நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் 88 அரச நிறுவனங்களை விற்பனை செய்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
விற்பனை மற்றும் கடனை பெறுவதன் மூலம் நாடு முன்னேறி இருந்தால், அதற்கான வெற்றிக்கிண்ணத்தை ரணில் விக்ரமசிங்கவே பெற்றிருப்பார். எமது நாட்டுக்கு கடனை பெற முடிந்த தலைவர் அல்லது தலைவர்களை தேட வேண்டுமா?. அடுத்தது விற்பனை, விற்பனை என்பது புதிய விடயமல்ல. எமது நாட்டில் தொழிற்சாலைகள் இருக்கின்றதா?. எதுவுமில்லை. 1980,83 மற்றும் 83 ஆம் ஆண்டுகளிலேயே முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
துல்ஹிரி, மத்தேகொட, பூகொட துணி உற்பத்தி தொழிற்சாலைகளை விற்பனை செய்தனர். 30 ஆண்டுகளாக அனைத்தையும் விற்பனை செய்தனர். இதுவரை 88 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.
நாட்டின் பொருளாதர பிரச்சினைக்கு கடன் பெறுவதே தீர்வு என்றால், ரணில் அந்த காலத்திலேயே நாட்டை முன்னேற்றி இருக்கலாம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று ஒரு பில்லியன் டொலர்களை பெற்றனர். எங்கே அந்த பணம். நாடு முன்னேறி இருந்தால், ஏற்கனவே முன்னேறி இருக்க வேண்டும்.
விற்பனை செய்வதும், கடனை பெறுவதும் எமது நாட்டை முன்னேற்றும் வழிகள் அல்ல. அதற்குள் கொள்ளைகள் நடக்கின்றன. ஹிங்குரான சீனி தொழிற்சாலையில் கொள்கை நடக்கின்றது.
ஹிங்குரான சீன தொழிற்சாலையை விற்பனை செய்யும் போது 6 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டிருந்ததுடன் 600 ஏக்கரில் கன்றுகள் பயிரிடப்பட்டிருந்தன. எனினும் களஞ்சியத்தில் இருந்த சீனியின் பெறுமதியை விட குறைவான விலைக்கே தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டது.
செவனகல தொழிற்சாலையை ரணில் யாருக்கு விற்றார்? தயா கமகேவுக்கு விற்பனை செய்தார். புத்தளம் சீமெந்து தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டது. எங்கே அந்த பணம்? புத்தளம் சீமெந்து தொழிற்சாலையை விற்பனை செய்யும் விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தது.
அன்று டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர் எயார் லங்கா விற்பனை செய்யப்பட்டது. இது பகிரங்க கொடுக்கல், வாங்கல் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.