அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்

வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் விஜித ஹேரத்

நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர்.

 

இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கும் பாரிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் அதனை செய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம்.

 

இந்த விவகாரத்தில் நபர்கள் தொடர்பான தராதரம் இன்றி நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அது முறையான வழிமுறைக்கமைய முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வற் வரியில் மோசடி செய்தமைக்காக பிரபல வர்த்தகர் அர்ஜூன் அலோசியஸூக்கு 6 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும். அந்த அமைச்சரவையில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அந்த புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், அந்தந்த துறைக்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் 25 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தமது கட்சியில் உள்ளனர்.இதனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரே இடம்பெறுகிறார்.இதனால், அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உறுப்பினரான நிபுண ஆரச்சியை மற்றும் ஒரு அமைச்சராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சட்டப் பிரச்சினை காணப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் குறைந்தளவு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிறைவான சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும்.

எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

புதிய அரசு ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது – அமைச்சர் விஜித ஹேரத்

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தொிவித்துள்ளாா்.

அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னா் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும்.

கடவுச்சீட்டினை வழங்குவதே இந்த அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,

பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன். அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் காணப்படுகின்றது.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும்.

சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன். எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது.

அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள்.

இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கினார்கள்” என மேலும் தொிவித்தாா்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்கள விடயங்களில் அரசு தலையிடாது – அமைச்சர் விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பொலிஸாரின் மீதான மக்களின் நம்பிக்கை குன்றியுள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தார்.

 

அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில் பொலிஸாரின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பது எமது கடமையாகும்.

 

இந்த முயற்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களும் பெரும் பொறுப்பு வகிக்கின்றனர்.

 

குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது, அரசியல் செல்வாக்கு இன்றி பொலிஸ் திணைக்களம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் வலியுறுத்தினார்.