ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட இதர சர்வதேச ஸ்தாபனங்களிடத்தில் இலங்கையின் சுகாதாரத்துறையை மையப்படுத்தி புனையப்பட்ட பொய்களை மையப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்குரியவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் அடிப்படைகளுடன் பின்னிப்பிணைந்துள்ள சுகாதாரத்துறை, உணர்வு ரீதியான விடயம் என்பதால் அதனை பயன்படுத்தி இலகுவாக அரசியல் நன்மைகளை அடைவதற்கு பலதரப்பினரும் தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுகாதாரத்துறையானது நலிவடைந்துள்ளதோடு, பொதுமக்களுக்கான உரிய சேவையை முன்வைக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சும் கட்டமைப்பும் ஊழல்கள் நிறைந்தவையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வில் பங்கேற்றிருந்த சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யப்பா பண்டார உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக பதிலளிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சுகாதாரத்துறையானது, மக்களுக்கு சேவைவழங்குவதாக உள்ளது. அதனால் சுகாதாரத்துறை தொடர்பான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் உணர்வு ரீதியாக இலகுவாக பிரசாரம் செய்யக்கூடியவையாக உள்ளன.
அதனடிப்படையில் வங்குரோத்து அடைந்துள்ள எதிர்க்கட்சிகளும், சில தொழிற்சங்கங்களும், பொய்யான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக சுகாதாரத்துறையை கையிலெடுத்துள்ளன.
அவற்றின் பொய்யான பிரசாரத்தினால் எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையானது அதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது.
இதேநேரம், நான் சுகாதாரத்துறையை பொறுப்பெடுக்கும்போது 570 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அது 60 வரையில் குறைந்துள்ளது.
இவ்வாறான நிலைமைகள் பற்றியெல்லாம் தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் சிந்திப்பதில்லை. இலவச சுகாதாரத்துறையை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் நாட்டத்தின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் செயற்படுகின்றன.
இந்நிலையில் தான் எதிரணியினர் ஐ.நாவுக்குச் சென்று முறைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். நாட்டின் சுகாதாரத்துறை தொடர்பில் ஐ.நாவுக்குச் சென்ற செயற்பாடானது நகைப்புக்குரியதாகும்.
சர்வதேச நாடுகள் சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்காக தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதால் அவற்றுக்கு யதார்த்தமான நிலைமைகள் நன்கு தெரியும் என்றார்.