கொவிட் -19

கொவிட் -19

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

முடிவின்றி தொடரும் கொரோனா இறப்புக்கள் – நேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் !

2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது இன்று வரை உலக நாடுகளை முழுமையாக உலுக்கி வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது. புதிதாக 6.37 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதில் 10.52 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். 2.26 கோடி பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2807 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலும் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு நேற்று 1000 பேர் பலியாகி உள்ளனர்.

காட்டுத்தீயாய் இன்னும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் 9.19 கோடி பேர் பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில்  இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 011 வருடங்களை கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6.58 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.42 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்த கொரோனா – புதிய கொரோனா வைரஸ் சீனாவிலும் !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், கொரோனா 2020-ம் ஆண்டே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்டது. பழைய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இதனால், பல நாடுகளும் இங்கிலாந்துடனான விமான மற்றும் சாலை வழி போக்குவரத்தை ரத்து செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா சீனாவில் பரவாமல் இருந்தது.
இந்நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது உருமாறி மீண்டும் சீனாவையே வந்தடைந்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 14-ம் திகதி 23 வயது நிரம்பிய இளம் பெண் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திற்கு விமானத்தில் வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், அந்த கொரோனா உருமாறிய கொரோனா வைரசா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் அந்த 23 வயது நிரம்பிய பெண்ணுக்கு பரவியுள்ளது.
 இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் என சீன அரசு நேற்று (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது. இதன் மூலம் உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவிலும் பரவிவிட்டது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உருமாறி மீண்டும் 2020 டிசம்பர் மாதம் சீனாவையே வந்தடைந்துள்ளது.

“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” – நீதியமைச்சர் அலி சப்ரி

“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் ஜனசாக்கள் எரிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் பேசும் போது,

உடல்களை அகற்றுவது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இந்தவிடயத்தில் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலகின் 190 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.  மருத்துவநிபுணர்கள் குழுவொன்று உலகின் ஏனைய நாடுகள் போல இலங்கையிலும் உடல்களை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா ?என கேள்வி எழுப்பியுள்ளது.

தாங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதாக ஏதாவது ஒரு சமூகம் நினைத்தால் அனைத்து இலங்கையர்களையும் ஐக்கியப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதியமைச்சர் ஊடகம் ஒன்றில் பேசும் போது “கொரோனாவால் இறந்து போகும் முஜ்லீம்களின் உடல்களை அரசு நிறுத்த வேணடும் என குறிப்பிட்டிருந்ததுடன் இது நிறுத்தப்படா விட்டால் முஸ்லீம் இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக மாற இடமுண்டு எனக்கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இங்கிலாந்தில் பரவும் புதிய வகை வைரஸ் இலங்கைக்கும் பரவும் அபாயம்” – எச்சிக்கின்றது அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் !

இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவுவதற்கான அபாய நிலை இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும் என அரச வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளும், இந்தியா, தென்னாபிரிக்கா துருக்கி இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரித்தானியாவுக்கான விமானப் பயணங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த புதிய உருமாற்றம் அவுஸ்திரேலியா, டென்மார்க் முதலான நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிகவும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸின் புதிய உருமாற்றம் விசேடமானது என சிரேஷ்ட வைத்திய ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரே நாளில் 500 கொரொனா தொற்றாளர்கள் – 07 பேர் பலி! 

நாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 484ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 323 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 17 ஆயிரத்து இரண்டு பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 366 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

 

 

“ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் வீதம் கொரோனா வைரஸால் பலியாகின்றனர்” – உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா வைரஸால் பலியானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெர்மனி, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா  பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா  வைரஸால் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

“கொரோனா வைரஸ் அலைக்கு நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம்” – லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் வீரியம் கூடியது ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் சிக்கி கடந்த 26 நாட்களில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இந்த அலைக்குள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸின் பதற்ற நிலைமையின் உச்சக்கட்டத்தை எடுத்துக்காட்டுகின்றதல்லவா?  என ஊடகவியலாளர்கள் இராணுவத் தளபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் வீரியம் கூடியது என்று நாம் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். அதன்பின்னர் விஞ்ஞானிகளும் அறிவித்திருந்தார்கள். அதனால்தான் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்றது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டின் நிலைமையைப் பதற்ற நிலைமைக்குக் கொண்டு செல்லாதவாறு கொரோனாவின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை நாம் கட்டுப்படுத்தியிருந்தோம். ஆனால், மூன்றாவது அலையின் தாக்கம் வீரியமாக இருப்பதால் அதனை எம்மால் உடனே கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய நிலைமை பதற்றம்தான். ஆனாலும், நாம் அஞ்சமாட்டோம். கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைத்தே தீருவோம்.

சிலர் கூறுவது போன்று கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் மூடிமறைக்கவில்லை. பி.சி.ஆர். பரிசோதனைகளை எதிர்வரும் நாட்களில் விஸ்தரிக்கவுள்ளோம். முடிவுகள் கிடைத்த கையோடு ஊடகங்கள் வாயிலாக அவற்றை வெளிப்படுத்தி வருகின்றோம். இதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை ”என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் ஐவர் பலி !

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 5 மரணங்கள் பதிவாகிய நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொரோனா தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கிருலப்பனையைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கொரோனா தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 02ஐ சேர்ந்த 81 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொமட்டகொடையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆணொருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் சிக்கலான நிலையுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.