அமெரிக்காவை தோற்கடிப்போம் – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !
இலங்கைக்கு வெளியே தமிழ் மக்கள் அதிகம் வாழும் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால் ட்ரம் கனடாவை தங்களுடைய 51வது மாநிலம் என்று குறிப்பிட்டதும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத இறக்குமதி வரியை அறிவித்ததும் தெரிந்ததே. இந்நிலையில் புதிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வர்த்தக போரில் பெறுவோம் எனச் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்கர்கள் எங்களை தவறாக எடைபோடக்கூடாது ஹொக்கியை போல வர்த்தகப்போரிலும் அமெரிக்காவை தோற்கடிப்போம் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் வரிகளை விதிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2007 இல் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட பொருளாதார வீழ்ச்சி அலை உலகைத் தாக்கிய காலகட்டத்தில்இ மார்க் கார்னி கனடாவின் மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஒப் இங்கிலன்டின் தலைவராகவும் இருந்தவர். உலகின் இரு செல்வந்த நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைவராக இருந்த ஒரேயொருவர் மார்க் கார்னி.
இவருடைய ஆட்சியின் கீழ் கனடா பொருளாதார ரீதியில் மீட்சிபெற நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரமின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை எல்லை நாடாகக் கொண்ட கனடாவை மிகப் பாரிய அளவில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. மார்க் கார்னியின் ஆட்சி எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகின்றது என்பதை ஐரோப்பிய தலைவர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள்.
மார்க் கார்னி குடிவரவாளர் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை இலங்கைத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வன்னிப் பெருநிலப்பரப்பில்: கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையிலும் பார்க்க அதிகமான தமிழர்கள் ரொறன்ரோ ஸ்காபரோவில் வாழ்கின்றனர். இவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரியவரும்.