அட்மிரல் சரத்வீரசேகர

அட்மிரல் சரத்வீரசேகர

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் அமெரிக்க தூதுவர் – சரத்வீரசேகர விசனம் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன். என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.குழுவின் அனுமதியுடனேயே 3 முக்கிய பரிந்துரைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தேன்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கிறார்.ஆனால் அவர் குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்.குழுவில் முன்னிலையாகும் அரச அதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுகிறார்.

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நாட்டின் உள்ளக விவகாரங்கள் தலையிடுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் ஆகவே உரிய நடவடிக்கை எடுங்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

 

அமெரிக்க தூதுவருக்கு சார்பாக செயற்படும் சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்காக பொலிஸாரை காட்டிக் கொடுக்க முடியாது.தேசிய பாதுகாப்பு தொடர்பில் அடிப்படை அறிவில்லாத சந்திம வீரக்கொடி தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் உறுப்பினராக உள்ளதால் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்

“மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டு வரப்பட்டால் கிழக்கில் வஹாபி பல்கலைக்கழகங்களும், வடக்கில் இனப்படுகொலை பற்றிய பாடத்திட்டங்களும் ஆரம்பமாகும்.” – நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர எச்சரிக்கை!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் அன்றி, மாகாணசபைகளினால் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கல்விக்கான அதிகாரம் கூறப்பட்டுள்ளதே ஒழிய, பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.

 

அப்படி நேர்ந்தால், கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரனையுடன் வஹாபி பல்கலைக்கழகங்கள் அல்லது ஷரீஆ சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியுமாக இருக்கும்.

 

அதேபோல், கனடாவின் ஒன்டேரியோ பிராந்திய பாடசாலைகளில், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக கற்பிக்கப்படுவது போன்று, வடக்கில் ஆரம்பிக்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் மனங்களை மாற்றும் இவ்வாறான பாடத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டுவிடும்.

 

பல்கலைக்கழகங்கள் நாட்டை முன்னேற்றும் வகையிலும், நாட்டுக்கான புத்திஜீவி சமூகத்தை உருவாக்கும் வகையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய, அரசியல் நோக்கத்திற்காகவோ ஆளுநர் அல்லது முதல்வர்களின் தேவைக்காகவோ ஸ்தாபிக்கப்படக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“முல்லைத்தீவு நீதிபதியின் மனைவி பற்றி பாராளுமன்றத்தில் பேசிய சரத்வீரசேகர.” – நடவடிக்கை எடுக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல் !

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டார்.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நேற்று சரத் வீரசேகரவினால் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்திருந்தார்.

 

அத்தோடு, அவரது மனைவி தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இது நிலையியற் கட்டளை 83 ஐ மீறும் செயற்பாடாகும். எவருடைய தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் சபையில் கருத்து வெளியிட முடியாது.

 

இவ்வாறு இருக்கும்போது, சரத்வீரசேகர இவ்வாறு இவர் கருத்து வெளியிடுவது இரண்டாவது தடவையாகும்.

 

ஏற்கனவே, அவர் சட்டத்தரணிகள் சங்கத்தையும் என்னையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

நான் நாடாளுமன்றில் எந்தவொரு நீதிபதியையும் பெயர்குறிப்பிட்டு கருத்து வெளியிடவில்லை.

 

நீதிபதிகளின் கருத்துக்கள் தொடர்பாக விமர்சிக்கலாமே ஒழிய, நீதிபதியின் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேச முடியாது.

 

ஒரு தமிழ் நீதிபதி எப்படி தன்னை விமர்சிக்க முடியும் எனும் தொனியில்தான் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது பாரதூரமான விடயமாகும்.

 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு உரிய வகையில் அவர் நேற்று நடந்துக் கொள்ளவில்லை.

 

எனவே, சபாநாயகர் இவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது.” – சரத்வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது அதனால் ஜனாதிபதி தலைமையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் சரத் வீரசேகர கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த பெரும்பான்மையான மக்கள் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்துவது தமிழ் மக்களின் நோக்கமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாக வாழ முடியும்.” – சரத்வீரசேகர

“இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.”என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று, அரசியலமைப்பின் 22ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்.

எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம். அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டம் எமக்கு இந்தியாவினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நிறுத்திவைத்து, பாதுகாப்பாக அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவந்து, அவர்களிடம் இராஜினாமா கடிதங்களை பெற்றுக்கொண்டே 13ஆம் திருத்தத்தை நிறைவேற்றினர்.

ஆகவே இதன் சுயாதீனம், புனிதத்தன்மை குறித்து எம்மத்தியில் கேள்வியே எழுகின்றது. ஐக்கியத்திற்கும், ஒற்றையாட்சிக்கும் வித்தியாசம் தெரியாத பலர் இன்று அது குறித்து கதைத்துக்கொண்டுள்ளனர்.

பெரிய நாடுகளில் கையாள வேண்டிய பொறிமுறைகளை இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு திணிக்க முடியாது. நாம் சமஸ்டி நாடாக இருக்க முடியாது. 13 ஆம் திருத்தம் எமது கழுத்தை நெறிக்கும் கூர்மையான கத்தியைப்போன்றது.

எனவே 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுப்பது நாட்டின் ஐக்கியத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

பலவீனமான மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதையே பிரிவினைவாதிகள் விரும்புகின்றனர். அதற்காகவே 13,17,19 ஆம் திருத்தங்களை கொண்டுவந்தனர்.

இதனாலேயே இந்த திருத்தங்களை நான் எதிர்த்தேன். ஒற்றையாட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பே இதற்கு தீர்வாகும்.

அதற்காகவே கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு மக்கள் ஆணையும் கிடைத்தது. மேலும், 22ஆம் திருத்த சட்டத்துக்கு நான் இணங்க மாட்டேன், இது மக்களின் ஆணைக்குழு முரணானது என்றார்.

“இது சிங்கள; பௌத்தநாடு. இங்கு திலீபனை நினைவுகூர அனுமதி இல்லை.” – சரத் வீரசேகர

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த  திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நிகழ்த்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர “வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எனவே வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.” என் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இந்த நாட்டுக்குள் தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல.

தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சட்டங்களை மீறினால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது” – அமைச்சர் சரத்வீரசேகரவின் கருத்துக்கு ஹர்ஷ டி சில்வா எதிர்ப்பு !

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். மேலும் இதன் மூலம் புலிகளுக்காக பணம் செலவழிக்கவும் அரசு தயாராகவில்லை என அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் கூறியிருந்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறும் போது,

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒட்டுமொத்த நல்லிணக்க செயற்பாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒப்பானதாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டில் அடிப்படைவாத  செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது“ – அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான தரப்பினர்கள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அடிப்படைவாத  செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது“ என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாஹரகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டது.தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் கோணத்தில் பார்க்கப்பட்டன.

தேசிய புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டனர். தேசிய பாதுகாப்பினை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை வெற்றிகரமாக செயற்படுத்திக் கொண்டார்கள்.

குறுகிய நேரத்திற்குள் 8 இடங்களில் தொடர் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதென்பது சாதாரண விடயமல்ல. யுத்த காலத்தில் கூட இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டது என்பதற்கு ஏபரல் 21 குண்டுத்தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

சம்பவம் இடம் பெற்ற பின்னர் அச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதாக புலனாய்வு பிரிவினரது செயற்பாடல்ல எந்நிலையிலும் முன்னெச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.

ஏப்ரல் 21 நாளில் இடம் பெற்ற 8 தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

30 பேருக்கு எதிராக கொலை, அடிப்படைவாத செயற்பாட்டுக்கான திட்டமிடல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே வெகுவிரைவில் முக்கிய தரப்பினர் பலர் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

நாட்டில் தீவிரவாதம் இனியொருபோதும் தலைத்தூக்காது தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது  இயல்பான விடயம்.

எவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.அரசாங்கங்கள் மாற்றமடையலாம் ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை அரசியல் தேவைக்கேற்ப மாற்றமடைய கூடாது. அரசியல் கொள்கையை காட்டிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை உறுதியாக இருத்தல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.