அனுர குமார திசாநாயக்க

அனுர குமார திசாநாயக்க

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும் விழாக்களுக்காக 30 வீத கேளிக்கை வரி – ஜே.வி.பியின் பொருளாதார அறிக்கை உண்மையா..?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கையின் வரைபென குறிப்பிடும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, பொருளாதார நிர்வாக சபை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு ஆகியன இணைந்து கடந்த 06 மாதங்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த இறுதி வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், 3/5/ 2024 0034 P EC என வரைவின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இவ்வாறு பகிரப்பட்டுள்ள ஆவணத்தில், தனிநபர் கையிருப்பு மதிப்புக் கணக்கீடு என்ற துணைத் தலைப்பின் கீழ் பொதுமக்கள் வைத்துள்ள தங்கம், வைரம் மற்றும் இரத்தின நகைகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தங்க கையிருப்புடன் கூடுதலாக தனியார் கையிருப்பு மதிப்பை கணக்கிடுவதே இதன் நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் திருமணம், பிறந்தநாள் விழாக்கள், ஒன்றுகூடல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் எனவும், அதற்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய கலாச்சார கூட்டு நிதியத்தில் இவை சேமிப்பில் வைக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்பொருள் அங்காடிகளில், உணவகங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது ஒரு தடவைக்கான தனிப்பட்ட பாவனை அதிகபட்ச கொள்வனவுத் தொகை இருபதாயிரம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டுமே உள்நாட்டு எரிவாயு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஆவணம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என அக்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ள காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் இந்த ஆவணம் அக்கட்சியினதா என factseeker ஆராய்ந்து பார்த்தது.

 

இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபெசின்ஹ மற்றும் கட்சியின் ஊடகப் பிரிவிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார கொள்கை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை எனவும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த ஆவணம் போலியானது என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தியிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தற்போது வரையிலும் நில அளவையாளர்கள், பொறியியலாளர்களின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சித் திட்டம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

ஆகவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணமானது தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைத்திட்டம் அல்ல என்பதையும் அது போலியான ஆவணம் என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.

A Note to hon. Anura Kumara Dissanayake – மாற்றத்துக்கான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்.

A Note to hon. Anura Kumara Dissanayake

மாற்றத்துக்கான புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்.

என்னுடைய பெயர் மனோரஞ்சன். நான் கனடாவில் இருந்து இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு இந்த சந்தர்ப்பத்தை தந்த NPP அமைப்பாளர்களுக்கு நன்றி. `நாங்களும் மாற்றத்தை வேண்டியே`… V 2 for Change என்ற கோசத்துடன் இலங்கையில் மாற்றத்தை வேண்டி நிற்கும் மக்களுடன் கைகோர்க்க விரும்பும் நாம் `மாற்றத்தை விரும்பும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்` என்னும் ஒரு சிவில் மக்களின் கூட்டு. அதன் சார்பிலும் நாங்கள் தோழர் அனுர குமார திசானாயக்கவை வரவேற்கிறோம்.

 

கடந்த மார்ச் மாதம் 23ம் திகதி கனடா டொரொண்டோ நகரில் வைத்து, இலங்கை மக்களின் சாபக்கேடான 30 வருட யுத்தத்திற்கு அடிப்படையான, இலங்கையின் தேசிய இனப் பிரைச்சினை தொடர்பாக நீங்கள் முன்வைத்த கருத்துக்களினால் ஏற்பட்ட நம்பிக்கையில் உந்தப்பட்டுதான் நாம் இன்று இங்கு வந்திருகிறோம்.

 

 

அதே டொரொன்டோ நகரில் மண்டபம் நிறைந்த மக்களின் முன்னால் நீங்கள், “எமது நாட்டில் இனவாதம், மதவாதம் என்பது ஒரு அரசியல் என்றும், அது சமூகங்களைப் பிரித்து ஒன்றோடொன்று மோதவிடும் அரசியல் உபாயம் என்றும், எமது நாட்டுத் தலைவர்களால் அத்தகைய ஒரு கடைகெட்ட அரசியல் செப்யப்பட்டது” என்றும் கூறினீர்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அதற்கு நேர்மாறான அரசியலான இனங்களை ஐக்கியப்படுத்தும் `தேசிய அரசியலைச்` செய்யும் என்றும் கூறினீர்கள். மக்களைப் பிரித்து ஆளமாட்டோம் என்ற உங்கள் அந்தக் கருத்தை, அதன் அரசியல் முக்கியத்துவம் கருதி, இந்த ஐக்கிய இராய்சசியத்தின் மண்ணில் வைத்தும் இந்த மக்கள் முன்னாள் இன்னொரு முறை ஒரு பிரகடனமாக நீங்கள் செய்யவேண்டும் என்று உங்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம். .

 

 

ஏனெனில், மாற்றத்தை விரும்பும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சார்பாக ஒரு ஆவணத்தை “சூரியன் மறையாத சாம்ராச்சியத்தைக்” கொண்டிருந்ததாக பெயர்ப்பற்ற இந்த நாட்டின் தலைநகர் இலண்டனில் வைத்து உங்களிடம் கையளிக்க கிடைத்தமை, வரலாற்று விதியின் ஒரு அங்கம் என்றும் நாம் கருதுகின்றோம். இந்த ஆவணம் இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் மட்டுமல்ல பெரும்பான்மை சிங்கள மக்களின் நலனில் இருந்துமே உங்களிடம் கையளிக்கப்படுகிறது.

 

250 ஆண்டு காலம் `சூரியன் மறையா சாம்ராச்சியத்தினால்` ஆளப்பட்டும் கூட, இன்று சூரியனை இழந்த இருண்ட தேசமாக, இருளிலே திசை தெரியாமல் தடவித் திரிகின்ற ஒரு தேசமாக எமது தாய் நாடு ஏன் ஆகிப்போனது என்பது நம் சகலருக்கும் தெரியும். எமது நாட்டை 75 வருடமாக ஆண்ட பெரும்பாலான தலைவர்கள், சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள், பெரும் பெயர்பெற்ற இடதுசாரித் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பேரறிஞர்கள் எனப் பலரும் இந்த `சூரியன் மறையா சாம்ராசியத்தின் ‘ உற்பத்திகள்தான் என்பதும் ஓர் இரகசியமல்ல. அந்த அரசியல் தலைவர்களின் `அரசியல் கொள்கைகளும், அரசாட்சியும், ஆட்சிக் கலையுமே’ நம் சூரியன் காணாமல் ஆக்கப்பட்டதற்கு காரணம் என்பதும் நாம் எல்லோரும் புரிந்துகொண்டுள்ள விடயமாகும்.

 

 

ஆனால் தொழர் அனுர, நீங்கள் இந்த “சூரியன் மறையா சாம்ராச்சியத்தின் ” உற்பத்தியல்ல. அதனால், நீங்கள் எங்களை பிரித்து ஆள மாட்டீர்கள் என்று நாம் நம்புகின்றோம். அந்த `பிரிதாளும் கருத்தியல்` சிறு அளவிலேனும் உங்களுக்குள்ளும் எங்காவது ஒளிந்து, உறைந்து இருந்தால், அதை தொப்புள் கொடியுடன் அறுத்து அந்த கேடுகெட்ட கருத்தியலை உருவாக்கியவர்களிடமே கையளித்துவிட்டு நீங்கள் எம் தாய் நாட்டை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நாம் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அதை உங்களால் செய்ய முடியும் என்றும் நாம் நம்புகின்றோம். நாம் எதிர்பார்க்கும் அந்த மாற்றத்தை செய்யக்கூடிய அரசியல் நேர்மை உங்களுக்கு இருக்கும் என நாம் நம்புகின்றோம். அதற்கான ஆன்ம பலத்தை உங்கள் கட்சியும் உங்கள் அமைப்பும் உங்களுக்குத் தரும் எனவும் நாம் நம்புகின்றோம். அதற்கான அரசியல் பலத்தையும், அதிகாரத்தையும், தைரியத்தையும், தார்மீக உரிமையயும் இலங்கை வாழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் உங்களுக்கு தருவார்கள் என்பதே எமது பெரும் எதிர்பார்ப்பாகும்.

 

 

எமது நாட்டின் அந்த இருண்ட நிலையை மாற்றி, எமக்கேயான ஒரு ஒளிமயமான, புதிய சூரியன் உதிக்க வேண்டும் என்ற ஆவலில் இலங்கையில் தெருக்களில் இறங்கி குரலெழுப்பிய அந்த இலட்சக் கணக்கான மக்களின் குரலோடு, இளம் சமுதாயத்தினரின் குரலோடு நாமும் இணைவதற்காகவே இந்த மண்னில் வைத்து இந்த ஆவணத்தை இன்று உங்களிடம் கையளிக்கின்றோம்.

 

20024ம் ஆண்டுத் தேர்தல் என்பது எமது நாட்டுக்கான ஒரு புதிய அரசியல் பயணத்திற்கான அத்திவாரத்தை இடும் தேர்தலாக அமைய வேண்டும் என்பதே எமது நாட்டு மக்களின் அபிலாஷை. நாளாந்தம் உங்களை நோக்கி வரும் மக்களின் பெரும் ஆதரவின் மூலம் மக்களின் அந்த எதிர்பார்ப்புத்தான் ஒரு பலமான செய்தியாக உங்களுக்கு சொல்லப்படுகிறது. அதை தேசிய மக்கள் சக்தி சரியாகப் புரிந்திருக்கும் என்றும் நாம் நம்புகின்றோம். உண்மையான மாற்றத்தை விரும்பும் இலங்கை மக்களின் ஆதரவுடன் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம், சகலரும் சமத்துவமான இனங்களாக, சம உரிமையுள்ள, கெளவரமுள்ள மக்கள் சமூகங்களாக ஒருவரைக் கண்டு ஒருவர் அச்சமுறாது நம்பிக்கையுடன் பார்கக்கூடிய “மானிட சமூகத்தை” எமது நாட்டில் உருவாக்க நீங்கள் துணிந்து முன்னோக்கிச் செல்வீர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி விடைபெறுகிறோம்.

 

நன்றி

June 15th, 2024

London, UK

அனுரகுமார ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது – விஜித ஹேரத்

தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது எனவும் இதற்கு சிறிது காலம் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீட்டு பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “சில நேரம் நினைத்துப் பார்க்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியவில்லை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி எப்படித்தான் இதனை தாங்குவது? எல்லோராலும் முடியாது என்றால், அதைச் செய்ய முடியாது தான்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார், விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் இதை மாற்றுவதற்கு வழியில்லை.

கடின அர்ப்பணிப்பு செய்தால், பால் தேநீருக்குப் பதிலாக தேநீர் குடித்தால், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நம் வீட்டுப் பொருளாதாரத்தை சிறிது நேரம் கவனமாக நிர்வகித்தால், அதைச் செய்வோம்.” என தெரிவித்தார்.

நம்பிக்கை தருகின்ற இடதுசாரி இயக்கம் என்ற அடிப்படையில் ஜே.வி.பியுடன் இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன – எம்.ஏ.சுமந்திரன்

13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி இறுதி முடிவு எடுக்கும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எஸ்.குலநாயகம், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (11) நண்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பிலே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னேற்ற கரமான பேச்சுவார்த்தை எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டு விடவில்லை. ஆரம்ப கலந்துரையாடல் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் இடம் பெறுகின்றது.

நம்பிக்கை தருகின்ற பேச்சுவார்த்தையாக இடதுசாரி இயக்கம் என்ற வகையில் அவர்களுடன் எங்களுக்கு இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன.

குறிப்பாக ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சம உரிமை என்ற பல விடயங்கள், பொருளாதார சமத்துவம், போன்ற பல விடயங்களில் நேரடியாகவே இணங்கக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட அவர் கூறியது போன்று தற்போது இருக்கின்ற மாகாண சபை முறைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இதில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான வழிவகைகளை இரு தரப்பாகவும் இணைந்து பேசி செல்ல வேண்டும். இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் அதன் பின்னர் அவர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்கும் என்றார்.

ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் – அனுர குமார திசாநாயக்க

அரகலயவின் பின்னர் பின்வாங்கிய ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (02) குருநாகலில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரகலயவின் உண்மையான அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்றால் மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் அரசாங்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2022 மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாசைகளை உறுதிசெய்யக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகள் இன்னமும் அரகலயவிலிருந்து பாடங்களை கற்கவில்லை மாறாக அதனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல்கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்தாமல் பொதுவான அபிலாசைகளிற்காக வீதியில் இறங்கினார்கள். அவர்கள் ஊழல் மோசடி அற்ற ஒழுக்கமும் சட்டமும் காணப்படும் நாட்டை எதிர்பார்க்கின்றனர்.

பொதுவான சமூக நோக்கத்திற்காக அவர்கள் வீதியில் இறங்கினார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடுகோரி அனுர குமார தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை !

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடுகோரி தாக்கல் செய்துள்ள வழக்குவிசாரணையில் தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது நிதிமன்றில் முன்னிலையாகி அநுரகுமார திசாநாயக்க சாட்சியம் வழங்கியிருந்தார்.

தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 2017ஆம் ஆண்டு தங்காலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்களினால் தமக்கு அவமதிப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை வழக்கு விசாரணையில் முன்னிலைலயானதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்க நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது ”ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக இடம்பெறும். தேர்தல் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது. இருவரும் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிப்பதற்கே முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற கலைக்கப்படவுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

10 வருடங்களுக்கு இந்த நாட்டை ரணில்விக்ரமசிங்கவிடம் வழங்க வேண்டும் என வஜிர அபேவர்தன கூறுகின்றார். அதேபோல் தேர்தலை 2 வருடங்களுக்கு தேர்தலை பிற்போடுமாறு பாலித ரங்கே பண்டார கூறுகின்றார். தேர்தல் தொடர்பாக அரசாங்கத்திடம் தெளிவான நிலைப்பாடு இல்லை. என்பது இதனூடாக தெளிவாகின்றது” எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

“1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தார்.” – வவுனியாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

இந்த நாட்டிலுள்ள வடக்கு – தெற்கு ஆட்சியாளர்களே மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், 1981 இல் தேர்தலில் வெற்றி காண்பதற்காக, ரணில் விக்கிரமசிங்கவே யாழ். நூலகத்தை எரித்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியாவிலுள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நாடு நெருப்பாலும் வெள்ளத்தாலும் அழிந்த நாடு அல்ல. அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த பொக்கிஷமே எமது நாடு. ஆனால், இந்த மாபெரும் பொக்கிஷத்தில், உண்பதற்கும் குடிப்பதற்கும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மருந்தின்றி இறந்து போகின்றார்கள், வீடின்றி வாழ்கின்றார்கள்.

ஆகையால், ஆட்சி செய்தவர்கள் இந்த நாட்டை வளர்க்கவில்லை.

எனவே, தேசிய மக்கள் சக்தியுடன், மக்களும் ஒன்றாக இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியம் என தேசிய மக்கள் சக்தி உறுதியளிக்கிறது.நாம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம்.

இந்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள். அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு – தெற்கிலுள்ள அரசியல் வாதிகள், அவர்களின் பதவிக்காக அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட யுக்தியினால் உருவான யுத்தம்.

பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, 1981 இல் அபிவிருத்தி சபை தேர்தல். ரணில் விக்கிமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள்.

தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

வடக்கிலுள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள்.

அம்மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப்போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன்.

வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் குழுவினர், 1981 இல் தேர்தலில் வெற்றிக்காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள்.

தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து அம் மக்கள் வேதனைப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது.

மக்கள் விடுதலை முன்னியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக்கண்டு ஜேஆர் ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜேஆர் ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது. அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார்.

 

இதனால், ஜேஆர் ஜெயவர்தனவும், ரணில் விக்கிமசிங்கவும் இணைந்து 1 ஆம், 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு தீவைத்தார்கள். ஒரு கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். அநுராதப்புரம் சிற்றம்பலம் மண்பத்தையிட்டு கொழுத்தினார்கள். முழு நாடும் தீப்பற்றி எரிந்தது. இதனை ஜேஆர் ஜெயவர்தனவின் ரௌடிகளே செய்தார்கள்.

ஆனால், 83 இன் கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னியினரே காரணம் என எம் கட்சியை தடை செய்தார்கள்.

இதனால், தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், உயிர் காவுக்கொல்லப்படுவதையும், தெற்கிலிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்படுவதையும் நினைத்து, பிரபாகரனுக்கு வடக்கில் புதிய அரசாங்கமொன்று உருவாக்க வேண்டிய தேவையேற்பட்டது.

ஆகவே, தெற்கில் தமது மக்கள் அழிக்கப்படுவதையும், வடக்கில் நூலகத்தை எரித்தமையும் கூறி வடக்கு இளைஞர்களை யுத்தத்துக்காக அழைத்தார்.

ஆயுதமேந்திய மாபெரும் இயக்கத்தை பிரபாகரன் உருவாக்கினார்.

இதில் சாதாரண தாய் தந்தைகளின் பிள்ளைகளின் உயிர்களே பறிபோயின.

இந்த நாட்டிலுள்ள சிங்கள கிராமங்கள் அச்சத்துடன் காணப்பட்டன. அவர்களின் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்தனர்.

மேலும், வுவனியாவை சற்று தள்ளி வாழும் தமிழ் மக்களும் பயத்துடனே வாழ்ந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் LTTE யுடன் இணைந்தார்கள்.

மேலுள்ள ஆட்சியார்கள் யுத்தம் செய்தார்கள். எமது கிராமங்கள் பாதுகாப்பற்று காணப்பட்டது.

மேல் உள்ள ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கினார்கள். எமது பிள்ளைகள் யுத்தத்துக்கு சென்றார்கள்.

ஆகவே, எமது நாடு முன்னேற வேண்டுமாயின் பிரதான சில காரணங்கள் இருக்கின்றன.

அதாவது, தற்போது நமக்கு சண்டையற்ற ஒரு நாடு தேவை. பிரிவினைவாதயில்லாத, மீண்டும் யுத்தம் ஏற்படாத நாடே தேவை.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுயுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

எமது பரம்பரை யுத்தம் செய்துக்கொண்ட பரம்பரை. ஆனால் எமது பிள்ளைகளுக்கு யுத்தம் செய்துக்கொள்ள இடமளிக்கக்கூடாது.” என தெரிவித்தார்.

விவாதம் செய்ய நான் தயார் – திகதிகளை குறித்து சஜித்பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய அனுர குமார திசாநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி நேற்று(22) அறிவித்துள்ளது.

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியது. அதற்கமைய மே மாதம் 7, 9, 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில் விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லையாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்திற்கான திகதி இதுவரையில் நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” – யாழில் அனுரகுமார திஸ்ஸநாயக்க !

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் தொடர்பில் காணப்படும் பிளவுகள் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(04) நடைபெற்ற ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி மக்களுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக தான் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை மேற்கொள்ளவில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“ஆட்சியாளர்கள் நம்மை வேறு பிரிக்கும் அரசியலிலேயே தொடர்ந்தும் ஈடுபடுகிறார்கள், அரசியல் நலனுக்கான இனவாத அரசியலே அவர்களது முதன்மையான நோக்கமாக இருந்தது.

எமது மூதாதையர்கள் காலம் தொடங்கி அனைத்து ஆட்சியாளர்கள் இனவாதத்தை மக்கள் மனதில் விதைத்தார்கள்.இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

 

இதனால் பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்களாக வடக்கு மக்கள் இருக்கிறார்கள். இன்றும் அவர்களில் போராட்டத்துக்கு நீதி கிடைக்கவில்லை. எனினும், எமது தலைமுறையினர் இவ்வாறு இருக்க கூடாது. எமது கட்சி எதிர்கால சந்ததியனரை மாற்றியமைக்கும். அவர்களின் சிந்தனைகளை மாற்றும்.

எதிர்கால சந்ததியினருக்கான சரியான பாதையை நாம் உருவாக்குவோம். எமக்கு இனவாத அரசியல் தேவையா? எமது சந்ததியினர் எதிர்நோக்கிய யுத்தத்தை எதிர்கால சந்ததியினர் எதிர்நோக்க வேண்டுமா?

 

இவ்வாறான பேதங்களும் போரும் அற்ற புதிய நாடு புதிய ஆட்சி உருவாக வேண்டும். இதுவே எமது நோக்கம். தேசிய மக்கள் சக்தியின் நோக்கம். இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாடுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்.” – கனடாவில் அனுரகுமார திஸ்ஸநாயக்க!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்றத்திற்கு தலைமைதாங்கவுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க கனடாவில் தெரிவித்துள்ளார்.

 

மேமாதம் இந்த அமைப்பு செயற்பட ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தைஇவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விசாரணைகள் அவசியமில்லை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் வெளியான பல விடயங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சிஐடி உத்தியோகத்தர்கள் தற்போது ஓய்வுபெற்றுவிட்டனர் அவர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

மே மாதத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ள ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைப்பிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுத்த சிஐடி தலைவர் தலைமைதாங்குவார்.நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைவழங்குவோம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம் என அவர்தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில நாட்களிற்கு முன்னர் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

 

அவ்வேளை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவரின் பாரதூரமான தகவல் தாக்குதல் இடம்பெற்ற பின்னரும் அவர் பதவியிலிருந்தார் எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.