“தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றுக்கும் மக்களின் ஆதரவு கிடையாது. மஹிந்தவில் இருந்து ரணிலுக்கும் ரணிலில் இருந்து மஹிந்தவுக்கும் அதிகாரம் மாறுவதாக இருந்தால் மட்டுமே தேர்தலை நடத்துவார்கள்.
ஆனால் இம்முறை தென்னிலங்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திசைகாட்டிக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கூட இளையோர்கள் மத்தியில் திசைகாட்டிக்கு ஆதரவு உள்ளது. இதனால் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தேர்தலை நிறுத்த முயற்சித்தார். அது சாத்தியப்படவில்லை. நீதிமன்றம் ஊடாக தேர்தலை தடுக்க முயற்சித்தார். அதுவும் முடியவில்லை. அரச அச்சகருக்கு பணம் பெறாமல் வாக்குச்சீட்டை அச்சடிக்க வேண்டாம் என ரணில் கூறினார். திறைசேரி செயலாளருக்கு தேர்தலுக்கு பணம் வழங்க வேண்டாம் என ரணில் கூறினார். ரணில் விக்ரமசிங்க தேர்தலை குழப்பவே முயற்சிக்கின்றார்.
கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசியல் ஜனநாயகத்தை குழப்பினார். இன்று அவரது மருமகன் ரணில் ஜனநாயகத்தை குழப்புகிறார்.
மார்ச் 20 உள்ளூராட்சிமன்ற காலம் முடிவடைகின்றன. அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்வது யார்?
அரசியல் யாப்பை மீறும் ஜனநாயகத்தை குழப்பும் ஆட்சியர்களின் உத்தரவுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் கட்டுப்பட வேண்டுமா? அவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
இந்நாட்டை மாற்றியமைக்க வேண்டும் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதனை தேசிய மக்கள் சக்தியாலேயே செய்ய முடியும்.
தினேஷ் சொல்கிறார் ரணில் கள்வர் என்று – ரணில் சொல்கிறார் மஹிந்ந கள்வர் என்று – யார் யாருக்கு தண்டனை வழங்குவது. அவர்களை அவர்களே பாதுகாக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்தால் திருடர்களை வெளியேறவிடாது விமான நிலையத்தை மூடுவேன் என மைத்திரிபால கூறினார். அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கினார். மைத்திரிபால. மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கும் தரப்பாக திசைகாட்டி இருக்கும்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் வரை மலட்டு கொத்து இருந்தது அதன் பின்னர் மலட்டு கொத்து எங்கு போனது. நாங்கள் யுத்தம் செய்தோம் எங்கள் பிள்ளைகள் யுத்தம் செய்யவேண்டுமா?
தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வடமாகாண மக்கள் மீது திருப்ப முனைகிறார். அதற்கமைய 13ம் திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்.தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர் என்றார்.