அனுரகுமார திசாநாயக்க

அனுரகுமார திசாநாயக்க

“கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதே ஒரே தீர்வு.”- நாடாளுமன்றில் அனுரகுமார திசாநாயக்க !

ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த இன்றும் இடம்பெறும் விவாதத்தின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆசனத்தில் இருந்துகொண்டு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கும் எந்தவொரு தீர்வையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தமது கட்சி ஆதரவளிக்கும். இன்னொருபக்கம் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவும் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

“ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார்.” – அனுரகுமார திசாநாயக்க

ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் பேசிய அவர்,

இதுவரை காலமாக அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தனர். இன்று பொருளாதார நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளினாலும் இனியும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

எனவே இன்று மாற்று அணியொன்றும், மாற்று பொருளாதார திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான சரியான தருணம் இதுவாகும்.  மக்கள் இப்போது சரியான அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். இதுவரை காலமாக பிரதான இரண்டு கட்சிகள் உருவாக்கிய பொய்களில் ஏமாற்றப்பட்டே மக்கள் ஆட்சியை உருவாக்கியுள்ளனர். ஆனால் இன்று அந்த பொய்களை மக்கள் கேட்க தயாராக இல்லை.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதே தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அல்ல. 2005  ஆம் ஆண்டில் நாம் எடுத்த சில தீர்மானங்கள் தாமதாகியிருந்தால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள யுத்தமொன்று உருவாகியிருக்கும்.

நாட்டில் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன நல்லிணக்கத்தை உருவாக்கி ஆட்சியை கொண்டுசெல்லும் மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை.

எனவே தான் சகல மக்களின் மனங்களையும் வெற்றிகொண்டு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கின்றோம். அதன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

“அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” – அனுரகுமார திசாநாயக்க

“அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க  அரசு மீதான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று (04.12.2020) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

“இன்னமும் எமது மக்கள், குறைந்த விலையில் அரிசியைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் .இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் அதிக விளைச்சல் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அரிசிக்கான நிர்ணய விலையை கொடுக்க முடியவில்லை.

மக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் ஆட்சி செய்கின்றது. தேசிய உற்பத்தியை பலப்படுத்துவோம் என அரசாங்கம் கூறினாலும் அதற்கான வரிக் கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” என்றும் அனுரகுமார திசாநாயக்க கூறினார்.