அனுர குமார திசாநாயக்க

அனுர குமார திசாநாயக்க

அனுர அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதா முஸ்லீம் ஒருவருக்கான அமைச்சு பதவி..?

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் அமைச்சரவை முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம் அளித்துள்ளார்.

எமது அரசாங்கம் இலங்கையர்களை உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மத ரீதியான அடையாளங்களை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

76 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களும் தங்களது மத, கலாசார வேறுபாடுகளை மறந்து ஒரே நாடாக வாக்களித்து பெரும்பான்மை ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேசிய மக்கள் அரசாங்கம் எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாது. அரசாங்கத்தின் கொள்கையில் அது இல்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர்.

இங்கு பாரபட்சம் காட்டுவதற்கு எதுவும் இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்

IMFஉடன் ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார தெரிவிப்பு !

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்கள் குழுவை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

 

மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். தனது தலைமையின் கீழ், சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மை போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்தார்.

 

அத்துடன் கடந்த காலங்களில் சமூக சேவை செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன், வளங்களை வினைத்திறனான ஒதுக்கீடு மற்றும் பாவனையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

 

நாட்டை ஆட்சி செய்வது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய அம்சமான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

 

அந்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவனரீதியான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு அதன் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

 

இதில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவேன் – அனுர குமார திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் சில தினங்களில் நல்ல செய்தி வெளியாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நாட்டில் சாதாரண மக்களை கொலை செய்த அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் சாதாரண மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் எப்பொழுதும் தமது உயிர் மாத்திரமே சிறப்பானது என்றும் சாதாரண மக்களின் உயிர்கள் மதிப்பற்றது என்றும் எவ்வாறெல்லாம் எண்ணுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டிய ஜனாதிபதி, இக் கொலைகளுக்கு இந்த மனநிலையே முதன்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.

தாஜுதீனின் கொலைக்கு காரணமானவர்கள் எவரும் இல்லை, லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விதம் இன்னும் தெரியவில்லை, எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தக் குற்றங்கள் அனைத்தையும் தான் ஆராய்ந்து வருவதாகவும் வலியுறுத்தியுள்ளதுடன் அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வோம் அதனை நினைவில் கொள்ளுங்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். நாளை அல்லது நாளை மறுநாள் அதைப் பற்றி உங்களுக்கு ஓரிரு நல்ல செய்திகள் கிடைக்கும் – என்றார். (ச)

நீங்கள் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது. – அனுர குமார திசாநாயக்க

நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது.

 

அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும்.

 

பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியில் இருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள். சில வாகனங்களைப் பார்த்தால், அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம். எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கிறோம். நாங்கள் அதை செய்கிறோம்.

நீங்கள் நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எங்களுக்கு தேவையில்லை. என்றார்.

சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். – உதயகம்பன்பில காட்டம் !

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது.

30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார்.

குறைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள்- ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதிகளின் வீடுகள் அகற்றப்படுகின்றன, எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான் அந்த வீட்டில் இல்லை. இது எனக்கு ஒரு பிரச்சனை அல்ல. சந்திரிகா மேடம் வெளியேற்றப்படுவது ஏன்? அந்த வீட்டை அவருக்குக் கொடுங்கள். மனிதாபிமான ரீதியாக இதனை கூறுகிறேன்.

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை நினைத்து பாருங்கள்.

இன்று எல்லாரும் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறார்கள். அது இன்னொன்று. இன்று மக்கள் மத்தியில் யாரும் பிரபலமாக இல்லை. பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், யாருக்கேனும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதை நிறுத்த வேண்டாம்.

என்னுடைய அனைத்தையும் அகற்றிவிட்டு மற்றவர்களுக்கு வழங்குங்கள்.

தற்போது சம்பளம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னதைச் செய்யுங்கள், அனைவரின் ஆதரவும் உண்டு. நான் இந்த பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்றே நினைத்தேன்” என்றார்.

அனுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை தயாரிக்க என்னை பாராளுமன்றம் அனுப்புங்கள்- உதய கம்மன்பில

எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரணில் விக்ரமசிங்க, ரிஷாத் பதுர்தீன் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உருவாக்கி அந்தத் திறமையை தான் வெளிப்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு மிகப்பெரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, அனுர ஜனாதிபதி என்பதாலேயே அவர் கோமாவில் இருந்து விழித்துக்கொண்டார் என்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியினருக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

 

இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மக்கள் அனுர குமாரவின் பக்கம் தான் நிற்கிறார்கள் – யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட NPP முதன்மை வேட்பாளர் இளங்குமரன்!

முன்பள்ளி முதல் மும்மொழி அறிமுகம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுந்த சம்பளம்!!

புலம்பெயர்ந்தவர் உதவியோடு வடக்கில் தொழிற்சாலைகள் அமையும்!!!

தேசிய மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் உடனான நேர்காணல்.

 

 

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கான திறனில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேறு கட்சியில் இருந்தும் அரசாங்க உறுப்பினர்கள் வேறு கட்சியில் இருந்தும் நாட்டுக்கு செயற்படமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்படி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின் அபிவிருத்திக்கான தெளிவான பார்வையுடன் கூடிய பலமான அணியொன்றை தமது அணி கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.