அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

“ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.” – வாசுதேவ நாணயக்கார

“ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.” என வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.

சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி வகிக்க முடியாது. அவர் நியமிக்கப்பட்டால் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வந்தமையே எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.” – ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் வாசுதேவ !

“அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை எனவும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விமல் வீரவன்ஸவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கியமை தவறானது என்று இன்று ஒட்டுமொத்த நாடும் கூறிவருகிறது.

இது மக்கள் ஆணைக்கும் எதிரான செயற்பாடாகும். இந்த நிலையில், நானும் இனிமேல் அமைச்சு பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

நான் இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்ல மாட்டேன். எனக்கு இனிமேல் அமைச்சருக்கான எந்தவொரு வரப்பிரசாதங்களும் தேவையில்லை.

அமைச்சருக்கான சம்பளம் கூட எனக்குத் தேவையில்லை. அடுத்த 3 வருடங்களுக்கு நான் இவ்வாறுதான் செயற்படுவேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், நாம் எதிரணியில் இணையவும் மாட்டோம். எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முற்பட்டும், அந்த முயற்சிகள் கைக்கூடவில்லை.

ஜனாதிபதியும் எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே இன்று உள்ளார். நாட்டு மக்கள் இன்று அதிருப்தியில் உள்ளார்கள். இதனை சுட்டிக்காட்டியே நாம் கருத்துக்களை வெளியிடுகிறோம்.

ஆனால், எமது ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயற்படுவதாலேயே இந்த விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கும்போதே நாம் ஜனாதிபதியுடன் ஒப்பந்தமொன்றை செய்துக் கொண்டிருந்தோம்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர் ஒருவர் நாடாளுமன்றுக்கு வரக்கூடாது என்று வலியுறுத்தினோம். எனினும், எமது ஒப்பந்தம் மீறப்பட்டது.

இதுவும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. அரசாங்கம் செய்தமை தவறு என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

“நீதிமன்ற தீர்ப்புக்களை தமிழ், சிங்கள மொழியில் வழங்க நடவடிக்கை எடுங்கள்.” – அமைச்சர் வாசுதேவ

சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் நடைபெறுமானால் சிறந்ததென்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறையின் திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலம் பேசிய அவர்,

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மேற்கொண்டிருந்தாலும் நாட்டில் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக நீதித் துறையில் பல்வேறு செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்குகள் வருடக்கணக்கில் தொடர்கின்ற நிலை காணப்படுகிறது. நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் நீதியின் பக்கம் சார்பாக செயற்பட்டால் அது சிறந்ததாகும்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உட்பட சாதாரண மக்களின் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நீதிமன்றங்களில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலும் ஆங்கில மொழிகளில் தீர்ப்புகளும் விசாரணைகளும் இடம்பெறுவதால் சாதாரண மக்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படுகின்றது.

உச்சநீதிமன்றத்தில் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே விசாரணைகளும் தீர்ப்புகளும் இடம்பெற்றுவருகின்றன, அவ்வாறு சட்டங்கள் உள்ளதோ என்று  எமக்குத் தெரியாது என்றார்.

“உயர் கல்வியில் அதிக முக்கியம் பெறும் ஆங்கிலத்தால் சுதேசிய மொழிகளுக்கு அச்சுறுத்தல்.” – அமைச்சர் வாசுதேவ

பல உயர் கல்வி பாடநெறிகள் மற்றும் விசேட பட்டப்படிப்புகள் முழுமையாக தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரமே இருப்பது இலங்கையின் உரிமையையும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் தேசிய மொழிகளுக்கும் அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனால், உயர் கல்வியை ஆங்கில மொழியில் மாத்திரம் வரையறுக்கப்பட கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கலாநிதி ஈ.எம்.ரத்னபால எழுதிய நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலம் பேசிய அவர்,

சர்வதேச நுழைவுகளுக்கு ஆங்கில மொழி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அனைத்து விடயங்கள் காரணமாக எமது மொழிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உயிர் மொழியாக எமது மொழிகளை பாதுகாக்க வேண்டும். எமது மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை புறந்தள்ளி விட்டு, மற்றுமொரு மொழியை அடிப்படையாக கொண்டு மாத்திரம் செயற்படுவதன் மூலம் எமது மொழிகள் அழிவுக்கு உள்ளாகும்.

ஆபிரிக்காவில் சில பிரதான மொழிகளுக்கு ஏற்பட்ட தலைவிதியை சிங்கள மொழியும் அனுபவிக்க நேரிடும். உலகில் பல நாடுகள் உயர் கல்வியை வழங்கும் போது தமது மொழியின் அடையாளங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவது போல் இலங்கையும் உயர் கல்வியை வடிவமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

“கடனுதவி பெற்றால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை.” – வாசுதேவ எச்சரிக்கை !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறச் சென்றால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்திலிருந்து கடன் வாங்குவது ஏழு தலைமுறைகளுக்கு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் போது கடைசி வழி என்றும், அங்கு செல்லும் எந்த நாடும் உதவியற்றது என்றும், பின்னர் நடக்கும் அனைத்தும் அதன் கொள்கையின்படி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரச சொத்துக்களையும் தனியார் மயமாக்குதல், நாட்டின் நலனில் வெட்டுகள் மற்றும் ரூபாவின் மிதப்பு போன்ற பல கடுமையான நிபந்தனைகளை அவர்கள் முன்வைப்பதாக அவர் மேலும் கூறினார்.

“அரசின் தவறான தீர்மானங்களுக்கு துணை போக முடியாது.” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால், அதற்காகத் தவறான தீர்மானங்களுக்குத் துணைபோகவும் முடியாது.” என  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசு தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.

யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும். இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்துக்கும், மின்சாரத்துறை அமைச்சுக்கும் இடையில் சாதாரண ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையைப் பிற நாட்டின் தனியார் நிறுவனத்துக்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையைத் தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம்.

யுகதனவி விவகாரத்துக்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.” என அவர் கூறியுள்ளார்.

“வடக்கில் சீனாவும் இந்தியாவும் வருவது தமிழ் மக்களுக்கு நன்மையானதே .” – வாசுதேவ நாணயக்கார பூரிப்பு !

“வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.” என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிமாவோ பண்டார நாயக்கா காலப்பகுதியில் இருந்து இலங்கையானது சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது எமது நடுநிலையாக செயற்பட்டு இருந்தது. தற்போதும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுக்ன்றது. அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை. எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவும்வில்லை. இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம். இதனால் எமது மக்களுக்கும் நன்மைகள் ஏற்படும். வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.

காஸ் சிலிண்டர் பிரச்சனை தொடர்பில் நாம் பேசியிருக்கின்றோம். தேவையான காஸ் சிலிண்டர்கள் இருக்கின்ற போதும் அதில் பிரச்சனைகள் உள்ளன. அதனை பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்க அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

யுகதனவி ஒப்பந்த விவகாரம் தொடர்பில் நாம் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அதற்கு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கவுள்ளது. நாம் கூறியது போன்றே அது வரும் என நம்புகின்றோம். இந்த விடயத்தில் இரண்டு, மூன்று அணிகளாக செயற்படுவதைப் பார்க்கின்றோம். இருப்பினும் அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் நாம் மீண்டும் கலந்துரையாடவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

“இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் இரு தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஆராய்வது அவசியமாகும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் சபை நடுநிலைத்தன்மையைப் பேணவில்லை” என நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் இலங்கை நட்புறவுடன் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகப் போர் முடிவடைந்த காலத்தில் இருந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உள்ள பொறிமுறையின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையைக் கையாள வகுக்கப்பட்ட திட்டங்களை 2015 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசு செயற்படுத்தவில்லை.

மனித உரிமைகள் சபை விவகாரம் கூட அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர அரச தலைவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இணக்கம் தெரிவித்தமை தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும்.

30/1 தீர்மானத்தில் உள்ளடக்கபட்ட விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானது. 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரின் போது 30/1 தீர்மானத்திலிருந்து எமது அரசு உத்தியோகப்பூர்வமாக விலகியது.

இந்தத் தீர்மானத்தை அரசு சுயாதீனமான முறையில் எடுத்தது. பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர்  வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கையின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இம்முறை திருத்தியமைக்கப்படும். உள்ளகப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்று ஒரு தரப்பினர் இலாபமடைகின்றார்கள். இதனால் சாதாரண தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் பெறவில்லை” – என்றார்.