அதானி குழுமம்

அதானி குழுமம்

மன்னார் பகுதியில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!

மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

 

S.துரைராஜா, A.H.M.D.நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கபுலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் எங்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது – அதானி குழுமம்

மன்னாரில் தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் இடம்பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

 

உள்நோக்கம் கொண்ட சக்திகள் மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள 250 மொகவோட் காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன என அதானி குழுமத்தின் பேச்சாளர் எக்கனமிநெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

காற்றாலையை அமைப்பதற்கான இடத்தை மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகே தெரிவுசெய்ததாக தெரிவித்துள்ள அவர் பறவைகளின் பறக்கும் பாதையில் விசையாழிகள் அமைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் பேண்தகுஎரிசக்தி அதிகாரசபை பறவைகள் மற்றும் வெளவால்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட பேராசிரியர் தேவகவீரக்கோன் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் இலங்கை பறவைகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தரவுகளை ஆராய்ந்த பின்னரே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது எனவும் அதானி குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

சுற்றுசூழல் பாதிப்பை குறைப்பதற்காக காற்றாலை திட்டத்தை முன்னெடுப்பவருக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம் அதனைமுழுமையாக பின்பற்றுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் சுற்றுசூழல் பாதிப்பை தவிர்ப்பதற்காகவும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்த திட்டத்தினை பூர்த்தி செய்வதற்காகவும் நாங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பறவைகளை இனம் காண செயற்கை தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் ஆபத்தான தருணத்தில் டேர்பைன்கள் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சர்வாதிகாரமாக மேற்கொள்ளப்படும் அதானி குழுமத்தின் காற்றாலை செயற்றிட்டம் – மன்னார் தீவில் வாழும் மக்கள் அச்சுறுத்தல் நிலையில் !

மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் காற்றாலை செயற்திட்டம், சர்வாதிகராமான முறையில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்றைய தினம் மன்னார் பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது பிரஜைகள் குழுவினரால் குறித்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

“மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கின்ற காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை தற்பொழுது விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எமது மன்னார் மாவட்டத்து மக்கள் இந்த காற்றாலை பிரச்சினையின் காரணமாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை அமைதி வழியிலே சாத்வீகமான முறையிலே நடத்தி இந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அதிபருக்கும் தங்களுடைய ஆதங்கங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

இந்த காற்றாலை மின் பூங்கா திட்டத்தின் மூலமாக மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் கூட அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காமல் மக்களுடைய வேண்டுகோளை புறந்தள்ளி திரும்பவும் தெற்கு பகுதியில் முடித்து வடபகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலே இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றார்கள்.

ஏற்கனவே தலைமன்னார் தொடக்கம் தாழ்வுபாடு வரை கிட்டத்தட்ட 36 காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன.

அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தலைமன்னார், நடுக்குடா ,பேசாலை, பெரியகரிசல், புதுகுடியிருப்பு, சின்னகரிசல், தோட்டவெளி, தாழ்வுபாடு, கீரி போன்ற கிராமங்கள் இந்த காற்றாலை மின் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறன.

இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது மீன்பிடி, சிறு விவசாயம், அதே போல் அந்த பகுதியில் இருக்கின்ற பனை, தென்னை வளங்களை பயன்படுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.    ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக மீனவர்கள் மீன்பிடியிலே கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றனர்.

வீதிகளில் போராட்டங்களை மேற்கொண்டு மன்னார் மக்கள் தங்களுடைய அவல நிலையை பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். என்றாலும் கூட இவை எவற்றையும் கவனத்தில் எடுக்காமல் திரும்பவும் இப்படியான ஒரு செயல் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதை நினைக்கின்ற போது எமக்கு மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.

நமது மன்னார் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மன்னர் தீவுப் பகுதிக்குள் தான் வாழ்ந்து வருகின்றார்கள். நகரமும் தீவுப்பகுதிகுள் தான் அமைந்திருக்கின்றது.   எனவே இத்திட்டத்திற்காக பெருமளவு காணிகள் தனியாரிடம் இருந்து அதிகமான விலை கொடுத்து வாங்கப்பட்டதன் காரணமாக  விவசாயம், கடற்றொழில் அதேபோன்று பனை தென்னை வளங்களினால் தங்களுடைய ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருக்கும் பலர், தற்போதும், எதிர்காலத்திலும் அனைத்தையும் இழந்து ஒரு வறுமை நிலைக்குள் தள்ளப்படவேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் நகரத்தில் இருக்கின்ற வியாபாரிகளின் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான துன்ப நிலையில் தான் நாங்கள் மன்றாட்டமாக இந்த அரசாங்கத்திடம் இச்செயற்திட்டத்தை வேறு பயன்பாடு இல்லாத இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஏற்கனவே வடபகுதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் தொடக்கம் இராண்டாயிரம் வரை இந்திய இழுவை படகுகள் மீன்வளத்தை அழித்துக் கொண்டு செல்கிறார்கள்.   இது ஒரு புறம் இருக்க இந்த காற்றாலைகளும் கடற்கரையோரங்களில் அமைக்கும் போது கரையிலே மீன்கள் வருகின்ற நிலைமை குறைவடையும்.

இதனால் கரையோர மீனவர்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றார்கள். இன்னும் சில காலங்களில் இந்தத் தீவை விட்டு வெளியேற வேண்டிய துன்பமான நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

இந்த ஆபத்தை உணர்ந்தவர்களாக மிகவும் வினையமாக இந்த நாட்டு அதிபரிடமும், அரசாங்கத்திடமும் இந்திய தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திடமும் வேண்டி கொள்வது,  நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தேவை. ஆனாலும் மக்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்விடங்களை அழித்து ஏற்படுத்தும் அபிவிருத்தியாக வேண்டாம்.

அப்பிடியான அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவே மன்னார் மாவட்டத்தில் பாவிக்கப்படாத எத்தனையோ ஏக்கர் காணிகள் உள்ளன. அவ்வாறான காணிகளை இனம் கண்டு அந்த இடங்களின் இந்த திட்டத்தை மாற்றி இந்த மன்னார் தீவில் நாங்கள் வாழ்வதற்கான உரிமையை தந்துவமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

கூறு போட்டு அதானி குழுமத்துக்கு விற்கப்படும் இலங்கையின் வடபகுதி – மீனவ சங்கம் விசனம் !

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசு அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசிற்கு விற்கப் போகிறார்கள் என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் மீனவர்களுக்கு கிடைக்காமை தொடர்பான பிரச்சனை,  இதேபோல் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட – அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம் மற்றும் அதற்கு அப்பால் அதானி குரூப் எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் அத்தோடு கனியவள மண் அகழ்வு,  அதனோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் , வடக்கில் உள்ள மீனவ அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.

கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குரூப் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.
தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாது ஆனால் இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு உரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால் வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக் காணப்படுகிறது.

ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசுக்கு தெரியவில்லை. காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது.

இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றிருக்கின்றது. அதானி என்பவர் இந்தியாவில் பாரியபணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர். அங்கே அவருக்கு நிறைய பிரச்சனைகள் அதாவது அவரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற துறைமுக நகரங்கள் கூட ஒரு பிரச்சனையாக காணப்படுகிறது. அவரைக் கொண்டு வந்து வடபகுதியை விற்க போகின்றார்கள். நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்திஇந்தியாவுக்கு வடபகுதியினைவிற்க போகின்றார்கள்” என்றார்.

 

கௌதம் அதானிக்கு எதிராக இலங்கையில் பேராட்டம் !

முன்னாள் மின்சார சபை தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ  “அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலை தொடர்பான உரிமத்தை வழங்குமாறு மோடி கோட்டாபாய ராஜபக்சவுக்கு அழுத்தம் வழங்கியதாக தெரிவித்த கருத்து பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறித்த கருத்தை அதானி குழுமமும்,  ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஸவும் மறுத்திருந்த நிலையில் மின்சார சபை தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தனது பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.

 

இந்த நிலையில், இந்திய அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு எதிராக பம்பலப்பிட்டியில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் போது போராட்டக்காரர்கள் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.