உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் மீளவும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதை அடுத்து பிரான்ஸிலும் கொரோனா 2ம் அலை வேகமாக வீச ஆரம்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் 7.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 32,942 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில், பாரிஸ், லில்லி, லியோன், மார்சில்லி, துலூஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முக்கிய நகரங்களில் சனிக்கிழமை முதல் 4 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊடரங்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இதுபற்றி தொலைக்காட்சி பேட்டியின்போது பேசிய ஜனாதிபதி மேக்ரான், ‘ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்திலும், லில்லி, கிரெனோபில், லியோன், மார்சில்லி, ரூவன், செயின்ட்-எட்டியென், மான்ட்பெல்லியர், துலூஸ் நகரங்களிலும் இந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்’ என்றார்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், கட்டுப்பாட்டை நாம் இழக்கவில்லை. நம்மை கவலையடையச் செய்யும் சூழ்நிலையில் இருக்கிறோம். தொற்றுநோயின் முதல் அலையின் தாக்கத்தை வைத்து இந்த முடிவுகளை எடுத்துள்ளோம் என்றும் மேக்ரான் குறிப்பிட்டார்.