ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தி

“புதிதாக உருவாகவுள்ள சஜித் கொரோனா கொத்தணி.” – காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில் அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. நாட்டில் கொரோனா இருப்பது எதிரணி உறுப்பினர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்குத் தெளிவில்லை என்பதுதான் அவர்களின் நடத்தைமூலம் அறியமுடிகின்றது.

ஆரம்பத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி ஏற்பட்டது. அதன்பின்னர் புத்தாண்டு கொத்தணி உருவானது. ஆசிரியர்களின் போராட்டத்தாலும் கொத்தணி பரவியது.

சஜித்தின் போராட்டத்தில் சஜித் கொத்தணியும் உருவாகும் அபாயம் உள்ளது. எமது அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. தேர்தல் ஊடாக அரசை வீழ்த்துங்கள். மாறாக மக்களைப் பணயம் வைக்க வேண்டாம்” – என்றார்.

அரசுக்கு எதிராக கொழும்பை முற்றுகையிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் கொழும்பில் இன்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர்த் தியாகம் செய்வதற்கும் நாம் தயார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

காவல்துறை உள்ளிட்ட அரச படைகளின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும், நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் பேரணி ஆரம்பமாகி, ஹெட் பார்க் மைதானம் வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்துடனான கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தால் கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த அரசாங்கம் இலங்கை மக்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எனவும் எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“இவ்வாறு ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு டொலர் பிரச்சினை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உரம், கிருமி நாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி தடை மற்றும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக இன்று மரக்கறி விலைகள் வானம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை பொதுமக்களினால் பொருத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்களின் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள பின்னணியில், அவர்கள் கொள்ளையடிக்கும் நிலைக்கும், தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பழைய தலைவர்களுக்கு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதனை ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டை புதிய தலைமுறைக்கு கையளிக்க வேண்டும்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கு கூட இன்று தமது பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலைமை எழுந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள பிரச்சினையை அனைத்து மக்களும் எதிர்நோக்கியுள்ளமை மற்றும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காத பிரச்சினை ஆகியவற்றினாலேயே இவர்களுக்கு தமது பிரதேசத்திற்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை மறைப்பதற்காக தனிமைப்படுத்தல் சட்டம், இரகசிய பொலிஸாரை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை தவறாக கையாளுதல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறான விடயங்களினால், இந்த பிரச்சினைகள் வலுப் பெறும் எனவும், மக்களை இனிவரும் காலங்களில் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

“ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி நடந்துள்ளது.” – நாடாளுமன்றில் மனுஷ நாணயக்கார !

ஈஸ்டர் தாக்குதலை விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுந்தரப்பு உறுப்பினரும் கோபா குழு தலைவருமான கலாநிதி திஸ்ஸ விதாரணவினால்  கொண்டுவரப்பட்ட அரச கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு காவல்த்துறை அதிகாரிகள் கொலைசெய்யப்பட்ட வேளையில் அவர்களை கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலை புலிகளின் மேல் சுமத்தினர்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமான 42 வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன, தேசிய பாதுகாப்பு நெருக்கடி, பிணைமுறி ஊழல் என்பவற்றை கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மத்திய வங்கி ஊழல் வாதிகளையோ அல்லது ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளையோ பிடிக்க முடியவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து  தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை.பொதுமக்கள் அரசதலைவரிடமும் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை.

ஷாரா என்ற பெண் எங்கே? என நாமும் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அவரது மரபணுவை பெற்றுக்கொண்டு அவர் இறந்துவிட்டார் என நிருப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவிற்கு தப்பிசெல்ல விட்டீர்களா என்ற உண்மையை எமக்கு தெரிவிக்க வேண்டும்.

ஏன் அரசாங்கம் இவற்றை மூடி மறைக்கின்றது. அதுமட்டுமல்ல சஹாரானின் மனைவின் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை ஏன் வெளிப்படுத்தவில்லை. அவரது வீட்டிற்கு வந்த புலனாய்வு அதிகாரி யார்?

உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில் சகலரும் அச்சமடைகின்றனர். தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளை தீர்க்க ஆட்சிக்கு வந்தவர்கள் உண்மையில் என்ன நடந்தது என கூறுங்கள் என்றார்.

இது குறித்து கேள்வி எழுப்பும் வேளையில் எம்மை அடக்காது உண்மை என்ன என்பதை கூற வேண்டும் என்று மனுஷ நாணயக்கார சபையில் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கடன்களுக்கு மகிந்தராஜபக்ஷவே காரணம்.” – ஹர்ச டி சில்வா காட்டம் !

“இலங்கை இன்று செலுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனுக்கும் காரணம் மகிந்தராஜபக்ஸவே.” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கம் வருடாந்தம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பில்லியன் டொலர் கடனும் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த சமயத்தில் பெற்றுக்கொண்டவை. சுற்றுலாத்துறை மூலம் இலங்கை  ஒருபோதும் 5 பில்லியன் டொலர்களை அந்நிய செலாவணியாக பெற்றுக்கொண்டதில்லை.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கப் பெறும் 5 பில்லியன் டொலர் தற்போது முற்றாக இல்லாமல் போயுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையின் ஊடாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாக 4.5 பில்லியன் என்ற அதிகபட்ச அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றது. மாறாக ஏனைய வருடங்களில் சராசரியாக 2.4 பில்லியன் மாத்திரமே சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கப் பெறும். இலங்கையின்  அந்நிய செலாவணி கிடைக்கப் பெறும் அதேவேளை இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது 1.6 பில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான காரணம் கொவிட் தொற்று அல்ல. அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமேயாகும். கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் 0.7 வீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 4.5 வீதமளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தடுப்பூசி கொள்வனவு உள்ளிட்ட கொவிட் செலவுகளுக்காக உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றன.

கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களையே தற்போது தாம் செலுத்திக் கொண்டிருப்பதாக அரச தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. காரணம் கடந்த ஆண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2010 இல் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற கடனாகும். அதேபோன்று இவ்வாண்டு செலுத்திய ஒரு பில்லியன் டொலர் 2011 இல் மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்டதாகும். இவ்வாண்டு ஜூலை மாதமளவில் பெற்றுக் கொண்ட ஒரு பில்லியனும் 2012 இல் தனது சகோதரன் பெற்றுக் கொண்ட கடன் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். நாடு தற்போது பாரிய அபாயத்தில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்றும், அஜித் நிவாட் கப்ரால் முஸ்லிம் நாடுகளிடம் கடன் பெறுவார் என்றும் அரச தலைவர் செயலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இங்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். அவ்வாறிருக்கையில் எவ்வாறு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பத்து மாதங்களில் ராஜபக்ஷக்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு..? – அம்பலப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி !

தற்போதைய அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

மேலும் பேசிய அவர் ,

குறித்த பெ2.3 டிரில்லியன் பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது..? என வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை தீர்பதற்கே குறித்த கடன்தொகை பெறப்பட்டது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் தாமரை கோபுரம், துறைமுகங்கள், மைதானங்கள், விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் குடும்பத்தினர் பயணம் செய்வதற்கும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.

“சஜித்பிரேமதாஸ தரப்பினரை மாற்று அணியாக கருத முடியாது.” – கட்சி உறுப்பினர் பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியை மாற்று அரசியல் சக்தியாக மக்கள் இன்னும் கருதவில்லை என்று அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீரிகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியதாவது:-

தற்போதைய அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் மாற்று அரசியல் சக்தியாக, ஐக்கிய மக்கள் சக்தியை இன்னும் கருதத் தொடங்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த 50 வீதமானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் .

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட கட்சியின் பல உறுப்பினர்கள் மீது எவ்வித ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களும் கிடையாது. ஊழல், மோசடிகளைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசைச் சேர்ந்தவர்களில் சிலரே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் – என்றார்.

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” – ஐக்கிய மக்கள் சக்தி

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த வைரஸால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச உறவினர்களால் வந்த வைரஸால் மக்கள் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

ராஜபக்ச அரச தரப்பினர் நாட்டின் பெரும் பகுதியைச் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். சங்ரிலா ஹோட்டல் பகுதி, துறைமுக நகர பெரும் பகுதி ஆகியவற்றை சீனாவுக்கு வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள். நாட்டின் சொத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றனர்.

இதன் உச்சமாக கடந்த வாரத்தில் இந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களினதும் உரிமத்தை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்துவிட்டனர். கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் திறைசேரிக்குச் சொந்தமானவை. 23.9 சதவீத பங்குகள் ஊழியர் சேமநல நிதியத்துக்குச் சொந்தமானவை.

இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசைப் போன்று பொய் கூறும் ஓர் அரசைப் பார்த்ததில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகின்றார். ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை .” என்றார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி !

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (06.04.2021) கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

அதற்காகவே வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மாகாண சபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு” – ஐக்கிய மக்கள் சக்தி

“மாகாண சபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) ஆரம்பித்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், அதற்கான யாப்பு உருவாக்கப்பட்டு சம்மேளனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுக்கும் ஒன்றாய் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை ஜனநாயக ரீதியாக முன்வைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்ட முற்போக்கான எண்ணப்பாட்டில் கூட்டணிக்கான யாப்பு வரைவுச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஜனநாயகத்தை மதிக்கும் சகலரும் இதில் இணைந்து கொண்டு செயற்பட முடியுமான சூழலை இதன் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பிரவேசம் நிலைத்தல் தன்மை கொண்ட ஏற்பாடாகும்.  கட்சியின் யாப்பு முழுமையாக ஜனநாயக ரீதியான ஏற்பாடுகளை உள்வாங்கிய முற்போக்குத் தன்மை வாய்ந்த யாப்பாகும். தகுதி மற்றும் ஆற்றல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொரும்பான்மையினரின் ஆதரவிலும் ஒப்புதலிலும் தான் பதவிநிலை நியமனங்கள் வழங்கப்படும். நியமனங்களுடன் பதவிகளுக்கான வேலைத் திட்டங்களும் வழங்கப்படும்.வெறும் நாம ரீதியான பதவிகள் நபர்களை இலக்காகக் கொண்டு வழங்கப்படமாட்டாது.

உலக நாடுகள் மற்றும் நாட்டில் பரவும் கொரோனா தொற்றால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து பத்திரிகைகளுக்கும் இந்தக் கொரோனா தொற்று பெரும் சவாலாக காணப்படுகின்றது. பத்திரிகைகளின் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எவ்வித நிபந்தனை களுமில்லாது நாம் அதற்கு ஆதரவு வழங்குகின்றோம். ஊடகங்களை நிராகரித்துவிட்டு பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்ற அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதற்காக நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஊடகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கத் தயங்க மாட்டோம்.

எமது கட்சி உருவாகி ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில், நாம் ஜனநாயக ரீதியிலான யாப்பொன்றை உருவாக்கியுள்ளோம். 75 பேரடங்கிய மத்திய செயற்குழு அமையவுள்ளது. இந்த மத்திய செயற்குழுவில் தலைவரால் 50 உறுப்பினர்களின் பெயர்களைப் பிரேரிக்க முடியும். ஆனாலும் பிரேரிப்பதைக் கூட செயற்குழுவிடமே விட்டுள்ளேன். ஏனெனில் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு உறுப்பினரின் தகைமைகளையும் பரிசீலிக்க வேண்டும். மத்திய குழுவின் ஒவ்வொரு நிர்வாக உறுப்பினருக்கும் வெவ்வேறு வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிப்பதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய இடத்தையளிப்பதே எமது கட்சியின் கொள்கை. எமது கட்சியைப் பொறுத்தவரையில் ஆயுட்காலத் தலைவர் என்று எந்தப் பதவியும் இல்லை. தலைமைத்துவத்தை மாற்ற முடியும்.

எமது கட்சி உறுதியானது. தற்காலிகமான கட்சி அல்ல. நீண்ட தூர பயணத்துக்காகவும் தூர நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். கூட்டமைப்பு அமைக்கும் போது எவர் வந்தாலும் நாம் இணைத்துக்கொள்வோம். அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி வந்தாலும் நாம் அதனையும் இணைத்துக்கொள்வோம்.

இது எமது புதிய அரசியல் பயணம் ஜனநாயகத்தை நோக்கிய பயணம். எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம்.13ஆவது  அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். வெளிநாடுகளுக்குச் சென்று 13 பிளஸ் என்று சொல்லிக்கொண்டு இங்கு அதற்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் நிலையில் நாமில்லை. 13 ஆவது அரசியலமைப்பால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த மாகாணசபை முறைமை இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அதுவும் தற்போதுள்ள நிலையிலேயே மாகாண சபை முறைமைகள் இருக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. இதேவேளை, மாகாண சபை முறையை பலப்படுத்த வேண்டுமே தவிர, அதனை பலவீனப்படுத்த எத்தனிக்கக் கூடாது. சிலர் மாகாண சபை முறையை வலுப்படுத்தாது பலவீனப்படுத்து கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
நாட்டின் இனப்பிரச்சினைக்கு கடந்த 72 வருட காலமாகவே எவ்வித அரசியல் தீர்வும் வழங்கப்படவில்லை. அதுவும் ஜே.ஆர். ஜெயவர்தனவே மாகாண சபை முறை மூலம் தீர்வொன்றை வழங்கியிருந்தார்.

ஆரம்பத்தில் நானும் அதில் ஓர் உறுப்பினராக இருந்தேன். எனவே மாகாண சபை முறைமையை பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.