அமைச்சர் உதய கம்மன்பில

அமைச்சர் உதய கம்மன்பில

“பசில் ராஜபக்சவை விரட்டும் முயற்சியில் சில நேரம் நாம் கொலை செய்யப்படலாம்.” – உதய கம்மன்பில

பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு திரும்புவம் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும், இது ஆரம்பம் மாத்திரமே, இதன் காரணமாக நான் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படலாம். சிறையில் அடைக்கப்படலாம், சில நேரம் கொலை செய்யப்படவும் கூடும். எம்மை கொலை செய்தாலும் எமது போராட்டத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம்.என்றும்  முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

இலங்கையின் தற்போதை நெருக்கடி நிலைமை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“திட்டமிட்டு பொருளாதாரத்தை வீழ்ச்சியடை செய்யும் தந்திரம் காரணமாகவே தற்போது மக்கள் வரிசைகளில் நின்று கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது ஏற்பட்ட நிலைமையல்ல. ஏற்படுத்தப்பட்ட நிலைமை.

இந்த நிலைமை ஏற்பட காரணமாக இருந்த பசில் ராஜபக்ச என்ற அழகற்ற அமெரிக்கர் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை. அவர் திரும்பிச் செல்லவில்லை என்றால் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு எதிராக உள்ளுக்குள் இருந்து நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இதற்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.

 

டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறியதன் காரணமாகவே டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனது அறிவிப்பால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றால், மருந்து, சீமெந்து,இரும்பு, எரிவாயு, பால் மா, கோதுமை மா ஆகியவற்றுக்கு எப்படி தட்டுப்பாடு ஏற்பட்டது என நான் அந்த அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புகிறேன்.

எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒரே காரணம் டொலர் பற்றாக்குறையே. கையிருப்பில் இருந்த குறைந்த தொகையான அந்நிய செலாவணியை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய நிதியமைச்சர் தவறியதே டொலர் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்தது. வேலை செய்ய தெரியாத பசிலின் இயலாமையை மறைக்க, எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம்” என்றார்.

அமைச்சு பதவி பறிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும் – பஷில் ராஜபக்ஷவின் ரகசிய திட்டங்கள் தொடர்பிலும் பகிரங்கப்படுத்தினார் விமல்வீரவங்ச !

“இனிமேல் எந்தக்காரணத்தை கொண்டும் அமைச்சுப்பதவியை ஏற்கப்போவதில்லை” என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதிவியிலிருந்து நேற்று திடீரென நீக்கப்பட்டதையடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் இருந்தே எமது தரப்புக்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஏனெனில் பசில் ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியை தனது சொந்தக் கட்சியாக நினைத்து செயற்பட ஆரம்பித்தார்.

ஆனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக தகுதியானவர் என கருதி, நாம் எமது செயற்பாடுகளை மேற்கொண்டோம்.

இது பசில் ராஜபக்ஷவின் கனவுக்கு தடையாக அமைந்தது. இறுதியில் அவரும் விருப்பப்படாமல் கோட்டாபய ராஜபக்ஷவுக்காக வேலை செய்தார்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்தபோது, அப்போதைய ஜனாதிபதியிடம் சென்று தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு பசில் ராஜபக்ஷ கோரினார்.இதனை மஹிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இறுதியில், யாருக்கும் சொல்லாமல் பசில் நாட்டை விட்டுச் சென்றார்.

அரசாங்கத்துக்குள் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்தன. 20 ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து இது ஆரம்பமானது.

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு அமைச்சர் அந்தஸ்த்து வழங்கியமை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியமை என அனைத்து விடத்திலும் நாம் எதிர்ப்பினை வெளியிட்டோம்.

 

இது கொள்கை ரீதியான முரண்பாடாகும். இதனால் தான் இன்று ஒட்டுமொத்த நாடும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தான் நாம் மக்களுக்கு எடுத்துக் காட்டினோம். நாடு பள்ளத்தில் விழுந்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க எம்மால் முடியாது.

இந்த நிலையில், நாம் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவிட்டோம் என என்னையும் உதயகம்மன்பிலவையும் அமைச்சர் பதவிகளிலிந்து நீக்கியுள்ளார்கள்.

எம்மை நீக்கியமையால் நாட்டுக்கு டொலர் கிடைத்துவிடுமா? அல்லது எரிப்பொருள் ஊற்றெடுக்குமா? மின்சாரப் பிரச்சினைகள் இல்லாது போகுமா? அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?அத்தோடு, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றுக்கு கொண்டுவர நாம் என்றும் ஆதரவளிக்கவில்லை. இதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் எதிர்ப்பினைத் தான் வெளியிட்டோம்.

பசில் ராஜபக்ஷவினால் தான் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அவர் அமெரிக்க பிரஜையாவார். அமெரிக்கா நினைத்தால் நிதித்தூய்மையாக்கலின் கீழ் அவரை எந்நேரத்திலும் கைது செய்ய முடியும். அதிலிருந்து தப்ப வேண்டுமெனில் அவர் அமெரிக்காவுக்காக இங்கு சேவையாற்ற வேண்டும்.இந்தோனேசியாவைப் போன்று இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாகும். இதனை இலக்காகக் கொண்டுதான் அவர் செயற்பட்டு வருகிறார். நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் அவரால் முடியும். இதுதான் இன்றைய உண்மையான கதை.

எம்மை பதவியிலிருந்து நீக்கியமைக்கு பிரதமர் உடன்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதியின் கீழ் இனி மேல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுக் கொள்ள நாம் எப்போதும் தயாரில்லை.

இந்த அரசாங்கத்தை பசில் ராஜபக்ஷதான் வழிநடத்துகிறார். ஜனாதிபதியால் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட முடியாதுள்ளது. இதுதான் இன்றைய நிலைமை.

இவை தொடர்பாக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பினை வெளியிட்டோம். அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எம்மை நீக்கியுள்ளார்கள்.

அரசாங்கத்திலுள்ள நிறைய பேருக்கு இந்த நிலைமை புரிந்துள்ளது. அவர்களும் அதிருப்தியுடன் தான் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எமது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை.

எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது. நாம் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தோம். இதற்காக கதைத்தால் எமது பதவிகள் பறிபோகும் என்றால் நாம் கவலையடையப்போவதில்லை.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

“இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வந்தமையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.” – ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் வாசுதேவ !

“அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை எனவும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமல் வீரவன்ஸவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கியமை தவறானது என்று இன்று ஒட்டுமொத்த நாடும் கூறிவருகிறது.

இது மக்கள் ஆணைக்கும் எதிரான செயற்பாடாகும். இந்த நிலையில், நானும் இனிமேல் அமைச்சு பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

நான் இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்ல மாட்டேன். எனக்கு இனிமேல் அமைச்சருக்கான எந்தவொரு வரப்பிரசாதங்களும் தேவையில்லை.

அமைச்சருக்கான சம்பளம் கூட எனக்குத் தேவையில்லை. அடுத்த 3 வருடங்களுக்கு நான் இவ்வாறுதான் செயற்படுவேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், நாம் எதிரணியில் இணையவும் மாட்டோம். எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முற்பட்டும், அந்த முயற்சிகள் கைக்கூடவில்லை.

ஜனாதிபதியும் எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே இன்று உள்ளார். நாட்டு மக்கள் இன்று அதிருப்தியில் உள்ளார்கள். இதனை சுட்டிக்காட்டியே நாம் கருத்துக்களை வெளியிடுகிறோம்.

ஆனால், எமது ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயற்படுவதாலேயே இந்த விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கும்போதே நாம் ஜனாதிபதியுடன் ஒப்பந்தமொன்றை செய்துக் கொண்டிருந்தோம்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வரக்கூடாது என்று வலியுறுத்தினோம். எனினும், எமது ஒப்பந்தம் மீறப்பட்டது.

இதுவும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. அரசாங்கம் செய்தமை தவறு என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

“இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்.” – அமைச்சர் உதய கம்மன்பில

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும், வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது.” – அமைச்சர் உதயகம்மன்பில

ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தை திறக்குமாறு கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது.  கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் தொழிற்சாலையின்அ நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது அவசியம்.  தொழிற்சங்கங்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை.

தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை. ஆர்ப்பாட்டங்கள் எங்களிற்கு டொலரை பெற்றுத்தராது. அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பதை பசில் ராஜபக்ஷவே தீர்மானிப்பார் – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிதத்தர்.

மேலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுப்பாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வாறு மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுவீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் உதய கம்மன்பில

“பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுவீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

TamilMirror.lk

பொலிஸார் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அரசாங்கம் பேச்சிலன்றி செயலில் காட்டியுள்ளது. இந்த அதிகாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறான செயல்களை அனுமதிக்கவில்லை.அதனாலே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

இராணுவம் மற்றும் பொலிஸார் செய்யும் மனித உரிமை மீறல்களினால் ஜெனீவாவில் அரசாங்கம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவது பற்றிய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தவரை கொலை செய்தார்.உலகம் முழுவதும் பொலிஸாரினால் பொது மக்களுக்கு அநியாங்கள் நடைபெறுகிறது. அரசாங்கம் செயற்பாடமல் இருப்பது தான் தவறு.ஜெனீவா பிரேரணைக்கு இவ்வாறான விடயங்கள் காரணமல்ல. ஜெனீவா பிரேரணையை அரசு நிராகரித்துள்ளது என்றார்.

“அமெரிக்காவோ, ஐ.நா வோ இலங்கையைக் கண்டித்தோ காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது” – அமைச்சர் உதய கம்மன்பில

“அமெரிக்காவோ, ஐ.நா வோ இலங்கையைக் கண்டித்தோ காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது” என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப போராட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் திரண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன.

அரசுக்கு எதிராகத் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தியோ அல்லது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அழுத்தங்கள் கொடுத்தோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையைக் கண்டித்து காட்டமான அறிக்கை விட்டோ சர்வதேச அரங்கில் எமது நாட்டை அடிபணியவைக்க முடியாது.

நாட்டின் இறையாண்மையை மீறி எவரும் அரசை நோக்கிக் கைநீட்ட முடியாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே நாம் செயற்படுகின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசு போல் நாட்டை சர்வதேசத்திடம் நாம் அடகுவைக்க மாட்டோம். அதைச் செய்வதற்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கவில்லை.

சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை எவரும் உதாசீனம் செய்ய முடியாது.

மக்களின் ஆணையே ஏற்றே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகினோம்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கொள்கை.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பிரித்துப் பார்க்காமல் தேசிய பிரச்சினைக்குப் பொதுவான ஓர் அரசியல் தீவையே எமது அரசு வழங்கும்.

நாட்டின் சட்ட திட்டங்களை மீறி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றீர்கள் எனத் தமிழ் சிவில் சமூக அமைப்புகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

இனவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளார்கள் , இதனாலேயே அங்கஜன் இராமநாதனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது ! – உதய கம்மன்பில

இலங்கையில் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்ற சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பாக பல அமைச்சர்களும் தமது கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையில்  அது  தொடர்பாக விவாதிக்க வருமாறு விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் உதய கம்மன்பில பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று  (25.08.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் விவாதிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்களா என்பது தொடர்பாக என்னுடன் பகிரங்க சவாலுக்கு வருமாறு, நான் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறேன்.

அவரிடமுள்ள அனைத்து தரவுகளையும் தோற்கடிக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன். இனவாதத்தை வடக்கு மக்கள் நிராகரித்துள்ளார்கள். அவருக்கு 21 ஆயிரத்து 554 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. தனது அரசியலுக்காக அவர் இன்று இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்.

எனினும், இனவாத அரசியலை கைவிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனுக்கு 36 ஆயிரத்து 365 வாக்குகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 32 ஆயிரத்து 146 வாக்குகளும் வடக்கிலிருந்து கிடைத்துள்ளது.

இதிலிருந்தே வடக்கு மக்கள் இனவாதத்தை விரும்பவில்லை எனும் சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இனவாதிகளுடன் இணைந்து பயணிக்க தயாராக இல்லை. மாறாக தெற்குடன் இணைந்து ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறார்கள்.

இந்த காரணத்தினால்தான் விக்னேஸ்வரன் போன்றோர் மீண்டும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறார்கள்” என கூறினார்.