அஜித் ரோஹண

அஜித் ரோஹண

“129 இலங்கையரை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது ” – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் என்றும் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய 129பேரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 87 பேருக்கு இன்டர்போல் நீல அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

40 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்காகவும் 24 பேர் ஏனைய குற்றங்களுக்காகவும் தேடப்படுவதாகவும் இவ்வாறான குற்றவாளிகளைக் கொண்டுவர இன்டர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

“அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்ய முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவர் ” – அஜித் ரோஹண

அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக இன்று (02.02.2021) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவல்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் தமது உறவினர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி – ஏ9 வீதியில் நேற்று 23 பேர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள அவர், அவர்களால் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோருபவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.

 

இதே நேரம் அரசினுடைய தமிழர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிஜலான நீண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தமிழ்மக்கள் தயாராகி வருகின்ற  நிலையில் பொலிஸ் ஊடகப்பபேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை நோக்க்தக்கது.

“பிச்சை எடுப்பதும் , பிச்சை வழங்குவதும் தண்டணைக்குறிய குற்றம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். இந்த நிலையிலேயே, யாசகம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடும் போது அவர்,

“கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது . வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
இவ்வாறு வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் நடவடிக்கை காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் யாசகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று, அவர்களை வழிநடத்தும் பிரதான நபர்களையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு, ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் யாசகம் வழங்குகின்றமையினாலேயே, யாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  இதனால், பிரதானமாக வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் ஓட்டுநர்களோ, வாகனத்தில் பயணிப்போரோ யாசகர்களுக்கு யாசகத்தை வழங்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
யாசகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், போலி முகத்துடன் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவடையும்.

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சில யாசகர்களும் பாதிக்கப்பட்டிருந்தமை கடந்த காலங்களில் பதிவாகியிருந்தது.
குறிப்பாக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் யாசகர்களுக்கு கோவிட்-19 தொற்று கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி, யாசகர் ஒருவர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்திருந்த நிலையில், அவரது சடலம் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால், யாசகர்களின் ஊடாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

உண்மையாக யாசகம் பெறுவோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பில் தாம், சமூக சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானம் எட்டப்படும்.
நாட்டில் உண்மையாக யாசகம் பெறுவோர் மிக குறுகிய தரப்பினரே காணப்படுகின்றனர். அவ்வாறு உண்மையாக யாசகம் பெறுவோர் பிரதான நகரங்களிலும், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும் யாசகம் பெறுவதில்லை”  எனவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வீதிவிபத்துக்களால் வருடத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி !

இலங்கையில் தினமும் வீதி விபத்துக்களால் 5 தொடக்கம் 10 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரான பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஊடகங்களிடம் நேற்று வீதிப்போக்குவரத்து விபத்துக்கள் தொடர்பாக பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி வருடாந்தம் வீதி விபத்துக்களால் 3 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வீதி விபத்துக்களால் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும், 20 ஆயிரம் பேர் காயமடைகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.