யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலி

யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (20.07) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.

இருந்தும் மாடுகளுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லையென சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயபிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.