“3 வயது குழந்தையை எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் அலிசப்ரி இருக்கின்றார். ” என அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதமிருக்கு கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதபோராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி. அமைப்பின் தலைவருக்கு சிலைவைத்து மாலை போடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஆனால் சிங்களவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு சட்டம் தமிழர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு சட்டம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உறவுகளுக்கு ஆதரவாக நாங்களும் மட்டக்களப்பிலே அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
2018 க்கு பிற்பாடு கைது செய்யப்பட்ட உறவுகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்படவேண்டும். அதேநேரத்தில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் ஊடாக தொடர்ச்சியாக கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே அந்த கைதுகளை செய்வதற்கான இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் இனி இருக்க கூடாது . இந்த அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கடந்த காலத்தில் 3 ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன றோயல் பாக்கில் மாடிவீட்டு ஒன்றில் தனது காதலியின் மண்டையை அடித்து உடைத்து கொலை செய்யப்பட்டு சிறைக்கு சென்றவரை விடுதலை செய்துள்ளார்.
கோட்டாபாய ராஜபக்ச உயிர் நீதிமன்றில் குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியே விடப்பட்டு தேசிய வீடமைப்பு தலைவராக நியமித்தார்.
அதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் ரஞ்சன் ராமநாயக்கா விடுவிக்கப்பட்டார். எனவே சிங்களவர்களை பொறுத்தவரையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்வது இலகுவானது உள்ளது.
ஆனால் இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அவரிடம் பேசவேண்டும் இவரிடம் பேச வேண்டும் என தெரிவிக்கின்றனர். தற்போதைய பிரதமர் தினேஸ்குணவர்த்தன, அலிசப்ரி, நாமல் ராஜபக்ச கடந்த ஆட்சியின் போது பெயர்பட்டியலை தருமாறு கோரி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் இந்த அரசியல் கைதிகள் வாழ்கையை இழந்து குடும்பத்தை இழந்து அவர்களின் தந்தை பிள்ளை மனைவியை இழந்து சிறையில் வாடுகின்றனர் என்றனர் ஆனால் ஆட்சி வந்து போய்விட்டது இன்னும் விடுதலை இல்லை.
ஜ.நா கூட்டத் தொடரிலே கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி பொருளாதார குற்றங்கள் இல்லை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
இந்த பொருளாதார குற்றங்களுக்கு அலி சப்ரியும் பொறுப்பானவர். இவர் அந்த நேரத்தில் நீதி அமைச்சராக இருந்த இவர் 20 திருத்த சட்டமும் வேணும் என கொண்டுவந்த இவர் இன்று வெளிவிவகார அமைச்சராக இருக்கின்றார்.
இவர் இலங்கையை பிரதி நிதிப்படுத்துவதாக சென்றுள்ளாரா.? கோட்டாபாய ராஜபக்சவின் சட்டத்தரணி என்ற அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி இருக்கின்றது இன்று பொருளாதார நெருக்கடியினால் மக்கள் நாட்டிலே வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது . இதற்கு காரணம் ராஜபக்ச குடும்பமே 2022 மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதாரத்தை இவர்கள் அழித்ததற்கான ஆதாரம் இருக்கின்றது. போர்குற்றங்களை மூடிமறைத்தது போன்று இந்த பொருளாதார குற்றங்களை மூடி மறைக்க முடியாது.
எனவே போர்குற்றம் போலவே பொருளாதார குற்றம் செய்துள்ளது எனவே இதற்கு பொறுப்பு கூறவேண்டிய இவர்கள் தப்பி ஓடமுடியாது இதனை அலி சப்ரி உணரவேண்டும். அதேவேளை அலி சப்ரி ஒரு இஸ்லாமியர் இருந்தும் கொரோனவினால் உயிரிழந்த இவருடைய இனத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையை கூட எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் இருக்கின்றார்.
இன்று ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சியில் கூட பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம். வட-கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை தருமாறு கேட்டுக் கூட இந்த நாட்டில் இருக்கும் பெண்களின் மானத்தை கூட கரிசனை எடுக்காது கலாச்சார சீர்கேட்டை கரிசனையில் எடுக்காது தமிழர்களின் முதலீடு வேண்டாம் அரசியல் தீர்வு தரமாட்டோம் என்று சொல்லுகின்ற அரசாங்கம் தான் இந்த அரசாங்கம் என்றார்.