“ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா.கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒருமித்த நாட்டின் கொள்கையினை மாணவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை,சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அதிக அக்கறை கொள்ள வேண்டும். பாரிய போராட்டத்திற்கு மத்தியில் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இளம் சந்ததியினர் நாடு குறித்து பற்று இல்லாமல் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் நாட்டை பிளவுபடுத்தும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு ஆதரவாக 47 இற்கும் அதிகமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளன.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை அரசியலமைப்பின் ஊடாக பிளவுபடுத்த பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்தப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் பொது சட்டத்திற்கு அடிபணிய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாக கருதப்படும்.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் சார்பாக செயற்பட்டமையினால் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 30(1) பிரேரணையில் இருந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விலகியது. நாட்டுக்கு எதிரான பிரேரணைகளுடன் இணைந்திருக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது” என்றார்.