அடைக்கலநாதன்

அடைக்கலநாதன்

அனைவரையும் இணைத்து செயற்பட அழைக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில்,ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இனப்பிரச்சினை குறித்தும், அபிவிருத்தி தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்துவதாக கோரி மக்களிடம் நாங்கள் வாக்கு சேகரித்தோம். குறித்த இரு விடையங்கள் குறித்து அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு சாத்தியப்பாட்டை மேற்கொள்கின்ற சூழலை உருவாக்குவதாகவும் நாங்கள் கூறியிருந்தோம்.

 

குறித்த இரு விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கிராமிய ரீதியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து கிராமங்களை முன்னேற்றுவதே நோக்கமாக இருக்கும்.

 

மேலும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்களை நாங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குவோம்.

மேலும் இம்முறை பாராளுமன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.

ஜனாதிபதி கூறியது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து,காணாமல் போனவர்கள் குறித்து அவர்களின் உறவுகள் போராட்டத்தின் ஊடாக நீதியை கோரி வருகின்றனர்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்கின்ற வகையில் ஒரு வழி முறையை நாங்கள் கையாளுகின்ற ஒரு சூழலை உருவாக்குதல்,எமது நிலங்கள் பரிபோகாத ஒரு சூழலை ஏற்படுத்துதல்,எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.

எனவே இம்முறை சங்கு சின்னத்துக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.மக்கள் சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையை நாங்கள் கையாளுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

“அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது.”- அடைக்கலநாதன்

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.,

நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த அரசாங்கம் மேலும் மேலும் தவறிழைத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உண்மையில் மக்களின் அன்றாட பிரச்சினை, மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற துன்பங்களை பிரதிபலிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இந்த நிலையில் அரசு மீண்டும் தவறிழைக்கின்றது. அவசர கால சட்டத்தை அமுல் படுத்தி மீண்டும் மக்களை அடக்க, ஒடுக்க நினைக்கின்ற முறையை கையாள நினைக்கின்ற செயல்பாட்டை ஜனாதிபதி செய்ய துணிகின்றார்.

அதை வன்மையாக கண்டிக்கின்றோம். அதனை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். இந்த நாட்டிலே மக்களை காப்பாற்ற முடியாத அரசு, இந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அரசு, நாளாந்தம் மக்கள் படுகின்ற துன்ப துயரங்களை கருத்தில் கொள்ளாத அரசு, இந்த அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி நிம்மதியாக இருந்து விடலாம் என்று நினைத்து விட முடியாது.

மக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளார்கள். இதனூடாக போராட்டங்களை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பகல் கனவு. மக்கள் அரசுக்கு எதிராக தற்போது வீதிக்கு இறங்கி உள்ளார்கள். மக்களின் போராட்டம் தொடரும். எனவே ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் மீளப்பெறபட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“மன்னார் எண்ணெய் வளத்தை இந்தியாவிடம் கொடுங்கள்.” – செல்வம் அடைக்கலநாதன் அரசிடம் கோரிக்கை !

மன்னாரில் காணப்படுகின்ற எண்ணெய் வளத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் எண்ணெய் வளம் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த பிரதேசத்தை இந்தியாவிற்கு வழங்கி அதன் அனுகூலத்தை எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“அடக்கினால் மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்.” – தமிழ் மக்களை உசுப்பேற்றும் அடைக்கலநாதன் !

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றத்தில் வைத்து வீரவசனங்களை முழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் பொலிஸார் கொடுத்து வருகின்றனர்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. போர் மௌனித்துவிட்டது, போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு  கூருவதற்கான வாய்ப்புக்களை இன்று அரசாங்கம்  தடுக்கின்றது. இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?“ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மக்களின் உண்மையான பிரச்சினைகளை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எந்தளவு தூரம் அடையாளம் கண்டு அவற்றை தீர்க்கமுற்படுகின்றனர் என்பது இன்றுவரை புரியதா புதிரே.

உண்மையிலேயே தமிழ்தேசியம் பேசும்  அரசியல்வாதிகள் இனம்சார்ந்த ஆரோக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தாது மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அதன்மூலம் ஓட்டுக்களை சுவீகரிக்கும் அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களை பற்றி சிந்திப்போராயின் இவர்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏதாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தயிருப்பார்கள். இவை அனைத்தையம் விட்டுவிட்டு இன்று ராஜபக்ஷக்கள் எதிர்ப்பை கையிலெடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழிப்படையாதவரை இந்த போலித்தேசியவாதிகள் உழைக்கத்தான் போகிறார்கள்.