அமித் ஷா

அமித் ஷா

நாம் வெற்றி பெற்றால் சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். – அமித் ஷா

என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று (மே 16) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

“அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி காங்கிரஸும், ஆர்ஜேடியும் ஒருபோதும் நினைக்கவில்லை. மோடி அரசுதான் அதை செய்தது. பீகாருக்கு வளர்ச்சி அரசியல்தான் தேவை, காட்டுராஜ்ஜியம் அல்ல.

நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோயில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். ராமர் கோயிலுக்குச் செல்லாமல், ஒதுங்கியவர்களால் (எதிர்க்கட்சிகள்) நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. சீதைக்கு யாராவது கோயில் கட்ட முடியும் என்றால், அது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும்” என தெரிவித்தார்.

பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவின் பிரதமராக தமிழர்.” – பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அறிவிப்பு !

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி சென்று விட்டார்.

முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்தாா்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வேண்டும் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர், அண்ணாமலை பிரதமராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த தலைவர்களை இதுபோன்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

“தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும்.

பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.