அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம்.” – பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர்!

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பழைய சட்டத்தில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டே இந்தப் புதியச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க தான், இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

 

இது தவறான கருத்தாகும். நீண்ட நாட்களாக நடைமுறையில் இருக்கும் சட்டமூலம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன.

 

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டுதான் நாம் இந்த புதிய இலஞ்ச- ஊழல் ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம்.

 

ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் வகையில், ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பதவிகள் அனைத்தும், அரசமைப்பு பேரவைக்கு இணங்க தான் நியமிக்கப்படும்.

 

ஓய்வுபெற்ற நீதிபதிகள், பொலிஸாரை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதால், சட்டமூலத்தின் ஊடாக எதிர்ப்பார்த்த பலன் கிடைக்காது என்பதை நாம் அனுபவங்கள் ஊடாக கண்டுள்ளோம்.

 

எனவே, 62 வயதுக்கு மேற்படாத, குறித்த விடயதானத்தில் அனுபவமும் நிபுணத்துவம் வாய்ந்த நபர்களைதான் ஆணைக்குழுவுக்கு நியமிக்கவுள்ளோம்.

 

மேலும், ஜனாதிபதி முதல் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள், மாகாண முதல்வர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் தங்களின் சொத்துப் பட்டியலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சரத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலை வெளியிட வேண்டும். ஓய்வு பெற்றாலும், இரண்டு வருடங்களுக்கு சொத்துக்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.

 

அதேநேரம், அரச திணைக்களங்களில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

 

இந்தக் குற்றத்திற்கு எதிராகவும் இந்த புதிய சட்டமூலத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் அரசியல் கைதிகளின் வேதனை எனக்கு தெரியும்.அவர்களின் கண்ணீரில் தமிழ் அரசியல்வாதிகள் நாடகம் நடத்துகின்றனர்.” – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச

“தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.” என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

தமிழ் அரசியல்வாதிகளின் இத்தகைய செயல்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் பாதிக்கும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர்,

“தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் 29 தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் ஊடாகவும், ஏனையவர்களை சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தின் ஊடாகவும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வேதனைகள் எமக்கு நன்கு தெரியும், அவர்களின் கண்ணீரில் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றனர், இது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் தாமதப்படுத்தலாம்.” என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.