அனுரகுமார திசநாயக்க

அனுரகுமார திசநாயக்க

அனுர ஆட்சியில் மீளவும் இனவாதம் தலைதூக்கவுள்ளது – எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இதில் வரப் போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிற்பாடு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும், இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

மேலும், புதிய அரசமைப்பு வரைபுக்கு எதிராக, அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்புக்கு முரணானது என்ற பலமான செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபைத் தயாரிப்பதற்கும், அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப் போகின்றோம்.

 

அதற்குத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக் கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம், அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

எனக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்கவையும் – சஜித் பிரேமதாசவையும் இணைக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன – அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் கூட்டம் இன்று காலி, எல்பிட்டிய நகரில் இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு தொடர்பாக சிந்தித்திருந்தால் எவ்வளவோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்போது அதனை செய்யவில்லை.

 

இன்று அவர் தேர்தல் தோல்விக்கு அஞ்சி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார். மக்கள் பெரும்பான்மை தமக்கு இல்லை என்பதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நன்கு அறிவார்.

ரணிலும் சஜித்தும் இன்று வெவ்வேறாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

 

இருவரும் தனித்து போட்டியிடுவதனால் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றிபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிவார்கள். எனவே தற்போது ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

 

ஒன்றிணைவது தொடர்பாக ரணிலும் சஜித்தும் இதுவரை கலந்துரையாடவில்லை. ஆனால் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் அது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நாட்டு மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது.

 

நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே நாம் மக்கள் ஆணையை கோருகின்றோம். நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்காதவர்களுக்கு மக்கள் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் பேச்சில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை – சிறீதரன் காட்டம் !

அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ‘எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் – எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரிவல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையவேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டுசெல்லவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.

 

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக, ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்க தரப்பில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மேலும், 13 ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என்றார்.

“இழக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை வென்றெடுப்போம்!” – யாழ் வருகின்றார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க !

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

 

குறித்த மாநாடானது, நாளைய தினம் (04.04.2024) இடம்பெறவுள்ளது.

 

அதன் முதல் நிகழ்வாக ஆசிரியர்களின் அபிமானமிகு வடமாகாண மாநாடு பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டல் சங்கிலியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

“இழக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை வென்றெடுப்போம்! ஆசிரியர் – மாணவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் அச்சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க மற்றும் தேசிய அமைப்பாளர் தோழர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பின் மாநாடு பிற்பகல் 6.30 மணிக்கு ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

 

இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர்,வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர்களான தோழர் சமீர அல்விஸ், தோழர் சதானந்தம் நேசராஜன் மற்றும் தோழர் பூலோகராஜா சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழர்களை சந்திக்க தயாராகும் அனுரகுமார தரப்பு!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது, கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 5 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இந்தியாவின் முக்கிய தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் அனுரகுமார திஸாநாயக்க கனடாவுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பயணத்தின் போது கனடாவில் உள்ள அரசியல்வாதிகளை அவர் சந்திக்கவுள்ளதுடன், ரொரன்டோ பகுதியில் நடைபெறவுள்ள கூட்டமொன்றிலும் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம்.” – வடபகுதி மக்களிற்கு ஜேவிபியின் தலைவர் அழைப்பு !

எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என  வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நாங்கள்கவனம் செலுத்துவோம்

இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியிலேயே பூகோளஅரசியலில் போட்டி காணப்படுகின்றது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இல்லை. இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் குறிப்பாக தமிழர்கள் முஸ்லீம்கள் தொடர்பில் – அவர்களது மொழி கலாச்சார விடயங்கள் மற்றும் ஆட்சி முறையில் பங்கெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.

இந்த விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வை காணவேண்டும். வடக்கு மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி  விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் – அனுரகுமார திசநாயக்க

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான பொருளாதாரத்திற்கு புத்துயுர்கொடுப்பதற்கான துணிச்சல் எங்களுக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.