அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

தரம் 06 வகுப்பு முதல் உள்ள 10ற்கும் அதிகமான பாடத்திட்டங்களின் எண்ணிக்கை 07ஆக குறைக்கப்பட்டு கைத்தொழில் பாடங்கள் இணைக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த

06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 

வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்ப பூர்வீக கைத்தொழிகளை இணைத்து எஞ்சிய 03 பாடங்களையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பாடசாலைகளுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்து வலயத்திலும் அமைக்கப்பட்டுள்ள கணினி வள மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பாரிய வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும் அதேவேளை, மென்பொருள் உருவாக்கம் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக பிராந்திய மட்டத்தில் குழுவொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடத்தை இலவசமாகக் கற்கும் வாய்ப்பை மார்ச் 5ஆம் திகதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இது குறித்து, பாடசாலை அதிபரின் ஆலோசனையினை பெற்று திறன் மேம்பாட்டு அலுவலர்களின் வழிகாட்டுதலின் கீழ், பாடசாலை நேரத்துக்குப் பின், அருகில் உள்ள மத்திய நிலையங்களுக்கு சென்று இரண்டரை மணி நேரம் நடக்கும் பயிற்சியில் சேரலாம் எனவும், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

2024இற்கான புத்தங்கள் தற்போதும் அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

யுனெஸ்கோவுடன் இணைந்து 8 பாடசாலைச் சேர்ந்த 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்கவுள்ளோம். அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக்கொடுப்போம்.

யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தேசிய பாடசாலைகளுக்கு மட்டும் ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க ஏற்பாடு ” – இலங்கையின் இலவச கல்வியை அங்கவீனமாக்குகிறதா கல்வி அமைச்சு ?

ஆங்கில மொழியின் விசேட மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு, அனைத்து தேசிய
பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை பலராலும் விமர்சிக்கப்படும் ஒரு சூழல் உருவாக்கியுள்ளது.

தேசிய பாடசாலைகள் ஏற்கனவே அதிகப்படியான பௌதீக வளங்ளும் – ஆசிரிய வளங்களும் அதிகமாக கொண்டு காணப்படும் நிலையில் ஒப்பீட்டளவில் அடிப்படை கல்வி தொடங்கி பல விடயங்களில் பின்தங்கிய கிராமத்து பாடசாலைகளுக்கு கிடைக்கும் ஆசிரிய வளங்களும், பௌதீக வழங்களும் மிகச்சொற்பமானவையே. பெரும்பாலான தேசிய பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது கிராமப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாமலேயே வெளியேறும் துர்பாக்கிய நிலை இலங்கையில் காணப்படுகையில் கல்வி அமைச்சர் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கில பாடசாலையை வழங்கவுள்ளோம் என அறிவித்துள்ளமையானது பிற்போக்குத்தனமான கல்வி அமைப்பொன்று இங்கு காணப்படுவதையே உறுதிசெய்கிறது.

இலங்கையின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வெள்ளை ஆடைகளை வழங்குவதன் நோக்கம் சமத்துவத்தை போதிப்பதேயாம் என கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் இதே கல்வி அமைச்சு தான் இன்று தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண கிராமப்பாடசாலை ஒன்றின் அதிபரிடம் வினவிய போது “முதற்கட்டமாக தேசிய பாடசாலைகளில் பேச்சு ஆங்கில திட்டத்தை நடைமுறைப்படுத்தி பின்பு அதன் வெற்றி தோல்விகளை நோக்கி சீரமைத்து பின்பு அனைத்து பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கில திட்டத்தை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கலாம். இந்த தேசிய பாடசாலைகள் – தேசிய பாடசாலைகள் அல்லாத பாடசாலைகள் என பாடசாலைகளை வகை நிர்ணயம் செய்வதே மோசமான செயலாகத்தான் நான் பார்க்கிறேன். இது பாடசாலை மாணவர்களிடமும் – அவர்களின் பெற்றோரிடமும் தேசிய பாடசாலைகள் தரமானவை என்ற எண்ணம் வந்தமையே இன்றைய கிராமிய பள்ளிக்கூடங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. இந்த நிலையின் ஒரு வடிவமே அண்மையில் யாழ்.நீர்வேலியில் மாணவர்கள் இல்லாததால் பாடசாலை ஒன்று இழுத்து மூடப்பட்ட சம்பவமாகும். இந்த கல்வி முறைமையே மாணவர்களிடம் நீ உயர்ந்த தேசிய பாடசாலையில் படிக்கிறாய் – நீ கீழான கிராம பாடசாலையில் படிக்கிறய் என்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது.” எனக்கூறி விசனம் வெளியிட்டிருந்தார்.

ஒரு உடலின் வளர்ச்சி என்பது அனைத்து அங்கங்களும் சமனாக வளர்வதேயாகும். தனித்து ஒரு சில உடல் அங்கங்கள் மட்டும் அதிகப்படியாக வளருமாயின் அதனை நோய் நிலை என்போம். இலவசக்கல்வி அனைவருக்கும் சமனாக கிடைப்பதேயாம். தனித்து தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிப்போம் என்பதும் – அதனால் ஆங்கிலம் தெரிந்த சமுதாயம் ஒன்று உருவாகும் என கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதும் அந்த நோய் நிலைக்கு ஒப்பானதே !

பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த பொலிஸார் மற்றும் இராணுவம் – நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை!

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரியுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில், இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது அமைச்சு எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதெனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே எட்டியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.