அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரதேவி வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

உத்தேச காற்றாலை மின் திட்டம் மன்னாரில் உள்ள பறவைகள் வழித்தடத்தை தடை செய்யக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

 

காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எச்சரித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் பகுதியில் பறவைகள் வழித்தடம் உள்ளதா என தெரியவில்லை. விடயம் தொடர்பில் பேராசிரியருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் இடத்தை மாற்ற வேண்டும்,.இதன் மூலம் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காப்பாற்றப்படும் என சஜித் பிரேமதாச முன்னர் தெரிவித்திருந்தார்.

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை விரைவில் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

 

இந்நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத நிலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சனத்தொகை அதிகரிப்பால் மக்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளின்போது யானைகளின் வாழ்விடங்கள், அவை பயணிக்கும் பாதைகள் பாதிக்கப்படுகின்றன. இதுவே யானை – மனித மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

 

அமைச்சு என்ற ரீதியில் இந்த யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யானை-மனித மோதலுக்கான குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை காண அமைச்சு பல செயலமர்வுகளை நடத்தியுள்ளது.

 

அதன்படி, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரு கொள்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்தக் கொள்கையை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் மூலம் யானை மனித மோதலைத் தீர்க்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

எதிர்கால சந்ததியினருக்காக வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதுடன், வன வளங்களை செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த சுற்றுலாத்துறையின் மூலம் அந்தப் பகுதி மக்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும், பாரிய அளவிலான நிர்மானங்கள் இல்லாமல் சூழல்நேய சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான அந்நியச் செலாவணியைப் பெற வன வளங்களைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் – உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைகிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் !

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்த போதும் ஜீவன் தொண்டமான் அமைச்சுப் பதவியை வகித்திருந்தார். குறிப்பாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தை பெற்றுத் தருவதாக குறித்த பாராளுமன்ற தேர்தலில் ஜீவன் தொண்டமான் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் இன்று வரை அந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளுக்கான எந்த தீர்வையும் ஜீவன் தொண்டமானாலும் – அவர் சார்ந்திருந்த அரசாங்கங்களாலும் வழங்க முடியவில்லை.

இதே நேரம்நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

“கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது” – சுகாதாரதுறை அமைச்சர் உறுதி !

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுமெனவும் எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது எனவும், சுகாதாரதுறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று(07.01.2021)நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோ புள்ளேயிடம், வைரஸ் தொடர்பான விசேடநிபுணர்கள் குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில், கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அறிக்கை தற்போது சடலங்கள் தகனம் செய்யப்படுமா அல்லது அடக்கம் செய்யப்படுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, மத ரீதியான அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நடைமுறையை மாற்றப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.

இதே நேரத்தில் முஸ்லீம்கள் தங்களுடைய உறவினர்களின் ஜனசாக்களை எரிக்க வேண்டாம் என இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.