ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

“கொவிட் தடுப்பூசியை வாங்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையிடம் பிச்சை எடுக்கின்றது” – ரணில் விக்கிரமசிங்க

“கொவிட் தடுப்பூசியை வாங்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையிடம் பிச்சை எடுக்கின்றது” என  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது ஒரு முழுமையான பொய். ஏற்றுமதி வணிகர்களிடம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும். இந்த தொகையை நாங்கள் பட்ஜெட்டில் இருந்து நிர்வகித்திருக்க முடியும், அதற்கு பதிலாக நாங்கள் தனியார் துறையிலிருந்து பிச்சை எடுக்கிறோம். ” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமாக இருந்திருந்தால் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு என்ன உத்திகள் எடுக்கப்படும் என்று கூட்டத்தில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரமசிங்க,

நகைச்சுவையாக அளித்த பதிலில் ” இதில் ஒரு நன்மை இருக்கிறது, நாங்கள் தற்போது அரசாங்கத்திலோஅல்லது நாடாளுமன்றத்திலோ இல்லை” என்று பதிலளித்தார்.

“ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தபோதிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை” – முன்னாள்பிரதமர் ரணில் விக்ரமசிங்க .

“ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தபோதிலும் அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமையால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை” என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில்  தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது முறையாக சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வௌிவராமை, இணையத்தளம் ஊடாக மாத்திரம் அவர்கள் தொடர்புகளைப் பேணியமை தெரியவந்ததால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரச நிர்வாகத்தின்போது தமது தரப்பிற்கும் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிற்கும் இடையில் அரசியல் ரீதியாக பாரிய கருத்து மோதல்கள் ஏற்படவில்லை எனவும் ரணில்விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் போன்ற அன்றாட செயற்பாடுகள் தொடர்பாக மாத்திரம் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும்  அப்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டங்கள் குறுகிய அறிவித்தலுக்கு அமைய இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கடமைகளை இரத்து செய்து பாதுகாப்பு பேரவை கூட்டங்களில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு பேரவை கூடுவதற்கான நிலையான நாள் ஒன்றை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமை யார்?

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி இதுவரையிலும் கண்டிராத வரலாற்றுத்தோல்வியை சந்தித்திருந்தது.  இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினுள்ளே பல்வேறுபட்ட உட்குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்    25 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

புதிய தலைமைத்துவத்திற்காக நான்கு பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமை அது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் கட்சியின் அதிகாரிகள் குழு நேற்று முற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

இதன் போது, தான் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தலைமைப்பதவியை பொறுப் பேற்க தயாராக உள்ளவர்கள் இருந்தால் பெயர்களை அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியவர்கள் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.