அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“ஆட்சிக்காலத்தை நீட்டித்தால் வீதிக்கு இறங்குவோம்.” – எச்சரிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி !

“பொதுமக்களின் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சிக்காலத்தை நீடிக்க முயன்றால் வீதிக்கு இறங்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும்
பொதுமக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகள் மூலமாக தங்கள் ஆணையை வழங்குவார்கள் மக்கள்  பிரதிநிதிகள் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று அல்லது வேறு பொருளாதார சர்வதேச காரணங்களிற்காக ஜனாதிபதியோ – பிரதமரோ ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பில் இல்லை.  சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே பதவிக்காலத்தை நீடிக்க முடியும். பொதுமக்களிற்கு சேவையற்றுவதற்கு ஏதாவது தரப்பிற்கு விருப்பமிருந்தால் அவர்கள் அடுத்த மூன்று வருடங்கள் அதில் ஈடுபட்ட பின்னர் பொதுமக்களின் புதிய ஆணையைகோரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் எதிர்க்கட்சிகளின் கருத்து தொடர்பில் அமைச்சர் நாமல்ராஜபக்ச ,

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை.  அவ்வாறான திட்டம் எதுவுமில்லை,நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

“சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகியும் மலையக மக்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லை..” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்னார்.

இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்திய வீட்டுத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் மலையக பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது.

அமரர். தொண்டமான் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க பாடுபட்டவர். அதேபோல் தற்போதைய ஜீவனும் தொண்டமானும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றார். மலையக தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் மூலமே நாட்டுக்கு அந்திய செலவாணி கிடைக்கின்றது. நாட்டில் உருவான ஒவ்வொரு அரசாங்கமும் மலையக மக்கள் தொடர்பில் பேசினார்கள். ஆனால் ஆட்சியமைத்ததுடன் உங்கள் துக்கங்களை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகியும் மலையக மக்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லை. அதேபோல் சுதந்திரக் கல்வியும் மலையக மாணவர்களுக்கு உரிய வகையில் கிடைக்கவில்லை. எனவே ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் மலையக சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டிய கடமை உண்டு.

அதன்படி இன்றைய அரசாங்கம் சிரமங்களுக்கு மத்தியிலும் தடைப்பட்டிருந்த அபிவிருத்தியை முன்னெடுத்து செல்கின்றது. அதற்கமைய மலையக பகுதிகளில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்ட பாடசாலைகள் இன்று தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் உலகமும் எமது நாடும் பல சவால்களை சந்தித்துள்ளது. அதன்படி ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு பெருந்தோட்ட மக்களுக்கு கோதுமை மா சலுகையை வழங்க தீர்மானித்தனர். அதன்படி 80 ரூபாவுக்கு கோதுமைமா வழங்கப்படுகின்றது. ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமையவே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது. ஆகவே நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே இதுவாகும். பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றார்.

“அரசிலிருந்து வெளியேற நாம் தயங்க மாட்டோம்.” – நாமலுக்கு மைத்திரிபால சிறிசேன பதில் !

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.” என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.

‘அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள். சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது. இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.

இதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை புரிந்துகொள்ளும். அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. எனினும், அரசு தவறான பாதையில் தொடர்ந்து பயணித்தால் பிரதான பங்காளிக் கட்சியான நாம் அதிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்” – என்றார்.

“இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாராகிறது” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.02.2021’) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது,

நான் அமைச்சராகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைய ஆரம்பித்து 05 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இது எவ்வாறாயினும் இறந்தகாலத்தில் நடந்தவை பற்றி பேசி அர்த்தமில்லை.

எதிர்காலத்தில் சிறந்த வேலைத்திட்டத்துடன், நாம் பயணிக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல்வாதிகளுக்கு கையளிக்க முடியாது. ஐ.சி.சியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் அது இயங்குகிறது”  என்றார்.

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் பார்க்காது தண்டிக்கப்படுவர்”  – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் பார்க்காது தண்டிக்கப்படுவர்”  என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று (05.12.2020) பாராளுமன்றில், நிரோஷன் பெர்ணான்டோவின் உரைக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிரணியினருக்கு தற்போது இருக்கும் அக்கறை , அன்றே இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. எதிரணியை சேர்ந்தவர்கள் தான் கொழும்பு பேராயரை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இதனை எதிரணியினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எமது அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி தற்போது நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய அனைவரும் எந்தவொரு வேறுபாடும் இன்று தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது எமது பொறுப்பாகும். இதற்கு எதிரணியினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

பேராயரை விமர்சித்தவர்களை கூட, எதிரணியினர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவந்துள்ளார்கள். நாம் அவ்வாறு செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் எமது அரசாங்கத்தை சந்தேகம் கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை விளையாட்டுத் துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் விளையாட்டு துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05.12.2020) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது, “ விளையாட்டு அமைப்புகளின் நிதிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மட்டுமே அரசாங்கம் ஈடுபடும். இருப்பினும் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அரசியல் தலையீடு இல்லாமல் செயற்படும்.

இதேவேளை விளையாட்டு தொடர்பான புதிய சட்டம் தேவை , புதிய விளையாட்டுச் சட்டத்தை உருவாக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.

அத்தோடு லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடருக்கு விளையாட்டு அமைச்சினால் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபையினால் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“கடந்த ஆட்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது” என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (04.12.2020) வெள்ளிக்கிழமை, கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,

கடந்த ஆட்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க தவறிவிட்டது. இன்று அது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்று வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 20 வீதமாகும். இது தற்காலிக அரசியல் நியமனங்களின் மூலமாக தீர்க்க முடியாது.  எனவே நீண்டகால தீர்வுகள் இதன்போது கண்டறியப்பட வேண்டும். அதில் சர்வதேச நிறுவனங்களை அனுமதித்தாலும் கூட தேசிய ரீதியிலான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதனையே அரசாங்கம் இன்று முன்னெடுத்து வருகின்றது.

இப்போது முதலீடுகள் வருகின்றது, ஹம்பாந்தோட்டையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் இரண்டாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனவே சிறு மற்று  மத்திய தொழிலாளர்களை பலப்படுத்துவதே எமது நோக்கமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.