இலங்கை மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – கஹவத்தையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மேலும் தெரிவிக்கையில் “.. உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும். அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன்.
அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும். கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் இருந்தனர்.
குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் இருந்தது. எனவே, இருந்ததை விட மோசமான நாடாளுமன்றத்தையா அல்லது சிறந்த நாடாளுமன்றத்தையா உருவாக்க வேண்டும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேருக்குக் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும்.
எனவே, ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்றார்.