அமைச்சர் அலிசப்ரி

அமைச்சர் அலிசப்ரி

“கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை.” – அமைச்சர் அலிசப்ரி

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனடா முறு்றமு் இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி  உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால்  அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம்  கனடா பிரதமருக்குள்ளது.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார். இலங்கையில்  இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனட பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

“விடுதலைப்புலிகளுக்கு அடிபணியாதோர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.” – அமைச்சர் அலிசப்ரி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார்.

ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார்.

அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது,

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியில் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு  அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.

விடுதலைபுலிகளை பல்வேறுகாலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும்  ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்துள்ளனர்இஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்ட சரியாக சிந்திக்கும் அனைவரும் ஆனந்தசங்கரியின் அர்ப்பணிப்பையும் துணிவையும் பாராட்டியுள்ளனர் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தியை கொலை செய்த புலிகளை நாம் அழித்தோம் – அமைச்சர் அலிசப்ரி

32 வருடங்களிற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களிற்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலிசப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதி திரட்டும் சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

 

“தமிழர் பிரச்சினைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும்.”- சர்வகட்சி கூட்டத்தில் அமைச்சர் அலிசப்ரி !

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

‘ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறிமுறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்தபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார்.

இதற்கு முன்னைய இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இப்பொறிமுறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப்பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

எவ்வாறானாலும் அதுபோன்றதொரு ஒழுங்குமுறையை இதுவரை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம். இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சனத்தொகையில் 5லட்சத்துக்கும் அதிகமானோர் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் – அமைச்சர் அலிசப்ரி

“போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது மாத்திரம் முழுமையான அவதானம் செலுத்தாமல் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவும்  கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது நீதிமன்றத்தில் நிலுவையில் காணப்பட்ட பல இலட்ச வழக்குகளை துரிதமான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். அத்துடன் காலத்திற்கு தேவையான பல சட்டங்களை இயற்றினோம், பழமையான பல சட்டங்களை திருத்தம் செய்தோம்.

எமது நாட்டில் ஒரு மில்லியனுக்கு 15 நீதிபதிகள் உள்ளார்கள். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலுவையில் உள்ள வழக்குகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் நீதித்துறையில் கட்டமைப்பில் உள்ள சிறப்பு விடயங்களை இலங்கையில் செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் ஹெரோய்ன் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

சிறு வயதினை உடையவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றி வளைப்பதை இலக்காக கொண்டுள்ளோம், ஆனால் உலக நாடுகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுகாதார கோணத்தில் பார்க்கப்படுகிறார்கள்.

போதைப்பொருள் பாவனையுடன் கைது செய்தப்படுபவர்களின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமாக அமைகிறது, ஆகவே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகள் தான் நாட்டை இல்லாதொழிக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரிகளுடன் அரசியல்வாதிகள், முக்கிய தரப்பினர் உட்பட பலர் தொடர்புப்பட்டுள்ளார்கள்.

ஆகவே போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு போதைப்பொருள் உள்வருவதை தடுக்கவும்,விநியோகத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் அறியவில்லை. ஆகவே போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளை பாடசாலைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள சிறுவர்களுக்கு புனர்வாழ்வு உட்பட மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.