போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து விட்டு ஹெகலியவுக்கு கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளார்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் பிமல் !
கெஹலியவுக்கு ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்னாயக்க கிளிநொச்சி ரயில் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைந்த இந்த விஜயத்தில் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்சமாக 5 இலட்சம், 7 இலட்சம், இறுதியாக 10 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டது. ஆனால், கடந்த கால அமைச்சர்கள் பல இலட்சங்களை அவர்களது வீடுகளுக்காக நட்டஈடாக பெற்றுக்கொண்டுள்ளனர். உதாரணமாக கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈட்டுத் தொகையை வைத்து இங்கு கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என்றார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் எமது மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டு, சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கியதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்