இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் – சிவில் சமூகத்தினர் கூட்டுத்தீர்மானம் !

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

 

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்போது ,வணக்கத்துக்குரிய ஆயர், திருகோணமலை மறைமாவட்டம்

தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம்

தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்

பேராசிரியர் கே ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்

கலாநிதி. க. சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு

அருட்பணி த ஜீவராஜ் ஏசு சபை சமூக செயற்பாட்டாளர் மட்டக்களப்பு

திரு நிலாந்தன் அரசியல் ஆய்வாளர்

அருட்பணி பி ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் மன்னார்

நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்

தமிழ் சிவில் சமூக அமையம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

அறிவார் சமூகம் திருகோணமலை

அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு

கரைச்சி வடக்கு சமாசம்

சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

சிவில் அமைப்பு மட்டக்களப்பு

தமிழ் ஊடகத் திரட்டு

கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா

கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்

தமிழர் கலை பண்பாட்டு மையம்

எம்பவர் நிறுவனம்

மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூக குழு

குரலற்றவர்களின் குரல்

மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு

சமூக மாற்றத்துக்கான அமைப்பு வவுனியா

தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை

புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு திருகோணமலை

நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு திருகோணமலை ஆகிய அமைப்புக்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கு ஏன் பொது வேட்பாளர் தேவை..? – சிவஞானம் சிறீதரன் விளக்கம் !

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்துதான் அனைவரும் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.

வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இந்த பொது வேட்பாளர் மூலம் உலகறியச் செய்யப்பட வேண்டும். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பூமியில் இறைமையோடு வாழ்ந்தவர்கள் அத்தோடு அவர்களுக்கு அவர்களது இறைமையை மீட்டுக்கொடுக்கும் வகையிலான சமஷ்டித் தீர்வினை இந்த பொது வேட்பாளர் முன்வைப்பார்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஒருகளமாக நாங்கள் இந்த ஜனாதிபதி  தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கான ஆதரவைக் கேட்போம்.

எங்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதைத் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள்.

இங்கு முக்கியமானது தமிழர்கள் தங்களது அபிலாஷைகளுக்கான அங்கீகாரத்தை இந்த பொது வேட்பாளர் மூலம் கோருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் – எச்சரிக்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

 

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

 

தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை – இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான்

தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் பொது வேட்பாளரினை நியமிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அக்டோபர் மாதம் முதலாம் இரண்டாம் கிழமைகளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதன் காரணமாக இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

என்னை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் தரப்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி அடைவார் என்றால் பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலினை பொறுத்த வரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார்.

 

எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆதரிக்கின்ற ஜனாதிபதியை வெற்றி அடைய வைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

 

மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பது எந்த விதத்தில் சாத்தியம் அல்லது இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும் என்று எமக்குத் தெரியவில்லை.

 

கடந்த காலங்களில் ஏதோவொரு பிரதான வேட்பாளர்கள் ஒருவரையே ஆதரித்துள்ளனர். அதுவே சரியானதாக அமையும் என நான் எண்ணுகின்றேன். ஒருமித்த கருத்துடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை போடுவதன் மூலம் வெற்றியை நோக்கி செல்வதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அது சாத்தியமில்லை.

 

எனவே தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சி ஏன் ஏற்பட்டுள்ளது என்பது புரியவில்லை.

 

மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் கல்வித் தகுதியை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் – நவீன் திஸாநாயக்க

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் பகிரங்க விவாதங்களில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும் தங்களின் வெளிப்படையான தகுதிகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

“அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், தங்கள் தகுதிகளை மக்களுக்கு காட்ட வேண்டும். ஒரு அற்புதமான ஸ்திரமான மீட்சிக்குப் பிறகு இந்த நாட்டைச் சிதைக்கும் வெறும் பேச்சாளர்கள் இருக்க முடியாது,” என்று திஸாநாயக்க X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.