ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையில் பயணிக்கும் இலங்கையில், காதி நீதிமன்றங்கள் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (09.02.2021) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“ஒரு நாடு ஒரு சட்டம் என்பதுதான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதானக் கொள்கையாகக் காணப்படுகிறது. அரசமைப்பிலும் ஒரு நாட்டில் ஒரு சட்டம் என்றுதான் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு திருமணச் சட்டம் காணப்படுகிறது. இந்தச் சட்டமானது நபிகள் நாயகத்தினால், கிறிஸ்துவுக்கு முன்பு வகுக்கப்பட்டதாக அல்- குர் ஆனில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலேயே இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், இலங்கையில் இது நடைமுறையில் காணப்படுகிறது.
இதுதொடர்பாக அமைச்சரும் அறிந்திருப்பார் என்று கருதுகிறோம். அத்தோடு, முஸ்லிம் மக்களுக்கு என இந்த நாட்டில் காதி நீதிமன்றங்களும் காணப்படுகின்றன.
இந்த நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் எமது நாட்டின் நீதி அமைச்சின் ஊடாகத்தான் வழங்கப்படுகின்றன. முஸ்லிம்கள் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் , அவரை கட்டாயமாக முஸ்லிமாக மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. விவகாரத்து செய்வதாக இருந்தாலும், சாதாரண நீதிமன்றங்களில் மேற்கொள்ள முடியாத நிலைமைக் காணப்படுகிறது.
இது அசாதாரண விடயமாகும். நாட்டு மக்கள் ஒரு நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க வேண்டும் என்று இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இதனை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.