இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

“எமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” – அனுரகுமார திசாநாயக்க

“எமது ஆட்சியில் மத கலாசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று தங்காலையில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்வதற்கு தேசிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி தொடர்பாக இன்று பலர் வீண்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பலர் அரசியல் பதவிகள் மற்றும் தனிப்பட்ட லாபம் கருதி கட்சித்தாவல்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவாக இருந்தாலும் அல்லது வேறு எந்தவேட்பாளர்களாக இருந்தாலும் எத்தகையை கூட்டணிகள் அமைத்தாலும் நாட்டு மக்களை ஏமாற்றமுடியாது.பொதுமக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் உள்ளனர்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சரியான நேரத்தில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் – எம்.ஏ.சுமந்திரன்

சரியான நேரத்தில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழு தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கேள்வி எழுப்பப்படுகின்றது.

கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் தான் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம்.

இந்த தடவை அது ஒரு வித்தியாசமாக வரவேண்டும் என்ற எந்த தேவையும் கிடையாது. எல்லா வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.

அவர்களின் தேர்தல் அறிக்கையில் முழு நாட்டுக்கும் என்ன சொல்லியிருக்கிறார் என பார்த்து சரியான நேரத்தில் அறிவிப்போம்” என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – முப்பது நாட்களில் 300 முறைப்பாடுகள்!

தேர்தல் தொடர்பில் 24 மணித்தியாலங்களில் 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 11 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் ஏனையவை தேசிய தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று(12) வரை 366 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு !

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை சட்டத்தரணியான ஷான் ரணசூரிய தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக போட்டி ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி சார்பில் சட்ட மாஅதிபர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தினால் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், தான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளமையினால், பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நீதி அமைச்சர் பதவிக்கு அலி சப்ரியை நியமித்துள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதுடன், தனது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் !

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறினர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்  திருநெல்வேலி பகுதியில் கடந்த இன்று 8 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏன் ஜனாதிபதி பொதுவேட்பாளரை நிறுத்தினோம் ..? – விளக்குகிறார் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன்!

மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம் என சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு மூன்று பேரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பா. அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 07 கூட்டணிக் கட்சிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளடக்கப்படவில்லை.

இக் கட்சிகளுடன் சிவில் சமூக அமைப்புகள் பேச்சு நடத்தியிருந்தன. ஆனாலும் இக் கட்சிகள் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்க மறுத்துவிட்டன.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பலமான விருப்பத்தின் பேரில் 07 கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது அவசியமற்றது என பல தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அன்றி தமிழ் தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன் – ஜனாதிபதி பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்

தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும்.

 

தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது.

 

சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர் முயற்சியாகும்.

 

பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன். இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன் என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார்.

தமிழ் மக்கள் பொதுச்சபையினதும் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளதும் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டார் !

வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் அரசியல் தரப்பிடம் அபிவிருத்தி குறித்து எந்த திட்டமும் இல்லை – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

அதிகாரபரவலாக்கம் குறித்தும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பும் தரப்பினாிடம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தீா்வுத்திட்டங்கள் எதுவும் இருக்கின்றதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளாா்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளாா்.

13 ஆம் திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பரவலாக்கல் குறித்தும் பலர் என்னிடம் வினவியிருந்தனர் நான் இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன்.

இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அனைவரினதும் நிலைப்பாடு என்ன? நான் அரசியலமைப்பில் உள்ள விடயங்களையம் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருந்தேன் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாா்.

அத்துடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும் எனவும், எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தொிவித்தாா்.

வடக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் தெற்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை எனவும், அவா்களுக்கான சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டினை வளா்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.