அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம்” – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கையின் மிக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகின்றார்.

அந்தவகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் –  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில்,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சில முக்கிய கோரிக்கைகள் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் தீர்ப்பதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை முழுமையாக பயன்படுத்தி இந்தச் சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றிடம் கோரியுள்ளனர்.

இந்த எழுத்தாணை கோரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர எக்கநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மக்களின் நலனுக்காக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன” – என்றார்.

“போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கடலட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு இன்று (07)  விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கடற்தொழிக்கு  இடையூறாக அமைந்துள்ள அட்டைப்பண்ணைகளை அகற்றக் கோரி இன்று நுாறாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  தாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் தங்களுடைய வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அட்டைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டு  வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதியின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.

“மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.”- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் நெகிழ்வுப்போக்கு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (19) வவுனியாவில் இடம்பெற்ற, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை.

இன்று நீங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும்.

நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

 

“வீட்டை காட்டி மோசம் செய்கின்றனர். புலி வாலை விடவும் முடியாமல், பிடித்திருக்கவும் முடியாமல் திணறுகின்றனர்.”- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த நோக்கத்துக்கு முகங்கொடுக்க முடிந்த செயற்பாட்டு தைரியத்துடன், நாங்கள் இந்த அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை சார்ந்த புதிய ஒழுங்கு விதிகள் மூன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எமது மக்கள் தங்களது வாக்குகளை எமக்கு வழங்கி, தங்களது பிரச்சினைகளை தீர்க்குமாறு வழங்கிய ஆணையானது எங்களை நிர்ப்பந்தித்து இருக்கின்றது.  எனவே, எங்களால் எமது மக்களுக்கு கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பங்களை கை நழுவ விட முடியாது.

அதன் காரணமாகவே, அரசாங்கங்களுடன் இணைகின்றபோது, நாங்கள் விதிக்கின்ற நிபந்தனைகள் பொது நிபந்தனையாகவே இருக்கின்றது. அது, எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே ஆகும்.

அதற்காக, அரசாங்கங்கள் எமது மக்களின் பிரச்சினைகளை எல்லாம் உடனடியாக தீர்த்துவிடும் என்ற எதிர்பார்ப்பினை மட்டும் முன்வைத்து, நாங்கள் செயற்படுகின்றவர்களும் அல்லர். எமது நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள், செயற்பாடுகள் காரணமாக எமது மக்களின் பிரச்சினைகளை போதியளவில் தீர்த்துக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு தடையற்ற பாதைகளை நாங்கள் திறந்துவிடுகின்றோம்.

அரசு அதில் பயணிப்பதில் தாமதங்களையோ சிரமங்களையோ எதிர்கொள்வதில்லை என்பது எமது மக்களுக்கு சாதகமான நிலைப்பாடாகும். இதற்கு மாற்றமான நிலைப்பாட்டினை கொள்கையாக வகுத்துக்கொண்டவர்கள் எமது சக தமிழ் அரசியல்வாதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.

எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல், அவற்றை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டும் அவ்வப்போது கையிலெடுத்து, பின்னர் தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகளை, தீராப் பிரச்சினைகளாக்கி, அந்த பிரச்சினைகளை எமது மக்களின் வீடுகளிலேயே குடியமர்த்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

அவர்கள் இதன் மூலம் எமது மக்களது வாக்குகளை சூறையாடி வருவதே முதலீடு இல்லாத பண்டமாற்று அரசியல் என கொள்கை வகுத்துக்கொண்டவர்கள்.  இதனை இப்போது எமது மக்கள் ‘வீட்டை காட்டி மோசம் செய்கின்ற செயல்’ என பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.

இத்தகைய கொள்கையின் வரைவிலக்கணமாகவே இவர்கள் இன்னமும் புலி வாலை பிடித்துக்கொண்டிருக்கின்றனர். மக்களின் மனங்களில் வருகின்ற மாற்றங்களின் முன்பாக, புலி வாலை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடித்திருக்கவும் முடியாமல் திணறுகின்ற இவர்கள், புலி வாலுக்குப் பதிலாக பூனை வாலை பிடித்திருக்கலாமோ என நினைக்கவும் கூடும்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாட தேவைகளை தீர்க்கின்ற வகையில் நாங்கள் உற்பத்தித் துறைகள் சார்ந்த முன்னெடுப்புகளை பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றோம். இந்நிலையில், இவர்கள் எமது மக்களது பிரச்சினைகளை தீர்க்காமல், தீர்க்கவிடாமல், பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

அத்தோடு நிற்காமல், எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற எமது வழிமுறைகளை இடைமறித்து, அதனையும் சீர்குலைத்து, எமது மக்களை நடுத்தெருவில் விடுகின்ற இவர்களது நோக்கங்களை பூர்த்தி செய்துகொள்வதற்கும் செயற்பட்டு வருகின்றனர்.

இவற்றுக்கு நாங்கள் அஞ்சியிருந்தால், இன்று எமது மக்கள் அனுபவிக்கின்ற எவ்விதமான வாய்ப்புகளும் மக்களுக்கு இதுவரையில் கிடைத்திருக்காது என்பதையும் மக்கள் அறிவர். நாங்கள் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கென்றே அரசியலில் காலடி எடுத்து வைத்தவர்கள். அதனையே நான் எனக்கு கிடைக்கின்ற அமைச்சுக்களின் மூலமும் நிறைவேற்றி வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

“மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.” என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.

மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு பலவற்றை நிறைவேற்றியுள்ளதோடு இன்னும் நிறைவேற்றுவேன்.

கடலட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகிறார்களோ..?  அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 5,000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பப்பட்டுள்ள நிலையில் சுமார் 1,150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயல்படுத்தப்படுகிறன.

நான் அமைச்சராக வர முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும், யாழ் மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் காணப்பட்டன.

நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும்163 பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது.

யாழ் மாவட்டத்தில் 245 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.

பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்தப் பண்ணைகளுக்கும் சீனர்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். அங்கு இருக்கின்ற சீனர்களை தவிர வேறு யாரும் இதுவரை கடலட்டை பண்ணை செயற்பாடுகளில் வடக்கில் ஈடுபடவில்லை.

நாரா நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் போன்றவற்றினால் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் தழுவல் அடிப்படையில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கான அனுமதிகளை உரிய ஒழுங்கு முறைகளில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான காலத்தை, வீண் விரயமாக்க கூடாது என்பதனாலேயே தழுவல் முறையில் வழங்கப்படுகின்றன.

ஏனினும், தன்னிச்சையாக யாராவது அனுமதிகள் இன்றி கடலட்டை பண்ணைகளை அமைப்பார்களாயின் அவை அகற்றப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் 95 வீதமானவை அந்தந்தப் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருகினனறன.

அவ்வாறு, என்னை அணுகியவர்களிடம் வருடாந்தம் இரண்டரை கோடி கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்து எமக்கு வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளேன்.

அவர்கள் யாராக இருந்தாலும், எமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்.

என்னை பொறுத்தவரையில் இந்தியாவா சீனாவா என்ற வினா எழுப்பப் படுமானால் இந்தியாவே என கூறிக் கொள்வதோடு கடல் சார்ந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் வினைதிறனாகவும் செயல்படுத்தப்படும்´” என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்க அரச அதிபர் தலைமையில் குழு !

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தக் அகுழு நியமிக்கப்பட்டது.

விஷேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.