய கோரிக்கை 13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்தவர்களிடம் ஒப்பிட வேண்டாம் இது என்னுடைய கோரிக்கையாகும் என்று தெரிவித்தார்

“13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் – முட்டாள்கள்.” – கஜேந்திரகுமார் தாக்கு !

“13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் – முட்டாள்கள்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட்கிறார்களா? அரசமைப்பு என்றால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதன் பெறுமதி பூச்சியம். 35 வருடங்களாக இந்த அரசமைப்பில் – 13ஆம் திருத்தத்தில் ஏதோ இருக்கிறது. அதை நடைமுறைப் படுத்தவில்லை என்று கேட்பதா? தமிழர்கள் தமது பிரச்சினைக்கு தீர்வையடைவது எப்படி? அரசமைப்பு ஊடகத்தானே அதை அடையமுடியும் – வேறு எந்த வழியிலும் முடியாது.

அப்படி இருக்கும்போது இப்போதுதானே அதிகாரப் பகிர்வை பேசவேண்டும். ஆனால், இப்போது – அதுவும் ஒற்றையாட்சிக்குள் 13ஐ நடைமுறைப்படுத்தக் கேட்கிறார்கள். இந்த நேரத்தில்தானே, தமிழ்மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று ஒருமித்து கேட்க வேண்டும் அதை செய்யத் தயாரில்லை. இவர்களின் சமஷ்டி என்பது சும்மா பெயருக்குத்தான். 35 வருடங்களாக தோற்றுப்போன – எட்டாத இடத்தில் இருக்கும் 13இல் இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தலைமைகள் அல்ல. மடையர்கள் – முட்டாள்கள். ஆனால், இவர்கள் முட்டாள்கள் இல்லை – நிச்சயம் முட்டாள்கள் இல்லை. இந்நிலைக்கும் பூகோள அரசியலில் சீனாவின் வருகை முக்கியமாகிறது. இந்தியாவும் மேற்கு நாடுகளும் சீனாவிடம் இருந்து இலங்கை விடுபட வேண்டும் என்ற தேவை உள்ளது. அந்தப் பின்னணியில் அவை என்ன சொல்கின்றன என்றால், நீங்கள் சீனாவை கைவிடுங்கள் நாங்கள் தமிழனை ஒற்றையாட்சிக்குள் முடக்குகிறோம் என்று.

இதை தங்கள் முகவர்கள் – எடுபிடிகள் ஊடாக செய்கிறோம் என்பதே. சட்டத்தரணிகள், தங்களைத் தாங்களே மூத்த தலைவர்கள் என்று சொல்பவர்கள் தாங்களே நிராகரித்த 13ஐ இப்போது 30 வருடங்களின் பின்னர் நடைமுறைப்படுத்த கோருகிறார்கள். விக்னேஸ்வரன் அதைத் தாண்டி 13 தேவை – புதிய அரசமைப்பிலும் அப்படியே அது உள்வாங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவுக்கும் இதுவே வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் பேசிய போது போட்டுடைக்கும் வேலையை அவர் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது ! – வாசுதேவ நாணயக்கார.

இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13 ஆவது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்ற போதும் 13 ஆவது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபை தேர்தலில் தங்கியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்தாலும் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்தியாவின் தலையீட்டினால் 13 ஆவது திருத்தம் உருவாக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் இலங்கையின் நட்பு நாடாக இருப்பதனால் இந்த விடயத்தின் தீவிரத்தன்மை குறித்து அவதானம் செலுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து உரிய காலத்தில் இடம்பெறவிருந்த மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது என குற்றம்சாட்டிய வாசுதேவ நாணயக்கார இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முழுமையான ஆதரவு வழங்கியது என்றும் தெரிவித்தார்.