“ஊழல் ஒழிப்பு தினதில் அறிக்கை விடுவதால் நாட்டின் ஊழல் ஒழிந்துவிடப்போவதில்லை, ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே சிறந்த ஆட்சி” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்துள்ளார்.
சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதமாக குறைத்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 450 கோடி ரூபா வரி அரசாங்கத்திற்கு இல்லாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (10.12.2020) 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்,
திசாநாயக பாராளுமன்றத்தில் மேலும் கூறுகையில்,
“கடந்த மே 23 ஆம் திகதி 33 ரூபாவாக இருந்த சீனிக்கான இறக்குமதி வரி விலையானது தற்போது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதாலும், மக்களிடையே சீனி பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் இந்த வரி அதிகரிப்பை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறியது. அதேபோன்று அதிகரித்து செல்லும் இறக்குமதி செலவை குறைக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனிக்கான வரியை 25 சதம் வரையில் குறைக்க நடவடிக்கையெடுத்தது. ஏன் இந்தளவுக்கு குறைக்கப்பட்டது. சகல பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கையில் சீனிக்கான வரியை மாத்திரம் எப்படி குறைத்தது. அப்போது முதல் 85 ரூபாவுக்கே சீனி சந்தையில் விற்கப்படும் என்று கூறப்பட்டது.
நுகர்வோர் அதிகாரசபையினர் அதிகரிக்கப்பட்டிருந்த போது கொண்டு வரப்பட்ட சீனியின் அளவின் இருப்பை ஆராய்ந்தனர். 90,000 மெற்றிக்தொன் களஞ்சியத்தில் இருந்தது. இதனால் அங்கு சிக்கல் ஏற்பட்டது. எங்கேயும் அந்த விலைக்கு சீனியை கொடுக்க முடியாது போனது. பின்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த வரியை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனபோதும் குறைக்கப்பட்ட வரியை ஒரு மாதம் வரையில் மாற்ற முடியாது என்பதால் அந்த ஒரு மாதக் காலத்திற்குள் 25 சத வரியுடன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது இந்த விடயத்தில் எப்படி கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது.
அதேபோல் 2020 டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவை நிறுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் ஊடாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே. கடந்த ஆட்சியில் அலகொன்றை 26 ரூபாவுக்கு என்ற அடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய முயற்சித்த போதும் அதனை அந்த ஆணைக்குழு நிறுத்தியது.
இதன்படி அது மக்களுக்காக செயற்படும் ஆணைக்குழுவாக இருக்கின்றது. இதனை எப்படி மூடுவதற்கு உத்தரவிட முடியும். தொலைபேசி மூலம் அறிவித்து அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களை விலகுமாறு கோரியுள்ளனர். இவர்களை நீக்க வேண்டுமாயின் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு இருந்தால் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்து அதனை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளாலேயே அவர்களை நீக்க முடியும். இந்த ஆணைக்குழுவை இல்லாமல் செய்யும் முயற்சியும் மெகாவோட் 300க்கான மின் உற்பத்தி நிலையத்தின் கொடுக்கல் வாங்களின் ஒரு அங்கமேயாகும்,
நேற்றிய தினத்தில் (09.12.2020) ஊழல் ஒழிப்பு தினத்தில் ஜனாதிபதி கருத்தொன்றை முன்வைத்திருந்தார், இந்த நாட்டில் மக்கள் ஊழலை தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்றார், ஊழலுக்கு துணை போய்க்கொண்டு, ஊழல் வாதிகளை காப்பற்றிக்கொண்டு, ஊழல் வாதிகளுக்கு எதிரான தீர்ப்புகளில் ஜனாதிபதி தலையிட்டுக்கொண்டு, ஊழலுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கூறுகின்றார். ஊழல் ஒழிப்பு தினதில் அறிக்கை விடுவதால் நாட்டின் ஊழல் ஒழிந்துவிடப்போவதில்லை, மாறாக ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே சிறந்த ஆட்சி முறையாகும் எனவும் அவர் கூறினார்.