யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

“யாழில் வீட்டுத்திட்டமாக வழங்கப்பட்ட 700 வீடுகளில் மக்கள் யாருமே இல்லை.” – அங்கஜன் இராமநாதன் விசனம் !

வீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் நிரந்தமாக மக்கள் குடியேறாத நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

சில நடைமுறை சிக்கல்கள் உட்பட வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.

வீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் தங்களின் காணிகளில் குடியேற வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாகவும் வீடுகள் இல்லாத காணிகளில் எவ்வாறு தாம் குடியேறுவது என மக்கள் கேட்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டு திட்டங்கள் முன்னர் வழங்கப்பட்ட பலர் வீடுகளை தமது காணிகளில் கட்டிவிட்டு அவர்கள் வேறு இடங்களில் வசிக்கின்றனர் என்றும் குறித்த வீடுகளை தங்கள் “விடுமுறை விடுதியாக” பலர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் வீட்டு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி போதாது என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்றும் தற்போதைய விலைவாசி அதிகரிப்பு இதற்கு காரணம் என்றும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் !

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடிய ஊடகவியலாளர்கள் கறுப்புக் கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெறும் நோக்கில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து ஊடக அமைப்புக்களும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“வடக்கு மக்களின் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.” – யாழில் நீதியமைச்சர் !

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு, காலடியில் அரச சேவையை வழங்குவதற்கு நீதி அமைச்சு தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

வடக்கில் 5 நாட்கள் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது. 2,850 பேர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.  இவர்களில் அரைவாசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,525 பேருக்கான முடிவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

41 பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண முடியாது. அவை எமது அமைச்சுக்கள் வரவில்லை. வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடமாடும் சேவையை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்து கிழக்கு மாகாணத்திலும் அதன் பின்னர் தெற்கு மாகாணத்திலும் இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளோம். சுமார் 500 அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் அறிய கூடியதாக இருக்கும். போரால் பாதிக்கப்பட்ட மாகாண என்ற அடிப்படையில் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.- என்றார்.

“வடக்கில் சீனாவும் இந்தியாவும் வருவது தமிழ் மக்களுக்கு நன்மையானதே .” – வாசுதேவ நாணயக்கார பூரிப்பு !

“வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.” என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது எமது நடுநிலையாக செயற்பட்டு இருந்தது. தற்போதும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுக்ன்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவும்வில்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும். வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.

காஸ் சிலிண்டர் பிரச்சனை தொடர்பில் நாம் பேசியிருக்கின்றோம். தேவையான காஸ் சிலிண்டர்கள் இருக்கின்ற போதும் அதில் பிரச்சனைகள் உள்ளன. அதனை பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்க அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

யுகதனவி ஒப்பந்த விவகாரம் தொடர்பில் நாம் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அதற்கு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கவுள்ளது. நாம் கூறியது போன்றே அது வரும் என நம்புகின்றோம். இந்த விடயத்தில் இரண்டு, மூன்று அணிகளாக செயற்படுவதைப் பார்க்கின்றோம். இருப்பினும் அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் நாம் மீண்டும் கலந்துரையாடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் கரையொதுங்கும் மனித சடலங்கள் !

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன், கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கடந்த சனிக்கிழமை வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த  செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தன.

கரையொதுங்கிய ஆறு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் கிறித்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம்- கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட 18 வயது மகளும் அவருடைய தாயும் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம்-  மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண், தன்னுடைய பச்சிளம் குழந்தை ஒன்றை நிலத்தில் புதைப்பதற்கு அவருடைய தாயாருடன் முனைந்ததாக அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் இருவரும் செயற்படும்போது, குழந்தை அழுததால் தாம் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை உணர்ந்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியதாக பொலிஸாரின் விசாரணைகளில் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், குழந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயல்வீட்டாரின் மிலேச்சனத்தனமான தாக்குதலால் 55 வயதுடைய நபர் படுகாயம் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) மாலை 2 மணியளவில் பழைய பகையின் காரணமாக அயல் வீட்டார் பணி நிமிர்த்தம் வெளியே செல்லும் போது மற்றுமொரு அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து மிலேச்சத்தனமாக போத்தல்கள் மற்றும் கம்பிகளால் தாக்கப்பட்ட சம்பவமே இவ்வாறு பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு யாழ்.போதனா  வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை !

யாழ்ப்பாண மாவட்டத்தில்  நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் பொறுப்பு வைத்திய அதிகாரி ம அரவிந்தன் தெரிவித்தார் .

இன்று  (திங்கட்கிழமை) தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்நீரிழிவு சிகிச்சை முகாதினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்  மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பாக இளவயதினர் சேர்ந்தவர்களுக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது ந தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும் அல்லது நோய் தொற்று காணப்பட்டால் அதனை முறையாக பின்பற்றி குணப்படுத்த முடியும் எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என அவர தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம்  யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு  சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும்  நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டுள்ளமை”குறிப்பிடத்தக்கது

வருடா வருடம் வெள்ளக்காடாகும் யாழ்ப்பாணம் – நிவாரணப்பொருட்கள் கையளிப்பதுடன் முடிந்து போகும் பெருஞ்சோகம் !

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. இந்த தடவை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளே கடந்த வருடமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். கடல் பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் கூட வெள்ளப்பெருக்கை முறையாக கட்டுப்படுத்தி அனர்த்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்கின்ற நிலையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் வருடா வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பக்கத்தில் குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை வாய்க்கால்களிலும் வடிகால்களிலும் கொட்டி மூடிவிடுகின்றமையால் வடிகாலமைப்பு தொகுதிகள் முழுமையாக குப்பைகளால் நிறைந்து போயுள்ளன. நீர் போகவழியில்லாது பெரிது பெரிதாக எழுப்பப்ட்டுள்ள சுவர்கள் என இந்த வெள்ளப்பெருக்குக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் அனைவரும் மட்டுமே.

மாநகரசபைகளும் – பிரதேசசபைகளும் மழைக்காலத்தில் மட்டுமே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களை பாதுமுகாக்கும் நோக்கமுடையாராயின் வெள்ளம் வருவதற்கு முன்பே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வந்த பிறகே வெள்ளம் பற்றியும் சிந்திக்கிறார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த வெள்ள காலகட்டங்களில் மேற்கொள்ளும்  பணிகள் அளப்பரியன. பாராட்டுதற்குரியன. ஆனால் பொருட்களை கொடுப்பதற்கு அப்பால் கடந்த வருடமும் வெள்ள காலத்தில் மக்கள் இடர்பட்ட அதே பகுதிகள் இந்த வருடமும் இடர்படுகின்றன. ஏன் இவ்வாறு குறித்த பகுதிகள் மட்டும் அனர்த்தத்துக்குள்ளாகின்றன..? அதற்கான தீர்வு திட்டங்கள் போன்றன தொடர்பில் அறிக்கைகளை தயாரித்து சம்பந்த தரப்பினரிடம் சேர்க்க வழி செய்வதுடன் அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் தன்னார்வ அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ன என்ன பதில்களையெல்லாம் கூறப்போகிறார்கள் என !