இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 – இதுவரை ஏழு வேட்பாளர்கள்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை ஏழு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான  விஜயதாச ராஜபக்ஷ, இன்று  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும், சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்பாளர்..? – வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்க – வெளியாகியுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ரணில் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (26.7.2024) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எப்போது..? – வெளியானது விசேட வர்த்தமானி!

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இன்று (26.7.2024) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.

குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி இன்று (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நிறுத்தக்கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் – மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாததால், பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டடிருந்தது. அதன்படி, குறித்த மனுவைப் பரிசீலிக்கப் பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

மேலும் சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவிற்கு அபராத கட்டணமாக 05 இலட்சம் ரூபாவை ஜூலை 31ம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது

 

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அண்மையில் உயர் நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய

இலங்கை ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் மகிந்த தேசப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 

செப்டெம்பர் 20 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 17 திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலை பிற்போட முடியும் என எவரேனும் கூறினால், அவர்களின் மூளையை பரிசோதனைக்குட்படுத்தி பார்க்க வேண்டும். எக்காரணத்தினாலும் தேர்தலை பிற்போடுவது என்பது தவறு. வானமே இடிந்து தலைமேல் விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தலை மட்டும் பிற்போட முடியாது.

தேர்தலுக்கான முதற்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதுகுறித்து நாம் ஆராயப்போவதில்லை. அதற்கான உரிமையும் எமக்கு இல்லை.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கடமைகளை, உண்மையுடனும், நேர்மையுடனும் செய்யும் என கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.

தற்போது மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை சில கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும்.தேர்தல் காலத்தில் இவ்வாறான அபிவிருத்திகள் கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்காணிப்பு அமைப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி சட்டத்தரணி சுகாஷ் குழுவினர் யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இன்று மாலை மூன்று மணியளவில் குறித்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை அதிபர் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனி பொருளில் மக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர் – நாமல் ராஜபக்ச கவலை !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர், எனவே தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கலந்துரையாடல் இடம்பெற்ற போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தீர்மானம் எடுக்கவேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கின்றனர்.
அரசியல் கட்சிகள் பொது மக்களின் வாக்குகளை தமது தேவைக்கு பயன்படுத்துகின்றன. ஜனாதிபதி தேர்தலில் அனைத்து மக்களும் விரும்பும் ஒருவரையே வேட்பாளராக நிறுத்துவோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் ஆட்சி மாற்றத்தால் ஏனைய சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்க முடியாமல் போனது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலங்கை முழுவதும் அந்த அபிவிருத்தி முடக்கப்பட்டதுடன் அந்த ஆட்சி காலத்தில்தான் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
இதற்கான அவப்பெயர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ஏற்பட்டது. கேட்டாபாய ராஜபக்ச ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
எங்களின் ஆட்சி இடைநடுவில் மாற்றப்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்திருந்தோம்.
எவ்வாறாயினும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தரப்பிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள சரத்பொன்சேகா!

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் அவர் இது  குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை சரத்பொன்சேகா பெற்றுள்ளார்  ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன என முன்னாள் இராணுவதளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சரத்பொன்சேகா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் அற்ற நாடு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரகலயவின் போது அவர்களிற்கு ஆதரவு வெளியிட்ட சரத்பொன்சேகா அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த ஆதரவை பயன்படுத்த முயல்வார்.

தனது பிரச்சாரத்தின்போதுஅவர் புத்திஜீவிகள் பிரபல பிரமுகர்களுடன் இணைந்து செயற்படுவார்.

இதேவேளை தேர்தல் பிரச்சார காலத்தில் சரத்பொன்சேகா யுத்தம் குறித்த நூலை வெளியிடவுள்ளார் இந்த நூலில் யுத்தம் குறித்த பல முக்கிய விடயங்கள்இடம்பெற்றிருக்கும். இதேவேளை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக முன்னாள் இராஜதந்திரியொருவர் சரத்பொன்சேகாவை சந்திப்பதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பினை நிராகரிக்காத சரத்பொன்சேகா எனினும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.